வெள்ளி, 14 மே, 2010

ஜெனரலும் ஜே.ஆரும்


இராணுவ தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியை அமைத்திராவிட்டால் கடந்த பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனைக்கு (ஜே.வி.பி.) ஏற்பட்டிருக்கக் கூடிய கதி என்னவாக இருந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவான 7 பேரில் ஐவர் ஜே.வி.பி.உறுப்பினர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களது பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை நிறுத்திய எதிரணிக் கட்சிகளின் செயலினால் இறுதியில் சொற்ப பயனையாவது அடையக் கூடிய வாய்ப்பு ஜே.வி.பி.க்குத்தான் ஏற்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஜெனரல் பொன்சேகா ஜே.வி.பி.க்கு அனுகூலமாக இருப்பாரா அல்லது ஒரு பிரச்சினையாகி விடுவரா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவர் பாராளுமன்றத்திலும் சரி ஊடகவியலாளர் மகாநாடுகளிலும் சரி தன்னெண்ணப்படியே பேசுகிறார். தன்னால் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் தன்னுடன் அணிசேர்ந்து நிற்கும் ஜே.வி.பி.யினருக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ இல்லையோ என்பதைப் பற்றி ஜெனரல் பொன்சேகா அக்கறைப்படுபவராகத் தெரியவில்லை.
கடந்தவாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் மகாநாடொன்றைக் கூட்டிய ஜெனரல் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவை வானளாவப் புகழ்ந்தார். ஜெயவர்தனவினால் எழுதப்பட்ட நூலொன்றை தற்போது வாசித்து வருவதாகவும் அவரே இலங்கை இதுவரையில் கண்ட அரசாங்கத் தலைவர்களில் மிகவும் சிறந்தவர் என்றும் ஜெனரல் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரங்களை நாட்டின் நலன்களுக்காகப் பயன்படுத்திய ஒரேயொரு ஜனாதிபதி ஜெயவர்தன தான் என்றும் கூட அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஜெயவர்தனவை முன்மாதிரியான அரசியல் தலைவர் என்று முன்னாள் இராணுவத் தளபதி புகழ்ந்துரைத்த போது அருகில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத்தும் சுனில் ஹந்துன்நெத்தியும் அமர்ந்திருந்தனர். ஜெயவர்தனவைப் பற்றிய ஜே.வி.பி.யினரின் கருத்துகள் எத்தகையவை என்பதை ஜெனரல் பொன்சேகா அறியாதவராக இருந்திருக்க முடியாது. ஜெயவர்தனவைப் பற்றி ஜெனரல் கூறிக்கொண்டிருந்த போது ஜே.வி.பி.முக்கியஸ்தர்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. முன்னாள் இராணுவத் தளபதியின் அந்தக் கருத்துகள் ஜே.வி.பி.க்கு ஏற்புடையவையல்ல என்று கூட பகிரங்கமாக கூறுவதற்கும் அன்றைய தினம் விஜித ஹேரத்தோ அல்லது சுனில் ஹந்துன்நெத்தியோ முன்வரவில்லை. ஜெனரலின் தயவில் அரசியல் நடத்தப் புறப்பட்டிருப்பதால் அசௌகரியங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு.
ஜெயவர்தன இந்த நாட்டை எவ்வாறு ஆட்சி செய்தார் என்பதை இங்கு நாம் விளங்கக்கூற வேண்டியதில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஜெயவர்தனவின் அரசியல் அணுகுமுறைகளே என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் ஆட்சி நிருவாகத்தில் எதேச்சாதிகாரப்போக்குத் தலைதூக்குவதற்கு வழிவகுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவரும் ஜெயவர்தனவே. தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆணைப் பெண்ணாகவோ பெண்ணை ஆணாகவோ மாற்றமுடியாதே தவிர, மற்றும்படி சகல காரியங்களையும் சாதிக்க முடியுமென்று மார்தட்டிய ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் போக்கிற்கு வழிகாட்டிக் கொடுத்தார். தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களைப் பார்த்து "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று கர்வத்தனமாகப் பேசிய ஜெயவர்தன இனநெருக்கடி தொடர்பில் கையாண்ட பொறுப்பற்ற அணுகுமுறைகளே இது நாள்வரை தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அவலங்களுக்குகெல்லாம் காரணம்.
இத்தகையதொரு படுமோசமான பிற்போக்குவாதியை சிறந்த ஜனாதிபதி என்று வர்ணித்திருப்பதன் மூலமாக ஜெனரல் பொன்சேகா தனது குணாதியங்களை மேலும் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். ஒருவர் பின்பற்றவிரும்புகின்ற தலைவரைப் பார்த்து அவரின் இயல்புகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு,கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கே பெரும்பான்மை வாக்குகளை அளித்தார்கள். ஜெயவர்தனவைப் பற்றிய தனது கருத்துகளை ஜெனரல் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் தமிழ் மக்கள் நிச்சயமாக அவருக்கு வாக்களிக்க முன்வந்திருக்கமாட்டார்கள்.
நன்றி : தினக்குரல்

கருத்துகள் இல்லை: