வீ.ஆனந்தசங்கரி உதயனுக்கு வழங்கிய செவ்வி இது.
கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம்?
பதில்: நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. ஒரு காலத்தில் நாடாளுமன்றில் கௌரவமான கனவான்கள் அங்கத்துவம் வகித்தார்கள். அத்தகையவர்களோடு சேர்ந்திருந்தது பெருமையாக இருந்தது. ஆனால் இன்று அப்பிடியல்ல சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; கொலைகளுடன் தொடர்புடையவர்கள், தூள் ("குடு") வியாபாரிகள் போன்ற சமூக விரோதிகள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கிறார்கள். நான் பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் பண உதவியோ, மதுபானங்களோ, யாருக்கும் கொடுத்தது கிடையாது. எனது சொந்தப்பணத்திலே தேர்தல் பிரசாரங்களினை மேற்கொண்டேன். ஆனால் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்தவர்கள் தோற்றுப் போன வரலாறும் இருக்கிறது. தேர்தல் காலமென்றபடியால் லொறிகளில் சைக்கிள்களை ஏற்றி வந்து மக்களுக்கு அன்பளிப்புச் செய்கிறார்கள். தைப்பதற்குக் கிழிந்த கந்தையைத் தவிர எதுவுமில்லாதவர்களுக்கு "தையல் மெஷின்' கொடுக்கிறார்கள். இந்நிலையில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் நம்மத்தியில் உள்ளார்கள். இன்றைய சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி தைரியமாகப் பேசுபவர்கள் எவருமில்லை. பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு தமிழ் மக்களின் நேர்மையான பிரதிநிதியொருவர் தெரிவு செய்யப்படவேண்டும்.அந்தத்தகுதி எனக்கிருக்கிறது. ஆதலால் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
கேள்வி: நீங்கள் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியில் அரசியல் அனுபவம் நிறையவே இருக்கிறது. இந்நிலையில் இன்றைய தேர்தல் கள நிலைமைகள் எவ்வாறிருக்கிறது?
பதில்: தேர்தல் களநிலைமை எவ்வாறிருக்கிற தென்பதைவிட இத்தகைய தலை கீழான நிலைக்கு யார் காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.தமிழ்க் கட்சிகளில் எந்தக் கட்சிக்கும் இரண்டு பேருக்குமேலே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக் கூடாது என்ற சதித்திட்டத்திற்கு சிலர் தம்மையறியாமல் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். வந்தவர்கள், நின்றவர்கள் எல்லோரும் வேட்பாளர்கள். அவர்களில் சிலர் எதற்கு வாக்குக் கேட்கிறோம் என்று தெரியாமல் கேட்கிறார்கள். இத்தகைய கொள்கையற்ற வேட்பாளர்களுக்கு தேர்தலில் தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். எது எப்படியிருப்பினும் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்கத்தவறின் வரலாறு காணாத அபத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
கேள்வி: எதுவுமே தெரியாது, ஏன் போட்டியிடுகிறோம் என்று கூட தெரியாமல் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கூறுகிறீர்களே! புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் எல்லாம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்களே?
பதில்: இலக்கியவாதிகள், புத்திஜீவிகள் இவர்களெல்லாம் யார்? எமது மண்ணிலே எத்தனையோ இடர்கள், அவலங்கள் இடம்பெற்றன.மாணவர்கள், கல்விமான்கள் இளைஞர், யுவதிகள் எனப் பல்வேறு தரப்பினர் கொலைசெய்யப்பட்டும், கடத்தப்பட்டபோதும் இந்தப் புத்திஜீவிகள், இலக்கியகர்த்தாக்கள் எல்லாம் எங்கு போய் நின்றார்கள். மக்களின் அவலங்களைக் கண்டு கண்டிக்காது மௌனம் சாதித்துவிட்டு இப்போது வேட்பாளர்களாக எம் மக்கள் முன் வந்து நின்று வாக்குக் கேட்கிறார்கள்.இந்த வேட்பாளர்கள் யாரோ ஒருவரிடத்தில் சலுகைகளைப் பெற்று ஏவலாளராகவே செயற்படுகின்றனர். இத்தகைய நபர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொள்ளும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளில் இருந்து விலகிவிட்டதாக பரவலாக கதை அடிபடுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தேசியம், சுயநிர்ணயம், மரபுவழித் தாயகம் இவையெல்லாம் உளுத்துப்போன சுலோகங்கள். எந்தத் தமிழனும் இதற்கு மாறானவன் அல்ல. இருப்பினும் கூட்டமைப்பினர் இந்தச் சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பு எம்.பிமார் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலாப்பயணங்களை மேற்கொண்டுவிட்டு தமது மக்களைப்பற்றி சிறிதளவேனினும் சிந்திக்காது இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் மீண்டும் அதே கோஷங்களுடன் மக்களிடம் வாக்குக் கேட்டுவந்துள்ளார்கள்.காலத்துக்குக் காலம் பசப்பு வார்த்தைகளைக் கூறி இனியும் எம் மக்களை ஏமாற்றமுடியாது. அவர்கள் ஏமாறவும் மாட்டார்கள். உரிய நேரத்தில் உரியவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கத் தவறியமையால் பல்லாயிரக் கணக்கான மக்களின் சொத்தழிவுகளுக்கும், உயிர் அழிவுகளுக்கும் முழுப்பொறுப்பை யும் கூட்டமைப்பே பொறுப்பு ஏற்கவேண்டும்.
கேள்வி: கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கு பிரசாரத்துக்கு சென்றிருக்றீர்கள்? அங்குள்ள மக்களின் நிலை எவ்வாறுள்ளது?
பதில்: மிகவும் பரிதாபமான முறையில் அங்குள்ள மக்கள் தமது வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். நண்பர்கள் பலரைக் காணவில்லை, அங்கவீனர்கள், ஏழைகள் என எமது மக்கள் ஏதிலிகளாக உள்ளனர். மீள்குடியேற்றம் என்பது பெயரளவிலேயே நடைபெறுகிறது. இன்றும் கூட மக்கள் முகாம்களிலும், தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கி உள்ளார்கள். கறல்கட்டி உக்கிப்போன சைக்கிள்களைத்தான் அங்கு வழங்குகிறார்கள். அதைக்கூட மக்கள் விழுந்தடித்து வாங்குகிறார்கள். உக்கிப்போன அந்தச் சைக்கிள்களை வழங்குவதில் கூட பெருமை தேடிக் கொள்ள எமது மண்ணில் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
கேள்வி: வன்னி மக்களின் இத்தகைய அவலங்களை நீக்க நீங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?
பதில்: முதற் கட்டமாக வன்னியுத்தத்தில் இறந்தவர்கள் யார்? இருப்பவர்கள் யார்? என்ற விவரங்களைத் திரட்டுவேன். இழந்து போன உடைமைகளுக்கு முழு நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொடுப்பது, தடுப்பு முகாமில் உள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்தல், காணாமற் போனவர்களின் விவரங்களை தேடிக்கண்டுபிடிப்பது, வருடக் கணக்கில் கல்வியை இழந்து நிற்கின்றவர்களின் வாழ்வை மேம்படுத்துவது, அங்கவீனர்களின் குறைபாடுகளைத் தீர்க்க உரிய வசதிகளை மேற்கொள்ளல், மக்களின் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பேன்; எடுக்கவுள்ளோம். ஆளுநர் நியமனத்தை உடனடியாக நிராகரித்தேன்
கேள்வி: உங்களுக்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வடமாகாண ஆளுநர் பதவியை வழங்கத் தீர்மானித்திருந்தாரே அதுபற்றி?
பதில்: வடமாகாண ஆளுநர் பதவிக்கு என்னைத்தெரிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு சொல்லியிருந்தார். நான் அதனை உடனடியாக நிராகரித்தேன். இந்த ஆளுநர் பதவியைப் நான் பெற்றுக்கொள்வதால் அது தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தவகையில் உதவும் என்று ஒரு கேள்வியையும் கேட்டேன். அத்துடன் ஜாதிக ஹெல உறுமய எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தருவதாகக் கூறியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் என்னுடன் தொடர்புகொண்டு எனக்கு எம்.பி.பதவியும், அமைச்சுப் பதவியும் தருவதாகக் கேட்டிருந்தார். இவற்றையெல்லாம் நிராகரித்தேன். இத்தகைய பதவிகளை ஏற்றுக்கொள்வதால் அது தமிழர்களுடைய பிரச்சினைக்குத் எந்தவகையில் உதவும் என்று யோசித்தேன்; ஆராய்ந்தேன்; அதனால் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று முடிவுசெய்து அந்தப் பதவிகள் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டேன்!
கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் எதிர்கால அரசியல் நகர்வுகள் எப்படியிருக்கும்?
பதில்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்திருந்தேன். அதாவது இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை, ஒற்றையாட்சிமுறையை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதான தீர்வாகும். அதாவது இந்தியப் பாணியிலானது. அது சமஷ்டி முறையென்றும், ஒற்றையாட்சி முறையென்றும் விவரிக்கப்படுவதில்லை. இலங்கைப் பிரச்சினைகளில் அக்கறை கொண்டுள்ள தமிழ் நாட்டில் வாழும் ஆறு கோடி மக்களுக்கும் கூட ஏற்புடையதாக இருக்கும். நம் நாட்டு அரச சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் செயற்படும் பல தலைவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் கத்தோலிக்க உயர்பீடத்தினர், பௌத்த பீடாதிபதிகள், கல்விமான்கள், தமிழ்சிங்கள புத்திஜீவிகள் அனேகரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வாகும். இத்தகைய அரசியல் தீர்வு அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அமையவேண்டும் என்று எதிர்காலத்தில் குரல் கொடுப்போம்.
கேள்வி: தற்போதைய யாழ்ப்பாண அரசியல் நிலைவரங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்...?
பதில்: நாடு பற்றி எரிகிறது. நாடு எதிர்நோக்கும் ஆபத்துகளை உணராமல், சிந்திக்காமல் பதவிகளுக்காகவும், அற்ப சலுகைகளுக்காவும் போட்டியிடுகின்ற சுயேச்சைக் குழுக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த அன்பர்களே! உங்களை மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற எண்ணத்தைக் கைவிடுவது பற்றி யோசியுங்கள். எம் மக்களை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றுங்கள். இன்னும் காலம் கடந்து விடவில்லை. அதில் இருந்து வாபஸ் பெறுங்கள்.
இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து இனத்தைக் காப்பாற்ற ஒன்றுபட்டு செயற்பட வருமாறும் அன்புடன் அழைக்கிறேன்.
செவ்வி கண்டவர்:கவிநேசன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக