ஞாயிறு, 28 மார்ச், 2010

் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்'.. ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரெட்டி சகோதரர்கள், தற்போது, தங்கள் சுரங்கம் அமைந்துள்ள இடங்களுக்கு கூட ஹெலிகாப்டரில் தான் செல்கின்றனர்.

பெல்லாரி :கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத சுரங்கத் தொழிலால், 4,500 எக்டேர் பரப்பளவிலான விளைநிலம், பாலைவனமாக மாறிப் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் பெல்லாரி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், சுரங்க மாபியாக்களின் சுரண்டலால் முழுவதும் பாழ் பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் இம்மாநில எல்லையில் உள்ள ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்களில் ஏராளமான கனிமச் சுரங்கங்கள் உள் ளன. இங்கு எடுக்கப்படும் மணல்களில் இரும்புத் தாதுப் பொருட்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி நிலவுகிறது.இந்த பகுதியில் தான் கர்நாடக அமைச்சர்களும், சுரங்கத் தொழில் அதிபர்களுமான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி ஆகியோரின் சுரங்கத் தொழில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் விளை நிலங்களில், சுரங்கத் தொழில் ஏகோபித்த செல்வாக்குடன் நடக்கிறது. ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு, குறுக்கு வழியில் இங்குள்ள கனிம வளம் சுரண்டப் பட்டு வருகிறது.


கடந்த 2008ல் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதற்கான ஏற்பாட்டுக்காக, அங்கு பெருமளவில் இரும்புத் தாதுப் பொருட்கள் தேவைப்பட்டன. இதனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இரும்புத் தாதுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.டன்னுக்கு 100 ரூபாய் என்ற அளவில் இருந்த இதன் விலை, 5,000 ரூபாயாக அதிகரித்தது. இதனால், சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட மாபியாக்கள், டன் கணக்கில் இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்து, கொள்ளை லாபம் பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக, இந்த சுரங்கத் தொழில், உச்சகட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது.ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத சுரங்கத் தொழிலால், இயற்கை வளம் மிக்க இப்பகுதியின் சுற்றுச்சூழல், மிகப் பெரிய அளவில் மாசடைந்து விட்டதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


விளை நிலங்கள் பாழ்:இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:ரெட்டி சகோதரர்களின் சுரங்கத் தொழிலால், 120 மலைக் குன்றுகள், ஐந்து லட்சம் மரங்கள், 2,500 எக்டேர் வனம், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாழ்பட்டு போய் விட்டன. மேலும், நான்கு நீரோடைகள், 17 ஏரிகள், 28 நீர்க்குட்டைகளும் அழிக்கப்பட்டு விட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடந்து வரும் சுரங்கத் தொழிலுக்கு, இந்த இயற்கை வளங்களை பலி கொடுக்க வேண்டியதாகி விட்டது. சுரங்கங்களைச் சுற்றி அமைந்துள்ள 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான விளைநிலம், வறட்சி பகுதியாகி விட்டது.இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தொழிற்சாலையாக மாறிய வனம்:சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.ஆர்.ஹிராமத் கூறியதாவது:சுரங்கத் தொழிலுக்காக பாறைகள், தொடர்ந்து வெடி வைத்து தகர்க்கப்படுகின்றன. இதனால், பூமிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் நிலையற்ற தன்மையும் உருவாகிறது. அந்த பகுதியில் மரம், செடி, கொடிகள் அழிந்து போய் விட்டன. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு காலத்தில் பசுமையாக காட்சியளித்த அந்த பகுதி, தற்போது ஜெலட்டின் குச்சிகள் ஏற்படுத்தும் தூசியால், செம்மண் வடிவில் வறண்டு போய் காணப்படுகிறது. சுரங்கத் தொழிலுக்காக ஈடுபடுத்தப்படும் கனரக இயந்திரங்களால், அமைதியான அந்த பகுதி, தற்போது தொழிற்சாலையாகவே மாறிப் போய்விட்டது.இவ்வாறு ஹிராமத் கூறினார்.


தினமும் 5,000 லாரியில் ஏற்றுமதி:ஒரு லாரி இரும்புத் தாது விலை 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் 5,000 லாரிகளில் இரும்புத் தாது மற்றும் இதர கனிம வளங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சுரங்கத் தொழிலில் பெரிய அளவில் ஈடுபடுவோருக்கு, இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் அரசுக்கு ராயல்டியாக வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே செலுத்துகின்றனர்.


மோசடி எப்படி?சட்டவிரோத சுரங்கத் தொழில், மிகவும் நேர்த்தியாக நடக்கிறது. முதலில், சுரங்கத் தொழில் நடத்த அனுமதியில்லாத வனப் பகுதியில், மணலை தோண்டி எடுக்கின்றனர். பின்னர், ஏற்கனவே செயல்படும் சுரங்கங்களின் பெயருக்கு, அவற்றின் உரிமையை மாற்றி, தோண்டி எடுத்த தாதுப் பொருட்களை, வாகனங்களில் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியில் கொண்டு வந்து விடுகின்றனர்.இதன் பின், பெரிய வர்த்தகர்களிடம் இவற்றை ஒரு டன் 200 ரூபாய் என்ற அளவுக்கு விற்று விடுகின்றனர். ஆனால், இதே தாதுப் பொருட்கள் மூலம் அந்த பெரிய வர்த்தகர்கள், ஒரு டன்னுக்கு 1,800 ரூபாய் வரை வருமானம் பார்த்து விடுகின்றனர்.


இதுகுறித்து கர்நாடகா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த புத்தனைய்யா என்பவர் கூறுகையில், 'சண்டூர் என்ற ஒரு பகுதியில் மட்டும் 80 ஆயிரம் டன் இரும்புத் தாதுப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. உலகின் எந்த ஒரு பகுதியிலும், இத்தனை பெரிய அளவுக்கு இரும்புத் தாது பொருட்கள் எடுக்கப்படுவது இல்லை' என்றார்.சட்ட விரோத சுரங்கத் தொழிலை, எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை, சுரங்க மாபியாக்கள் செய்துள் ளனர். தங்களுக்கு சொந்தமான சுரங்கப் பகுதிக்குள், யாரும் எளிதில் நுழைந்து விடாமல் இருப்பதற்காக, ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை அவர்கள் நியமித்துள்ளனர்.


ஆயிரம் கோடி ரூபாய் சொத்து?கடந்தாண்டு, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜனார்த்தன் ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எனக்கும், என் மனைவிக்கும் 115 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. இதை 15 கோடி ரூபாய்க்கு வாங்கினேன். இதுதவிர, நான்கு கோடி ரூபாய்க்கு டீலக்ஸ் பஸ், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள காரும் உள்ளது' என்றார்.சட்டசபையில் ஒருமுறை அவர் கூறுகையில், 'எங்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்; இது தவறு. எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்' என்றார். ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரெட்டி சகோதரர்கள், தற்போது, தங்கள் சுரங்கம் அமைந்துள்ள இடங்களுக்கு கூட ஹெலிகாப்டரில் தான் செல்கின்றனர்.


சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு : சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவால், பெரும் அடி விழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், 'ஆந்திரா - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள சுரங்கங்களில் இருந்து, இரும்புத் தாதுப் பொருட்கள் வெட்டி எடுப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.ஓபுலாபுரம் பகுதி சுரங்க உரிமையாளர்களால், அங்குள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பது குறித்து இந்திய சர்வே அதிகாரிகள், ஏப்ரல் 6ம் தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்' என அறிவித்தது. இதனால், ரெட்டி சகோதரர்கள் வட்டாரம் அதிர்ந்து போயிருப்பதாக, கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: