வியாழன், 1 ஏப்ரல், 2010

வாக்களிக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்தோம் என்பது இங்கு முக்கியமானதாகும். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நான் உங்களை சந்திக்க வந்தேன். எனக்கு வாக்களித்தமைக்காக நான் நன்றி கூறுகின்றேன். தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை விட வாக்களிக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்தோம் என்பது இங்கு முக்கியமானதாகும்.
விடுதலைப் புலிகளின் வழியில் செல்வதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும். நாட்டு மக்கள் எல்லோரையும் நான் ஒரே கண்ணோட்த்திலேயே பார்க்கிறேன்” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார். கூட்டத்துக்கு முதல் ஜனாதிபதி நல்லூர் ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (01) முற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலை மைதானத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் யாழ் நாகவிரைக்கும் சென்ற ஜனாதிபதி அங்கு நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

இப் பிரச்சாரக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியில் நாளுக்கு நாள் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 30 வருடங்களில் நீங்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கி தற்போது நிம்மதியானதும் சுதந்திரமானதுமான வாழ்வை ஆரம்பித்துள்ளீர்கள் எனத் தெரிவித்ததுடன், இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை  ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்.தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், அதற்கான தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் புனர்வாழ்வளித்து, கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இன்றைய தினம் அவர்களில் 164 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடு மென்மேலும் அபிவிருத்தியடைந்து, ஆசியாவின் ஆச்சரியமிக்க ஒரு நாடாக இலங்கையை உருவாக்குவதே தமது எதிர்காலத் திட்டம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துரையப்பா மேற்படி கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில், யாழ்.குடாநாட்டிற்கான ஜனாதிபதியின் வருகை எமது மண்ணுக்கு மகிழ்ச்சியையும், உயர்ச்சியையும் தரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும், நம்பிக்கையும் தமக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் சுதந்திரம் தங்கமென்றால், வடபகுதிக்கானச் சுதந்திரமும் தங்கத்தினால் ஆனதாக இருக்கவேண்டுமென்றும், தமிழ் மக்களின் வாழ்வியல் அரசியல் உரிமைகளையும், வளமான வாழ்க்கையையுமே எமது மக்கள் விரும்புகிறார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் மீள் குடியேற்றப்படும்போது அந்த மக்களுக்கான சகல கட்டுமான வசதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்ததுடன் தென்னிலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் எவ்வாறு இருக்கின்றதோ அதுபோலவே வடபகுதியிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

துரையப்பா விளையாட்டரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியருந்த இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் உரைநிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: