திங்கள், 1 நவம்பர், 2010

லண்டன் ஓட்டலில் வேலை செய்யும் இந்திய எம்.பி.ஏக்கள்!

பிரிட்டனுக்கு சென்று எம்.பி.ஏ. ( MBA ) படித்து முடித்த ஏராளமான இந்திய இளைஞர்கள், படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாமல் ஓட்டலில் வெயிட்டர்களாக வேலை பார்த்துவருகிறர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு வேலை பார்ப்பவர்கள் பிரிட்டனிலேயே படித்த இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.ஏ. மாணவர்களும் அடக்கம்.
கடந்த 2008 ல் உலகையே உலுக்கி எடுத்த பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்திற்கு பிரிட்டனும் தப்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்.இப்பொழுதான் அந்த வீழ்ச்சியின் பாதிப்பிலிருந்து பிரிட்டன் மெல்ல மீண்டு வருகிற நிலையில், பொருளாதார வீழ்ச்சி தாக்கம் மற்றும் இதர காரணங்களால் பிரிட்டனில் இன்னமும் வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 25 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்!
இந்நிலையில் அயல்நாடுகளிலிருந்து வேலை தேடி வருவோர்களுக்கு எதிராக எப்பொழுதுமே கடுமையாக பேசி வரும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் டேமியன் கிரீன், குறைந்த கல்வி தகுதியுடைய வேலைகளை தேடி அயல்நாட்டவர்கள் இங்கிலாந்துக்கு வரவேண்டாம் என்றும், அத்தகைய வேலைகளை செய்ய பிரிட்டனிலேயே பல்லாயிரக்கணக்கானோர் உள்ளதாகவும், மிக உயர் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இங்கு ஓரளவு வேலை வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தங்கள் நாடு குறைந்த கல்வி தகுதியுடையவர்களுக்கு, - கிட்டத்தட்ட கூலியாட்கள் - வேலை அளிக்கும் சந்தை கிடையாது என்றும் அவர் காட்டம் காட்டியுள்ளார்.
அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தங்களது பணி திறமைகளை அதிகரித்துக்கொள்வதோடு, அயல்நாட்டவர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற அதிகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழித்திறனுக்கு ஏற்ப, தங்களது தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆங்கில மொழித்திறன் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் குறைந்துபோன வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால்தான், இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வெளியே வந்த இந்திய எம்.பி.ஏ. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், வேலை இன்றி தவிப்பதோடு, பிழைப்பை ஓட்ட வேண்டுமே என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஓட்டல்களிலும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: