செவ்வாய், 26 அக்டோபர், 2010

58ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் போன்ற தவறை இனியும் செய்து விடாதீர்கள்

கனம் மேதகை அவர்களே எங்களைச் சொர்க்கத்துக்குத் திருப்பி அனுப்புங்கள், சொர்க்கத்துக்குத் திருப்பி அனுப்புங்கள்.”
அமெரிக்காவின் டெக்ஸ்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹஸ்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு உபசாரத்தில் ஹஸ்டனைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணி ஜோர்ஜ் ஆர் விலி ஆற்றிய உரையின் முழு வடிவம்.
George R.Willyகனம் மேதகை அவர்களே! திருமதி ராஜபக்ஸ,மற்றும் காங்கிரஸ் பெண்மணி சைலா ஜக்ஸ் அவர்களே! சைலா, இந்த வைபவத்தை ஏற்பாடு செய்ததற்காக உங்களுக்கு நன்றி.உண்மையில் எனது பாராட்டுக்கள் .தூதர், ஜெனரல் அரோரா அவர்களே இதை ஏற்பாடு செய்ததற்காக உங்களுக்கும் எனது நன்றிகள்.
மேன்மை தங்கிய விருந்தினர்களே, சீமாட்டிகளே, சீமான்களே, இந்தப் பெருமை மிக்க நகருக்கு வருகை தந்திருக்கும் கனம் மேதகை அவர்களே உங்கள் வரவு நல்வரவாகுக. இந்த ஓக் மரங்களையும் பறவைகள் பாடும் இனிய ஓசையையும் தவிர்த்து விட்டால், இதை நீங்கள் இலகுவில் ஸ்ரீலங்கா தானோ எனத் தவறாக எண்ணி விடுவீர்கள். அந்தச் ஸ்ரீலங்காவில்தான் நான் பிறந்தேன். எனது தாயார், எனது மனைவி சாந்தியின் பெற்றோர்கள், எங்கள் பாட்டன், பாட்டிமார் எனச் சகலரும் எனது தாய்நாட்டின் அந்தப் புனித மண்ணில்தான் புதைக்கப் பட்டார்கள். கனம் மேதகை அவர்களே! நான் வளர்ந்தது யாழ்ப்பாணத்தில், எனக்கு பத்து வயதாகவிருக்கும் போதுநாங்கள் கொழும்புக்கு இடம் பெயர்ந்தோம். எனது மனைவி பதுளையைச் சேர்ந்தவர். அவர் வளர்ந்தது தியத்தலாவையில் அங்கு அவரது தந்தை இராணுவத்தில் மதிப்பு மிக்க கப்டனாகப் பணி புரிந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வேப்ப மரங்களின் இனிமையான சுகந்தத்தையும், கொழும்பில் நான் பாடசாலைக்கு நடந்து செல்லும்போது கிடைத்த சிவப்பு ஜம்புப் பழங்களின் சுவையையும,; அவை எனது வெள்ளைச் சட்டையில் ஏற்படுத்திய சிவப்புக் கறையையும் இப்போதும் அனுபவிக்கிறேன். ஆசை காட்டி மயக்கும் பலாப்பழங்கள் மரத்தில் கனிந்து தொங்குவதையும், காகங்கள் அதை அலகால் கொத்தி உடைத்துத் திறப்பதையும் நான் கவனித்து இரசித்திருக்கிறேன்.
வெசாக் பண்டிகையின்போது அமைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான அலங்காரப் பந்தல்களையும் கண்டிருக்கிறேன். ஏழைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த தானசாலைகளில் வெட்கமின்றி உண்டு மகிழ்ந்திருக்கிறேன். கோவில்களிலிருந்து எழும் மந்திர ஓசைகளைக் கேட்டு அங்கிருந்து வரும் மல்லிகையின் நறுமணத்தையும் ஊதுபத்தி வாசனையையும் நுகர்ந்து அனுபவித்திருக்கிறேன். சகல புனிதர்கள் தேவாலயத்தின் மணிஓசையைக் கேட்பதுடன் திருத்தந்தை ஹேரத் அடிகளாரின் திருப்பலியின் போது அவருக்கு உதவி புரிந்திருக்கிறேன். 1975ல் ஸ்ரீலங்காவை விட்டுப் பிரிந்தபோது எனக்குள் ஒரு பயங்கர வலி, ஒரு துயரம்,தாங்கவொணாத ஒரு வேதனை இருந்தது.
பலம் வாய்ந்த மகாவலிகங்கை வழக்கமாக தனது புனித நீரினால் சிங்களவர்கள், தமிழர்கள் என இரு தரப்பினரதும் இரத்தம் தூவப்பட்ட நெல் வயல்களைக் கழுவிச் செல்கிறது. நான் இங்கே ஐக்கிய அமெரிக்காவிலிருந்து கொண்டு எனது முன்னோர்களின் பூமி சொர்க்கத்திலிருந்து நரகத்தை நோக்கி ஆழமாக இறங்கிச் செல்வதை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக யாரைக் குற்றம் சொல்வது என்று யாருக்கும் நிச்சயமில்லை. ஆனால் குற்றம் சொல்ல வேண்டியகாலம் எப்போதோ கடந்து விட்டது.
கனம் மேதகை அவர்களே!
உங்கள் அதிகாரம் துட்டகைமுனுவின் மரபுவழி வந்தது. எனது மக்கள் எல்லாளன் வழி வந்தவர்கள். ஞாபகமிருக்கிறதா எவ்வாறு துட்டகைமுனு,தனது யானை கந்துல மேலிருந்த எல்லாளனுடன் போரிட்டு அவரைக் கொன்றது? ஐக்கிய இலங்கையில் முதல் முறையாக துட்டகைமுனு இன்னமும் ஞாபகப்படுத்தப் படுகிறார். ஆனால் அவர் வேறொன்றையும் கூட நினைவூட்டுகிறார். எல்லாளனை தோல்வியுறச் செய்து கொன்ற பின்னர், துட்டகைமுனு அவரது பெருமைமிக்க எதிரியான எல்லாளானைக் கௌரவிப்பதற்காக ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்தார். நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் அவரது நினைவுத் தூபியின் முன்னால் இறங்கி நின்று அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்தார். அப்படிச் செய்ததால் அவர் ஒரு பெருமை மிக்க வீரன் மட்டுமல்ல, சிறந்த ஒரு அரசியல்வாதி என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். ஏனெனில் எல்லாளனின் மறைவுக்குப் பின் தமிழ் மக்களையும் தான் ஆட்சி புரியவேண்டியிருக்கும் என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.நம்பிக்கையும் அதிர்ஷ்டமும் மற்றும் உங்களின் சிறந்த அரசியல் மதிநுட்பமும் உங்களை வரலாற்றில் ஒரு தனித்தன்மையான இடத்தில் நிறுத்தியிருக்கிறது.
இனிவரும் காலங்களில் வரப்போகும் பிள்ளைகள் சரித்திரப் புத்தகங்களைப் படிக்கும்போது, மகிந்த ராஜபக்ஸ எனப் பெயர் கொண்ட சிறந்த தலைவர், வீரமிக்க போர்வீரர் அவருக்கு முன்பிருந்த பலரும் முயன்று தோல்வியடைந்த 25 வருடக் கிளர்ச்சியை இறுதியாக வெற்றி கண்டார் எனப் படிப்பார்கள். அவர்கள் நீங்கள்தான் 21ம் நூற்றாண்டின் துட்டகைமுனு எனவும் சொல்லக்கூடும். ஆனால் கைமுனு எனும் போர்வையை நீங்கள் அணிய விரும்பினால், கனம் மேதகை அவர்களே! நீங்களும் ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவவேண்டும். அது ஒரு தாதுகோபுரமாகவோ அல்லது ஒரு கட்டடமாகவோ இருக்கக் கூடாது. அது சட்டத்தால் பின்தாங்கி உறுதியான பற்களால் நடைமுறைப் படுத்தப்படும் ஒரு புதிய கொள்கையாக இருக்கவேண்டும்.
58ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் போன்ற தவறை இனியும் செய்து விடாதீர்கள். பல்கலைக்கழகம் செல்ல விரும்பும் தமிழர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். தாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்று தமிழ்மக்கள் எண்ணும்படி செய்து விடாதீர்கள். அவர்களின் மதங்களை மதியுங்கள். அவர்களின் மொழியையும் மதியுங்கள். கனம் மேதகை அவர்களே! தமிழ் மக்களைப் பற்றிய சிலவற்றை நீங்கள் அறியவேண்டிய தேவை உள்ளது. அவர்களுக்கு அவர்களின் மொழிதான் கடவுள். உலகத்தில் அவ்வாறு தங்கள் மொழியின்மீது அளப்பரிய பக்தியினைக் கொண்ட கலாச்சாரங்கள் ஒரு சிலவே உள்ளன.
நீங்கள் ஒரு வழக்கறிஞராகப் பயிற்றப்பட்டவர். உங்கள் முந்திய காலப் பணியில் பயங்கரமான மனித உரிமைக் காவலராகப் பணியாற்றியுள்ளீர்கள். இப்போது உங்களிடம் புகழ் உள்ளது. ஜூலியஸ் சீசர் தனது வெற்றியின் பின் ரோமாபுரிக்குத் திரும்பி வந்தது போன்ற ஒரு வீரரின் அதிகார பலம் உங்களிடம் உள்ளது. நீங்கள் கேட்டால் யாரும் மறுக்கப் போவதில்லை. சில தாபன விதிகளை நிறைவேற்றும்படி பாராளுமன்றைக் கேளுங்கள். நீங்களும் நானும் சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், அப்போது நாங்கள் சோல்பரி அரசியலமைப்பை படிக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால், இந்தப் பார்வையாளர்களில் உள்ள பலரும் செய்ய விரும்புவதைப்போல நானும் அதை இலவசமாகவே செய்வேன். தமிழ் மக்கள் பசித்தவர்களாய், ஆடையற்றவர்களாய் தங்களுக்கான ஒரு இடத்தை நிச்சயம் செய்ய வேண்டியவர்களாய் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அப்படியான ஒன்று அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி வெய்யுங்கள். ஒரு பிரபாகரனை நீங்கள் கொன்று விட்டீர்கள்.
இன்னொரு பிரபாகரன் உருவாவதற்கு இடமளிக்காதீர்கள். இன்னொருவரை நீங்கள் வாள்களினாலும் துப்பாக்கிகளாலும் தடுத்துவிட முடியாது. அதை நீங்கள் இதயத்தினாலும் புத்தியினாலும் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் புத்த பகவானிடம் படித்தறிந்த பாடங்களான இரக்கம், நீதி, நேர்மை ஆகியனவே உங்களுக்குத் தேவையான ஒரே ஆயதம். தம்ம பதத்தில் புத்தர் சொல்லியிருப்பது எந்தக் காலத்திலும் பகைமையை பகைமையினால் வெல்ல முடியாது,பகைமையை அன்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்று. இது ஒரு பழைய விதி, அதைத்தான் புத்தரும் சொன்னார்.
கனம் மேதகை அவர்களே!
நீங்கள் இந்த அழகிய நகரத்தை விட்டு ஸ்ரீலங்காவுக்கு திரும்பியதும், அங்கு ஒரு பத்து வயதுச் சிறுவன் தனது பாடசாலைக்கு நடந்து செல்லும்போது அவனது வெள்ளைச் சட்டையில் ஜம்பு பழங்களின் சிவப்புக் கறையைத் தவிர வேறு சிவப்புக் கறை எதுவும் இருக்காது என, காலைநேரக் காக்கைகள் பலாப்பழத்தைத் தவிர வேறு எதையும் கொத்தித் திறக்காது என, வேப்ப மரங்களில் அன்று நான் அனுபவித்த இனிய சுகந்தத்தைத் தந்த பழங்களைத் தவிர வேறு எதுவும் தூங்காது என உங்களால் உறுதிமொழி தர முடியுமா?
கனம் மேதகை அவர்களே! எங்களைச் சொர்க்கத்துக்குத் திருப்பி அனுப்புங்கள்! எங்களைச் சொர்க்கத்துக்குத் திருப்பி அனுப்புங்கள்! நன்றி.
- தமிழில். எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: