செவ்வாய், 26 அக்டோபர், 2010

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி


நடிகர் ராதாரவி திமுகவில் ‘பிரச்சார பீரங்கி’யாக இருந்தவர்.    திமுகவில் உரிய மரியாதை இல்லை என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் கூறி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக சைதை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா
திடீரென்று ஒரு நாள்,  முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.  இச்சந்திப்பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   ’’அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்.

கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.

இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட ஜெயலலிதாவுக்கு மனமில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள்.

இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டேன்’’என்று கூறினார்.
பின்னர் அவர் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த வாரம் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்தார். ’’தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியுடன் பேசினேன். என்னை காங்கிரசில் சேரும்படி அவர் அழைத்துள்ளார். ஒரு வாரத்திற்குள் எனது முடிவை தெரிவிப்பேன்’’ என்றார்.

இதனால் அவர் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து, மீண்டும் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: