![]() |
Siva Ilango : ஓகம் (யோகம்) - தமிழ் மண்ணின் மெய்யியல்
தமிழின் மிகப் பழமையானதும், ஆகச் சிறந்த மெய்யியலுமான ஓகம், ஆரியர்களால் களவாடப்பட்டுத் தற்போது யோகம் என்ற பெயரில் பரப்பப்பட்டு வருகிறது.
இத்தனைப் பழமையுடையதும், தமிழ்ச் சித்தர்களின் உடைமையும் ஆன யோகக் கலைக்குப் பதஞ்சலியை மூலவராக்கி, அதன் வழி யோகத் தத்துவங்களைப் "பாதஞ்சலியம்" என்று சமற்கிருத நூல்கள் யோகத்தைத் தமதாக்கும் வேலையைச் செவ்வனே செய்திருக்கின்றன; செய்தும் வருகின்றன. பல தமிழ் இலக்கியங்களிலும், திருமந்திரத்திலும் சொல்லப்பட்ட யோக சூத்திரங்கள், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திர நூலில் இல்லை என்பதே தமிழ் ஓகத்தின் பழமையையும், அடிப்படைத் தன்மையையும் காட்டுவதாக அமைகிறது.
சித்தர்களின் யோகத்தைப் பகவத் கீதையிலும் 'தானே' மொழிந்ததைப் போல் கண்ணன் கூற்றாக வருகின்றது. என்றாலும் "சித்தர்களில் யான் கபில முனியாக உள்ளேன்" எனக் கண்ணன் கூற்றாகவும் வருகிறது (டாக்டர் சோ. ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி 3, பக்கம் 286). சாங்கியத்தின் மூலவரான கபிலரே (தொல்கபிலர்) யோகங்களின் அதிபதி என்பதால், அவருக்கு இணையாகக் கடவுளே தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்த ஓர் இடத்தில்தான் கண்ணன் ஓர் இம்மியளவு உண்மையைச் சொல்லி இருக்கிறான் (கதையின் படி) என்று கொள்ளலாம்.
மகாபாரதத்தின் இடைச்செருகல் பகவத்கீதை என்பதையும், கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இடைச்செருகலாகச் சேர்க்கப் பட்டதுதான் பகவத்கீதை என்பதையும் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பெரும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பகவத் கீதையின் காலம், பதஞ்சலி முனிவரின் காலம் ஆகியவற்றிற்கு முன்பே மகாவீரரும், புத்தரும் பல யோக நிலைகளைத் தங்கள் அனுபவத்தில் கண்டவர்கள். பதஞ்சலி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் 'அனுசாசனம்' என்பது துணைநூல் மற்றும் வழிநூல் ஆகும். ஆனால் அதற்கு முற்பட்ட பௌத்த யோக நூல்கள் பாலி மொழியில் பல இருந்திருக்கின்றன என்பதைப் பதஞ்சலி முனிவரே குறிப்பிட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை.
மகாயான பௌத்தத்தில் யோகாசனம் என்று தனிப்பிரிவே உள்ளது. தேரவாதம் அதற்கு மேலுமான பல செய்திகளைக் கொண்டுள்ளது. காஞ்சிபுரம் 'போதிசத்துவரை' ஒப்பற்ற யோகி என்று கூறும் மரபும் உண்டு. பௌத்தக் காப்பியமான மணிமேகலை பௌத்த, யோக வரலாறுகளை விரிவாகக் குறிப்பிடுகின்றது. பல கலைகளும், கோட்பாடுகளும் தமிழில் தோன்றி இருக்கின்றன. ஆனால் இன்று வேறு எங்கெங்கோ, யாருடைய வாரிசாகவோ வளர்ந்து கொண்டிருக்கின்றன. தத்துக் கொடுத்து விட்ட தமிழ்க் கோட்பாட்டாளர்களை எங்கே போய்த் தேடுவது?
(கீழுள்ள படம்: காந்தாரக் கலை வடிவத்தில் சித்தார்த்த கௌதமர்)
(மீள் பதிவு)
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக