ஞாயிறு, 22 ஜூன், 2025

பாலஸ்தீனர்கள் “திரும்பி எழாதபடிக்கு அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். Netanyahu, a fascist warmonger

May be an image of text

 Rajasangeethan  :  நெதன்யாகு informal ஆக பேசும் ஒரு காணொளி சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.  ஹிட்லர், கோயபல்ஸ், முசோலினி போன்றோருக்கு போர் மீது இருந்த வெறியையும் அதற்கு கட்டமைக்கப்பட வேண்டிய அரசியல் காய்நகர்த்தல்களையும் வெளிப்படுத்தும் காணொளி! 
பாலஸ்தீனத்தை பற்றி பேசுகையில், “திரும்பி எழாதபடிக்கு அவர்களை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்குள் எப்போதும் அச்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும்!” என பேசியிருப்பார் நெதன்யாகு.
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரின்பால் இந்த நுட்பத்தை பயன்படுத்துவதை காண முடியும். பாசிச அணுகுமுறையின் நுட்பம் இது.


ஷிண்ட்லேர்ஸ் லிஸ்ட் படத்தில், வதைமுகாமை மேற்பார்வையிடும் ஒரு ராணுவ அதிகாரி, இரவு தன் அறையில் ஒரு பெண்ணை புணர்ந்து படுத்து உறங்கி, காலையில் எழுந்து சோம்பல் முறித்து பால்கனிக்கு சென்று சிகரெட்டை பற்ற வைத்து, அருகே இருக்கும் துப்பாக்கியை எடுத்து, வதைமுகாமில் நிர்வாணமாக கொடுமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் கூட்டத்தை குறி பார்த்து சுட்டுத் தள்ளுவான். காலையில் சோம்பல் முறிப்பதற்காக செய்யப்படும் ஓர் அலட்சியக் கொலை அது. 
நாஜியின் மன அழுக்காக அந்த செயலை காண்பித்திருப்பார் ஸ்பீல்பெர்க். அது நாஜியின் மன அழுக்கு அல்ல, முதலாளித்துவம் வளர்த்து விடும் யதேச்சதிகாரமும் பாசிசமும் இணையும் கூர் இது.
காணொளியில் , ’பாலஸ்தீனத்தின் மீது இப்படி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினால், எதிர்ப்பு வருமே’ என கேட்கப்படும் கேள்விக்கு நெதன்யாகுவின் பதில்:
“அமெரிக்காவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அமெரிக்காவை மிக எளிமையாக maneuver செய்து விட முடியும். 80% அமெரிக்கர்கள் நம்மைதான் ஆதரிப்பார்கள்!”
Maneuver என்பது முக்கியமான வார்த்தை. Diplomacy வட்டங்களில் அதிகமாக புழங்கப்படும் வார்த்தை. ஒரு தரப்பு செய்ய விரும்பும் விஷயத்தை இன்னொரு தரப்பு விரும்பாவிட்டாலும் ஏதோவொரு கட்டாயத்தை உருவாக்கி சூது செய்து, இன்னொரு தரப்பை செய்ய வைப்பதுதான் Manoeuvring எனப்படுவது. ராஜதந்திரம் என எளிமையாக புரிந்து கொள்ளலாம். 
“என்ன அடிச்சிட்டேல்ல... என் தலைவன் மேல கை வச்சு பாருடா!” என வடிவேலு சலம்பி, இன்னொரு நபரை அழைத்து வந்து சாணியடி வாங்க வைக்கும் வேலை இது.
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே ட்ரம்ப், அதில் பட்டும் படாமலும்தான் இருந்தார். ‘இஸ்ரேலை ஈரான் தாக்கக் கூடாது’, ‘இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்த உரிமை இருக்கிறது’, ‘அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கக் கூடாது’, ‘அமெரிக்கா இப்போரில் பங்குபெறுமா எனத் தெரியாது’, ‘பங்குபெறுவது குறித்து இரண்டு வாரங்கள் கழித்து முடிவெடுக்கப்படும்’ என வெறுமனே பேசிக் கொண்டு மட்டும்தான் இருந்தார்.
Situation Room-ல் அதிகாரிகளிடம் பேசும்போது கூட, “அவர்கள் இருவரும் அடித்துக் கொண்டால் அடித்துக் கொள்ளட்டும். இதில் அமெரிக்கா தலையிட என்ன கட்டாயம்?” என்று ட்ரம்ப் கேட்கும் காணொளியும் வெளியானது.
“இரண்டு வாரத்துக்கு பிறகு அமெரிக்கா முடிவெடுக்கும்” என்ற தகவல் வந்த இரண்டாவது நாளே “பதினைந்து நாட்களில் அணுகுண்டு தயாரிக்கும் வல்லமை ஈரானுக்கு இருக்கிறது” என மொசாத் குறிப்பிட்டது. அதாவது ‘அத்தனை நாள் காத்திருக்காமல் சீக்கிரம் தாக்குங்கள்’ என்பதுதான் அதற்கு அர்த்தம். 
ஒருவழியாய் அமெரிக்கா அதை தற்போது செய்து விட்டது. ஈரானின் அணு தளவாடங்கள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் பகுதிகளை அமெரிக்கா தாக்கி இருக்கிறது. 
இப்போதும் ட்ரம்பின் பதிவு, “ஈரானின் அணு தளவாடங்களை தாக்கி அழித்து அமெரிக்க விமானங்கள் திரும்பி விட்டன. இனி சமாதானம்தான். யாரும் எங்களை அடித்து விட யோசிக்கக் கூடாது. புரிதலுக்கு நன்றி’ என்பது போன்ற பதிவைத்தான் இட்டிருக்கிறார்.
ட்ரம்ப் யோக்கியர் என சொல்லவில்லை. அவர் ஒரு பிஸினஸ் மேன்!  ட்ரம்ப் முன் வைக்கும் முதலாளித்துவம், காலாவதியான முதலாளித்துவம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். Mercantilism என்ற பொருளாதார முறையை முன் வைப்பவராக ட்ரம்ப்பை கருதுகிறார்கள்.  நிலப்பிரபுத்துவத்தை அழித்து அடுத்த கட்டமாக வரும் முதலாளித்துவத்தின் ஆரம்ப பொருளாதார அமைப்பாக இதை வரையறுப்பார் மார்க்ஸ். 
அடிப்படையில் Mercantilism என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகங்களை கொண்டு கட்டுப்படுத்துவது என எளிமையாக புரிந்து கொள்ளலாம். இதைத்தான் tariff war என செய்து கொண்டிருந்தார் ட்ரம்ப். ஆனால் அமெரிக்கா, இந்தக் கட்டத்தை தாண்டி உலகமய நிதி மூலதனம் என்கிற இடத்தை அடைந்து விட்டது. 
அமெரிக்கர்களுக்கும் ட்ரம்புக்குமான முரண்பாட்டை, இந்த பொருளாதார வடிவங்களின் மோதல்களாகக் கூட யூகிக்கலாம்.
ராத்ஷில்ட் போன்ற நிதி மூலதன முதலாளிகளின் பங்களிப்பில், குறிப்பாக வங்கி மூலதன ஆதரவில், உருவாக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல். அமெரிக்காவின் Deep State எனப்படும் அமெரிக்க அரசின் மையத்தில் இயங்கும் பொருளாதாரமும் அரசதிகாரிகளும் அரசியல்வாதிகளும் யூதர்கள் அல்லது சியோனிச ஆதரவாளர்கள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்து தற்போது நெதன்யாகுவின் உதவியுடன் ட்ரம்ப்பை இழுத்து தெருவில் வந்து விட்டிருக்கிறார்கள்.
ஈரான் 1980-களில் இருந்து போரையும் எதிர்ப்புரட்சிகளையும் சந்தித்து வந்திருக்கிறது. ஈராக்கின் சதாம் உசேன்தான் இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னான ஈரான் மீது முதன்முதலாக போர் தொடுத்தவர். ஷியா-சன்னி சண்டையாலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சி ஈராக்குக்கும் பரவி தனது ஆட்சியை பறித்து விடக் கூடாது என்ற எண்ணத்தாலும் அவர் தொடுத்த போருக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்காதான். எட்டு வருடங்கள் தொடர்ந்தது அப்போர். பிறகு வளைகுடா போரில் அதே அமெரிக்காவுக்கு எதிராக சதாம் திரும்பினார் என்பது பிந்தைய வரலாறு. ஆனால் மத்தியக் கிழக்கில், அமெரிக்காவின் கைப்பாவையாக ஆக முடியாத இடத்தை ஈரான் மட்டும்தான் தக்க வைத்துக் கொண்டிருந்தது. 
இத்தனை நாட்கள் ஈரான் தாக்கப்பட்டும் சக நாடுகளின் ஆதரவோ ஆயுத ஒத்துழைப்போ இன்னும் நேரடியாக ஈரானுக்கு கிடைக்கவில்லை. சீனா, ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் மட்டுமே ஈரானுக்கு ஆதரவாக நிற்கின்றன. முந்தைய சோசலிச முகாம் இவை என்பது குறிப்பிடத்தக்கது. 
சீனாவின் தலைமையில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய உலக ஒழுங்கை குலைப்பதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சிகளை புரிந்து கொண்டு, அதற்கான ஒத்துழைப்பை நல்குவதன் வழியாக, தன்னுடைய போருக்கு அமெரிக்காவை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 
இனி நாம் உண்மையான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பார்க்கலாம். காலுக்கடியில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவத் தளமான Diego Garcia-வும் சீனாவின் இலங்கை துறைமுகங்களும் இருப்பதால் அத்தனை நிம்மதியுடன் வேடிக்கை பார்க்க முடியுமா என தெரியவில்லை.
ஒரே நிம்மதி, இந்த ஆட்டத்துக்குள் நம்மூர் நெதன்யாகுவை ஜோக்கராக்கி உட்கார வைத்துவிட்டார்கள் என்பதுதான்.

கருத்துகள் இல்லை: