tamil.samayam.com - எழிலரசன்.டி : திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. விழுப்புரம் திமுகவில் கோலோச்சி வந்த இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முக்கியம் வாய்ந்த துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்ததும் ஏற்கனவே அவர் வகித்த உயர்கல்வித் துறையே மீண்டும் வழங்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தாலும் கூட,
உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்ற பிறகு உடனே அமைச்சர் பதவி வழங்கினார் ஸ்டாலின்.
அந்த அளவுக்கு தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
ஆனால், பொன்முடியின் பேச்சு பல சமயங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் கடுப்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறையை பறித்து முக்கியத்துவம் இல்லாத வனத் துறைக்கு அமைச்சராக நியமனம் செய்தார்.
இந்த நிலையில் பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் பொன்முடியின் பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக எம்.பி கனிமொழியே தனது கண்டனத்தை பதிவு செய்ய, உடனடியாக பொன்முடியின் துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. திருச்சி சிவா துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அப்செட்டில் பொன்முடி
கட்சிப் பதவி பறிக்கப்பட்டதால் பொன்முடி ரொம்பவே அப்செட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சட்டமன்றம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூடிய நிலையில், மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நேரத்தில் பொன்முடி அவைக்கு வராமல் தவித்துவிட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் அதுதொடர்பான செய்தியை பதிவிட்டுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சர்ச்சை பேச்சு தொடர்பாக தலைமை விளக்கம் கேட்டிருக்கலாம் அல்லது ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கலாம். ஆனால், அப்படி எதுவுமே நடக்காமல் திடீரென கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. ஏற்கனவே வழக்குகள், அமலாக்கத் துறை ரெய்டு என குறிவைக்கப்படும் நிலையில், தலைமை திடீரென கட்சி பதவியை பறித்தது பொன்முடிக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இதனால் ஏற்பட்ட அப்செட் காரணமாகவே பொன்முடி எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள் விழுப்புரம் திமுக வட்டாரங்களில்..
அதே சமயம் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் தான் சட்டமன்றத்திற்கு வரவில்லை. சர்ச்சைகள் சற்று ஓய்ந்த பிறகு வழக்கம் போல கட்சிப் பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக