வியாழன், 17 ஏப்ரல், 2025

இலங்கை சுயமரியாதை இயக்கம் 1932ம் ஆண்டு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது

 ராதா மனோகர் : இலங்கை சுயமரியாதை இயக்கம் 1932ம் ஆண்டு கொழும்பில் (கொள்ளுபிட்டியில்) ஆரம்பிக்கப்பட்டது
 இலங்கையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட வருடத்திலேயே,
தந்தை  பெரியார் மாஸ்கோ பயணத்தின் வழியில் இலங்கைக்கும் வருகை தந்திருந்தார் .
பெரியாரின் வருகையை அறிந்த சுயமரியாதை அமைப்பாளர்கள் பெரியாருடனான கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
1932ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி இரவு 9.00 மணிக்கு கொள்ளுபிட்டி கீரின் பாத் பாதையிலுள்ள மகளிர் நட்புறவு மண்டபத் தில் இக் கலந்துரையாடல் ஒழுங் கு செய் யப் பட்டிருந்தது.  இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட  பெரியார் சாதியத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான நீண்ட சொற்பொழிவொன்றினை நிகழ்த்தினார்
இச்செய்திகள் எல்லாம் வரலாற்றில் மறக்கப்பட்ட   அல்ல அல்ல மறைக்கப்பட்ட செய்திகளாகும்
இலங்கை திராவிடர் கழகம் 11.07.1948 இல் கொழும்பில் தொடங்கப்பட்டது


திரு. காத்தமுத்து இளஞ்செழியன் அவர்கள் தலைவராகவும்
திருவாளர்கள் எம். ஜி. பிரகாசம் எஸ். கே . சுந்தரராஜன் என்போர் உப தலைவர்களாகவும்
திரு. ஏ. எம் அந்தோணிமுத்து பொதுச் செயலாளராகவும்
திருவாளர்கள் ஏ.கே. ஜமால்தீன், எஸ். வி.ஜெகநாதன் என்போர் இணைச் செயலாளர்களாகவும் ,
திரு. கே கந்தசாமி அவர்கள் பொருளாலராகவும் மற்றும்
திருவாளர்கள் கு.யா திராவிடக்கழல் , எஸ் . வி. பாலக்கணபதி, ஏ. இளஞ்செழியன், எஸ் . கே. மாயக்கிருஸ்ணன் ஜே. எம். அருமை நாயகம், ரி. எம். ஏ அமீது, வி. பேதுரு, எம். . எஸ் பெருமாள், ஜே.பி. எம். ஜமால், மொகைதீன், இ. பா. க மாணிக்கம், எஸ். முனியசாமி, எஸ். சூசை, எஸ் கே. ராஜரத்தினம், ஜோக்கின், பி. எம் மாணிக்கம், என்போர் செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து திராவிடர் கழகம் சார்பாக
கோபி செட்டிபாளையம் திரு. ஜீ.என். இராசு கலந்து கொண்டார்
கோபி செட்டிபாளையம் திரு. ஜீ.என். இராசுவின் உரை  இந்திய வம்சாவளியினர் மத்தியில் மட்டுமல்லாது இலங்கை  தமிழர்கள் மத்தியிலும் தமிழ் தேசிய உணர்வினைத் தோற்றுவித்தது.
சென்னை முதலமைச்சர் திரு. சி. ராஜாஜி 1948ல் ஹிந்தியை அறிமுகப்படுத்த முனைந்தமைக்கு எதிராக இலங்கையில் பல எதிர்ப்புக்கூட்டங்கள் நடாத்தப்பட்டதுடன் இக்கூட்டங்களில் பங்கு கொண்டோரின் தரத்திலும் குணவியல்ரீதியான மாற்றம் தோன்றியது.

ஹிந்தி திணிப் பினை எதிர்ப் பதற்கான நிர்வாகக்குழுவொன்றினை உருவாக்கும் நோக்கில் இலங்கை திராவிடக் கழகம் 31.07.1948 அன்று கொழும்பு மெயின் வீதி இல. 200க் கொண்ட இல்லத்தில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த மறைந்த திரு. அ அமிர்தலிங்கம் கலந்து கொண்டதுடன் ஹிந்தி எதிர்ப்பு கூட்டமொன்றினை ஒழுங்கு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
 திரு. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினர் 1948.08.22 திகதியன்று ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை கொழும்பில் நடாத்தினர்.
அவ் வேளையில கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல அறிவு ஜீவிகள் உரையாற்றியுள்ளமையிலிருந்து தமிழக திராவிடக் கழகம் விதைத்த தமிழ் தேசிய வாதம் இலங்கையில் வேரூன்றியமையினைக் காணலாம்.
-  இக்குறிப்புக்கள் நமதுமலையகம் இணையத்தில் இருந்து பெற்றவையாகும்  முழு கட்டுரையையும் பின்னூட்டத்தில்  காணலாம்

கருத்துகள் இல்லை: