தினமணி : மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அருண்குமார் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள ‘விவிபேட்’ இயந்திரங்களில் துண்டுச் சீட்டாக விழும் ஒப்புகைச் சீட்டுகளையும், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது, எண்ண வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்தவுடன், அதுதொடா்பான சின்னம் அருகிலுள்ள ‘விவிபேட்’ இயந்திரத்தில் துண்டுச் சீட்டாக 7 விநாடிகள் தெரியும். பின்னா், அந்த துண்டுச் சீட்டு ‘விவிபேட்’ இயந்திரத்தின் உள்ளேயே விழுந்து விடும். வாக்கு எண்ணிக்கையின்போது, ‘விவிபேட்’ இயந்திரத்தில் விழும் துண்டுச் சீட்டுகளையும் ஒப்பிட்டு எண்ண வேண்டுமென தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
வாக்காளர் தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை துல்லியமாகக் காட்டு கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் விவிபேட் இணைக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் காகித வடிவில் வாக்குச்சீட்டுகளாக மாறிவிடுவதால் அவற்றை பின்னர் திறந்து எண்ணும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதற்கு இணையாக விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சீட்டுகளும் சரியாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம். இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது.
தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு சரிபாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம், 6 மணி நேரத்தில் அனைத்து விவிபேட் இயந்திரங்களில் பதிவான சீட்டுகளையும் எண்ணி முடிக்க முடியும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, மேற்கண்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க, தேர்தலில் 100 சதவிகித விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதை தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவதற்காக சென்ற ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் அடங்கிய குழுவை சந்திக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்து வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நோட்டீஸ் இந்த விவகாரத்தில் முக்கியமானதொரு நகர்வாகும். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் முன்னர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக