சனி, 6 ஏப்ரல், 2024

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்

 மாலைமலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.



இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை: