கலைஞர் செய்திகளை - KL Reshma : நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்திலும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் அவரது தலையில் ஏற்பட்ட காயத்தால், சில நாட்கள் கழித்து தற்போது மீண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதி வேட்பாளர் மஹுவா மொய்த்ராவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுக்கு சவால் விட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “பாஜகவும், அதன் கூட்டணியும் நாடு முழுவதும் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று பேசி வருகிறது. நான் உங்களுக்கு (பாஜகவுக்கு) சவால் விடுகிறேன். 400 எல்லாம் வேண்டாம். 200-ஐ தாண்டுங்கள் பார்க்கலாம்.
“400லாம் இருக்கட்டும், முதலில் 200-ஐ தாண்டுங்கள் பார்க்கலாம்...” - பாஜகவுக்கு நேரடியாக சவால் விட்ட மம்தா!
இதுபோலவே கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் 200-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பாஜக கூறியது. ஆனால், இறுதியில் வெறும் 77 இடங்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது. அந்த 77-லும் சிலர் எங்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ்) இணைந்துள்ளனர். எனவே பாஜக சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.
“400லாம் இருக்கட்டும், முதலில் 200-ஐ தாண்டுங்கள் பார்க்கலாம்...” - பாஜகவுக்கு நேரடியாக சவால் விட்ட மம்தா!
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக ஒரு வெற்று (டம்மி) கட்சி. பாஜகவினர் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அள்ளி வீசுவர். CAA என்பது சட்டப்பூர்வ குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான ஒரு உத்தி. முதலில் CAA வந்தால், அதன் தொடர்ச்சியாக NRC வரும். மேற்கு வங்கத்தில் CAA, NRC என எதையும் அனுமதிக்க மாட்டோம்.
ஒன்றிய பாஜக அரசை மீண்டும் நீங்கள் நம்பினால், அவர்கள் உங்களையும் வெளிநாட்டவராக மாற்றி விடுவார்கள். பாஜகவினரை ஒருபோதும் நம்பாதீர்கள். "பாஜக தலைவர்கள் ஏன் CAA-வில் விண்ணப்பிக்கவில்லை? ஏனெனில் அவர்கள் விண்ணப்பித்தால், அவர்கள் தங்களை வெளிநாட்டினர் என்று அறிவிக்க வேண்டும். எனவே இனி தேர்தலில் போட்டியிட முடியாது.” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக