hirunews.lk : இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்தார்கள்.
UL-122 என்ற விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு அமைய 1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் சாந்தன், ரொபர்ட் பயஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது.
எவ்வாறாயினும் இலங்கையரான சாந்தன் தமது தாயுடன் வாழ்வதற்காக தம்மை இலங்கைக்கு அனுப்புமாறு கோரியிருந்தார்.
இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.
இவ்வாறான பின்னணியில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தாங்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதன்படி, குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியிருந்தது.
அவர்களில் முருகன் தாம் லண்டனில் உள்ள தமது மகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு மாத்திரம் செல்வதற்கான கடவுச் சீட்டையே அவர்களுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளதாக அவர்களது சார்பில் வழக்குகளில் முன்னிலையான புகழேந்தி பாண்டியன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக