LR Jagadheesan : தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்த எவராவது தன் கட்சித்தொண்டர்களையோ அல்லது ஊடகங்களையோ பொதுவெளியில் நேருக்கு நேர் சந்திக்காமல் வெறும் அறிக்கை மூலமே தம் அரசியல் கட்சியை துவக்கிய வரலாறு உண்டா?
தமிழ்நாட்டு அரசியலில் கடைசியாய் ஒரு கட்சியை கைப்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சியையும் கைப்பற்றுவதில் வெற்றிபெற்ற திரை நட்சத்திரம் ஜெயலலிதா.
எம்ஜிஆர் இறந்தபின் அதிமுகவை முழுமையாய் கைப்பற்றும் வரை தன் போயஸ்தோட்டத்தின் பால்கனியில் அவர் தினமும் தரிசனம் தந்தார்.
தொண்டர்களை சந்தித்தார். பேசினார். ஊடகங்களை சந்தித்தார்.
அவ்வளவு ஏன் அவர் சொத்துக்கு இன்று வாரிசாக வந்திருக்கும் தீபாம்மா கூட கொஞ்சகாலம் செய்தியாளர்களை சந்தித்து “அரசியல்” அளவளாவினார்.
இங்கே வசூலில் முதலிடத்தில் இருக்கும் “கதாநாயகன்” தன் புதிய அரசியல் கட்சியின் துவக்கத்தையே அறிக்கை மூலம் நிகழ்த்துகிறார். தொண்டர் சந்திப்பில்லை. ஊடகசந்திப்பில்லை. பொதுவெளி உரையாடல் இல்லை. ஒரு மண்ணும் இல்லை.
Just like that ஒரு அறிக்கை. அதை வைத்துக்கொண்டு
ஆனப்பெரிய ஊடகங்கள் முதல் அரசியல் திறானாய்வாளர்கள் (என்னையும் சேர்த்துதான்) வரை அவரது அரசியல் எதிர்காலத்தைப்பற்றி ஆயோ ஆயென ஆய்ந்து கொண்டிருக்கிறோம். போகாத ஊருக்கு இல்லாத வழியைத்தேடுவதைப்போல.
அதிலும் விஜய் 2026இல் ஆட்சியையே பிடிக்க வாய்ப்பிருக்கு என்று Youtubeகளில் கிளிஜோசியம் சொல்லும் என் சக மூத்த ஊடகவியலாளர்களை நினைத்தால் எதில் சிரிப்பதென தெரியவில்லை. ஏன்யா நேத்துவரை நல்லாத்தானய்யா இருந்தீங்க. விஜயகாந்த் கதைய பார்த்தபிறகுமா கூசாம விஜய் 2026இல் ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருக்குன்னு கூசாம அடிச்சி விட முடியுது. எதுக்கும் ஒரு நியாய தர்மம் வேணாம்?
தமிழ்நாட்டு அரசியலென்ன அவ்வளவு சீப்பட்டா கிடக்கிறது? அல்லது தமிழ்நாட்டு வாக்காளனென்ன அவ்வளவுக்கு கதியற்று போய் கிடக்கிறானா? விஜய் ஆட்சிக்கு வருவது இருக்கட்டும். முதலில் சீமானைக்கடந்து, அன்புமணியைக்கடந்து, அண்ணாமலையையையும் கடந்து கடைசியாய் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் புத்துணர்வு பெறப்போகும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் கடந்து வரட்டும். அப்புறம் தானே அதிமுக திமுகவை நெருங்க முடியும். அல்லது நெருங்குவதைப்பத்தி நினைக்கவே முடியும்?
தமிழ்நாட்டு அரசியல் ஏற்கனவே ஒரு அவலநகைச்சுவை. இதில் விஜய்யின் அரசியல் என்பது எஸ் வி சேகர் ரக காலாவதியான காமெடி. இதுக்கு எதுக்கு இம்புட்டு வெட்டி வியாக்கியானம்?
பிகு: அரசியலில் எதுவுமே சாத்தியம் என்பதையும் யாரையும் எளிதில் ஒதுக்க முடியாது என்கிற உண்மையையும் ஏற்கிறேன். அதனால் நடிகர் விஜய்யின் அரசியலை எளிதில் புறந்தள்ளக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் ஒரு வாதத்துக்காக ஏற்கலாம், உடன்படாவிட்டாலும். ஆனால் அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு நடந்திருக்கும் விதமும் அவர் தன்னுடன் வைத்திருக்கும் அரசியல் தளகர்த்தர்களையும் பார்த்தபின்பும் இவரது அரசியலை ஒரு பொருட்டாகக்கூட எடுக்க எந்த தர்க்க நியாயங்களும் தென்படவில்லை. வரலாற்று தேவைகளோ நிர்பந்தங்களோ வாய்ப்புகளோ இருப்பதாகவும் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக