Maalaimalar : நாகர்கோவில் நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளை சார்ந்த சங்கங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.
இப்போது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களுடைய கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டிருக்கிறது.
அதேபோல் மக்களை பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து, ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து, மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளை கொண்டு வந்து அதை முன்வைத்து, மக்கள் அன்றாடம் சந்திக்கும் வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாய பிரச்சனை, மீனவர்களுடைய உரிமைகளை பறிக்கப்படுவதை மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான்.
அதனால் இதை நாம் சரியாக புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு. உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை, அது மாநில அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம். மத்தியில் ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு, நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம்.
அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சரால் உங்களுடைய வழிகாட்டுதலின் வழியே ஒரு ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக