மின்னம்பலம் Aara : மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து வருகின்றனர்.
இந்த வகையில் இன்று (பிப்ரவரி 4) இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன்ராஜ், “பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.
நாங்கள் இரண்டு லோக் சபா சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டிருக்கிறோம்.
இந்த முறை எங்களுடைய கட்சி சின்னத்தில் தான் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் முடித்து தமிழகம் திரும்பியதும் இறுதி முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.
திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திலும் வர இருக்கிற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்று வற்புறுத்தியிருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குழுவினர் திமுக குழுவினரை சந்திக்க இருக்கிறார்கள். அப்போது அவர்களும் தனி சின்னத்தில் நிற்பது பற்றி உறுதியாக வலியுறுத்த இருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியனில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்திலும், மதிமுகவின் கணேசமூர்த்தி ஈரோட்டிலும், கொமதேகவை சேர்ந்த சின்ராஜ் நாமக்கல் தொகுதியிலும், ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் நின்று ஜெயித்தனர். அதேபோல அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தென்காசியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே மேற்குறிப்பிட்ட நான்கு எம்பி.க்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர்
நீதிமன்றத்தில் 2019 ஜூலை மாதம் தொடுத்த அந்த வழக்கில், “ஒரு கட்சியை
சேர்ந்தவர் தேர்தல் நேரத்தில் இன்னொரு கட்சியில் சேர்ந்து நின்று
எம்.எல்.ஏ.வாகவோ எம்.பி. ஆகவோ ஆகிவிடுகிறார். ஆனால் தேர்தல் வெற்றிக்குப்
பிறகு அவர் தேர்தலில் நின்ற கட்சியின் பிரதிநிதியாக சட்டமன்றத்திலோ,
நாடாளுமன்றத்திலோ பார்க்கப்பட்டாலும் மக்கள் மன்றத்தில் அவருக்கென ஒரு
கட்சி, ஒரு கொடி இருக்கிறது.
இது சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தின்படி செல்லுமா, ஒரு கட்சியை சேர்ந்த
வேட்பாளர் இன்னொரு கட்சியில் நின்று போட்டியிடுவதே செல்லாது, இதற்கு தடை
விதிக்க வேண்டும்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கொமதேகவைச் சேர்ந்த ஏ.கே.பி. சின்ராஜ், ஐஜேகேவை சேர்ந்த பாரிவேந்தர் ஆகியோர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்கள். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தென்காசியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
இந்த ஐவரின் போட்டியிடலும் செல்லாது, நால்வரின் வெற்றியும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு 2019 செப்டம்பர் 17 விசாரணைக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், கட்சிகளின் தலைமைகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது சென்னை உயர் நீதிமன்றம்.
இது தொடர்பாக நாம், வழக்குத் தொடுத்த தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவியிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம். இது தொடர்பான கட்டுரையை 2019 செப்டம்பர் 17 ஆம் தேதி ‘திமுக கூட்டணி எம்பி.க்கள் நால்வரின் வெற்றி செல்லுமா?’ என்ற தலைப்பில் வெளியிட்டோம்.
அப்போது நம்மிடம் பேசிய எம்.எல்.ரவி,
“ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்கக் கூடாது என்று சட்டத்தில் இருக்கிறது. வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான அங்கமான ஃபார்ம் பி-யில் சில முக்கியமான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. ‘இவர் என் கட்சியைச் சேர்ந்தவர். என் கட்சியின் உறுப்பினர், என் கட்சியின் பதிவேட்டில் இவருடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது’ என்ற உறுதிமொழியை சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் சான்றளித்து கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
அதாவது ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் நிற்கின்ற நிலையில், ‘ரவிக்குமார் திமுகவின் உறுப்பினர்தான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்து கையெழுத்து போட்டிருக்கிறார். அதேபோல டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்தான் என்று அதிமுக தலைமையின் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அந்த உறுதிமொழி தவறானதல்லவா? இது ஆள்மாறாட்டம் அல்லவா? இதை எதிர்த்துதான் வழக்குத் தொடுத்தேன்.
அப்போது, “இதை தேர்தல் வழக்காகதான் போட முடியும் பொது நல வழக்காக போட முடியாது என்று உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து மறுப்பு தெரிவித்தார்கள். இதற்கு நாங்கள் விளக்கமளித்தோம். ‘தேர்தல் வழக்கு என்றால் சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளரோ, வாக்காளரோதான் தொடர முடியும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி நபர், தனித்தனி வழக்காகவே தேர்தல் வழக்குத் தொடர முடியும். அப்படிப் பார்த்தால் அது சாத்தியம் அல்ல. எனவேதான் பொது நல வழக்காக தொடர்ந்தோம். இந்த சட்ட விதி மீறல்கள் மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் உள்ளிடப்படவில்லை. எனவே எனக்கு ரிலீஃப் வேண்டுமென்றால் நான் பொதுநல வழக்குதான் தொடரமுடியும்’ என்று நாங்கள் அளித்த விளக்கத்தை அளித்து வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் என்பவர் வாதிட்டார், ‘அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் தேர்தல் அதிகாரிக்கு வேட்புமனுவை ஏற்கும் நிராகரிக்கும் அதிகாரம் உண்டு’ என்று அவர் கூறினார். ஆனால் தேர்தல் அதிகாரிக்கும் சட்டவரைமுறைகள் இருக்கின்றன. அவர் சட்டத்துக்கு உட்பட்டுதான் வேட்பு மனுவை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்’ என்று எங்கள் தரப்பில் வாதிட்டோம்.
நீதிபதிகள், ‘நின்றவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் தேர்தல் ஆணையம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பிரபலமானவர்கள். அவர்களுடைய கட்சிகளும் பிரபலமான கட்சிகள்தான். அப்படியிருக்கும்போது தேர்தல் அதிகாரிக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்வது ஏற்புடையதாக இருக்காது’ என்று சொல்லி மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
அதன்படி விழுப்புரம் எம்பி ரவிக்குமார், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி. சின்ராஜ், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். அதுமட்டுமல்ல… மேற்குறிப்பிட்டோரை தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் என்று சான்றொப்பம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கும் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்.
இதற்கு கணேசமூர்த்தி, ரவிக்குமார் ஆகிய இருவர் மட்டுமே பதிலளித்தனர். கணேசமூர்த்தி, ‘நான் மதிமுக மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் தேர்தலில் போட்டியிட்டேன்’ என்று கூறியிருந்தார். ரவிக்குமாரோ, ‘நான் திமுகவை சேர்ந்தவன் தான்’ என்ற ரீதியில் பதிலளித்திருந்தார். ரவிக்குமார் சார்பாக அந்த பதிலை தாக்கல் செய்ததே தற்போதைய திமுக எம்பியும் வழக்கறிஞருமான வில்சன் தான்.
அடுத்த இரு வாய்தாக்களுக்குப் பிறகு இந்த பொது நல வழக்கு கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் தலைமை நீதிபதி நிலுவையில் இருக்கும் பொது நல மனுக்களை வேகமாக ஆராய்ந்து முடிவுக்குக் கொண்டுவந்தார். அதில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளேன்” என்று விரிவாக விளக்கினார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான எம்.எல். ரவி.
இந்த நிலையில்தான் வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக சின்னத்தில் நிற்கவேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்கள் மதிமுக மற்றும் விசிகவினர்.
நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள், மதிமுக நிர்வாகிகள்,
“வர இருக்கும் தேர்தலில் தேர்தல் அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் செயல்படுவார்கள். ஒருவேளை மத்திய அரசின் அழுத்தத்தால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலும் படலாம் என்பதால் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
ஒருவேளை வேட்பு மனு ஏற்கப்பட்டு போட்டியிட்டு ஜெயித்துவிட்டால் கூட… அடுத்து ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தால் மக்களவை சபாநாயகரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் கூட செய்ய நேரிடலாம். திருணமூல் காங்கிரஸ் எம்பி மொஹுவா தகுதி நீக்கம் செய்யப்பட்டதையெல்லாம் இந்த நாடு பார்த்திருக்கிறதே… அதனால் எதுவும் நடக்க வாய்ப்புண்டு.
இந்த வழக்கு மட்டுமல்ல… கள ரீதியான காரணங்களும் இருக்கின்றன.
கடந்த 2019 தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி வற்புறுத்தியது திமுக தலைமை. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் தினத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் பானை கிடைத்தாலும் அதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெற்றார். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றால்… அதிமுகவை சேர்ந்த தலித் வாக்குகள் வருவதில் சிரமம் இருக்கிறது. அதேநேரம் சிறுத்தைகள் தனி சின்னத்தில் நின்றால் அதிமுகவை சேர்ந்த தலித்துகளும் சிறுத்தைகளுக்கு வாக்களிக்கிறார்கள்.
சின்னத்தை பார்த்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்ற காலம் கரையேறிவிட்டது. இப்போது மக்கள் யோசிக்கிறார்கள். அதனால் சின்னம் காரணமாக வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கிறன” என்கிறார்கள்.
மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் 6 தொகுதிகளில் போட்டிட்டது. காட்டுமன்னார் கோவில் – சிந்தனை செல்வன், வானூர் – வன்னி அரசு, அரக்கோணம் – கௌதம சன்னா, செய்யூர் – பாபு, திருப்போரூர் – பாலாஜி, நாகப்பட்டினம் – ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் வேட்பாளர்களாக நின்றனர். தனி சின்னம் என்பதில் உறுதியாக இருந்து தேர்தல் ஆணையத்தின் மூலம் பானை சின்னத்தை பெற்றார்கள். பானை சின்னத்தில் நின்ற நிலையில் 6 இல் வானூர், அரக்கோணம் தவிர மற்ற 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர் சிறுத்தைகள். எனவே இதே பாணியை மக்களவைத் தேர்தலிலும் பின்பற்ற உறுதியாக இருக்கிறார்கள் சிறுத்தைகள்.
ஆனால் ம.தி.மு.க, ம.ம.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்டவை உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டன. இப்போது இவர்களும் எம்பி தேர்தலில் நின்றால், தனி சின்னத்தில்தான் நிற்பது என்ற முடிவில் இருக்கின்றனர். தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கும் இதுதான் சரி என்கிறார்கள் அவர்கள்.
அதேநேரம் கூட்டணிக் கட்சிகள் தனி சின்னங்களில் நின்றால் மக்களவையில் திமுகவின் பலம் உதயசூரியன் சின்னம் என்ற அடிப்படையில் குறையும் சூழலும் உண்டாகும்.
திமுகவோ, ‘இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் இருக்கிறது. அதிமுகவிலும் இந்த நடைமுறை இருக்கிறது. அரசியல் ரீதியாக இதை பாஜக கையிலெடுக்கலாம் என்றால், அவர்களுடைய தாமரை சின்னத்திலேயே வேறு கட்சியினரும் நின்றிருக்கிறார்கள். உதயசூரியன் சின்னம் வலிமையான சின்னம். மக்களிடம் எளிதாக சென்று சேரும் என்பதால் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!
–வேந்தன்
லவ்வர் படத்தில் இத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக