மாலை மலர் : இந்தியாவின் 'பொருளாதார தலைநகரம்' என அழைக்கப்படும் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை, 1950களில் இருந்தே பல மாநில மக்கள் வாழ்வாதாரத்தை தேடி வரும் நகரமாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் நகரம் என்பதால் பலவித போக்குவரத்து வாகனங்கள் அங்கு புழக்கத்தில் உள்ளன.
1960களில் இருந்து அங்கு பிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடெட் (PAL) நிறுவனத்தின் "பிரிமியர் பத்மினி" (Premier Padmini) டாக்சிகள் மிகவும் பிரபலம்.
கருப்பு-மஞ்சள் என இரு நிறங்கள் மட்டுமே தீட்டப்பட்டதால் காலி-பீலி என மக்களிடையே பிரபலமடைந்த இந்த வாடகை கார்களின் ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.
வாகனங்களிலிருந்து வரும் புகையினால் ஏற்படும் சுகாதார கேட்டை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு, 20 வருடங்களான வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்தது. கடைசி பிரிமியர் பத்மினி 2003 அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, நேற்றிலிருந்து இவை சாலையிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டன.
மும்பையின் பிரபாதேவி பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் கர்சேகர், கடைசியாக பதிவு செய்யப்பட்ட டாக்ஸியின் உரிமையாளராவார். இந்த டாக்சி "மும்பையின் பெருமை, எனது வாழ்க்கை" என அவர் தன் வாகனத்தை குறித்து உருக்கமாக தெரிவித்தார்.
புள்ளி விவரங்களின்படி சுமார் 40 ஆயிரம் காலி-பீலி டாக்சிகள் மும்பையில் உள்ளன. இவையனைத்தையுமே இனி சாலைகளில் காண முடியாது.
சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவையில் இருந்த காலி-பீலிக்களை மும்பை மக்கள் கனத்த இதயத்துடன் பிரிவதாக கூறுகிறார்கள். எனவே, இவற்றில் சில வாகனங்களையாவது அருங்காட்சியகத்தில், அரசாங்கம், காட்சிக்கு வைக்க வேண்டும் என மும்பை மக்கள் விரும்புகின்றனர்.
இந்தி உட்பட ஏராளமான இந்திய திரைப்படங்களில் காலி-பீலிக்கள் முக்கிய மறைமுக கதாபாத்திரமாக இடம்பெறுவது வழக்கம்.
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார், பிரிமியர் பத்மினி என பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல பிரபலங்கள் காலி-பீலி குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னணி தொழிலதிபர் ஆனந்த மகிந்திரா இது குறித்து தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக