BBC News தமிழ் : மாணவர்களுக்கான விசா திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்த கனடா
மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது இந்திய மாணவர்களின் கனவாக இருக்கிறது.
குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கின்றன. இதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் முகவர்கள் மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது.
சமீபத்தில், போலி ஆவணங்களுடன் கனடா சென்ற இந்திய மாணவர்களை நாடு கடத்தும் அரசின் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவைச் சேர்ந்த 700 மாணவர்கள் வரை இந்த மோசடியில் பாதிக்கப்பட்டனர்.
அப்போது, கல்வி நிறுவனங்கள், நாடுகள், அமைப்புகளுடன் இணைந்து இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் முயற்சிப்போம் என்று கனடா அரசு கூறியது. அரசிடம் இருந்து கூறப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச மாணவர்களை பாதுகாக்கும் விதமாக புதிய நடவடிக்கைகளை கனடா அறிவித்தது.
புதிய விதிகளில் என்ன உள்ளன?
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் மார்க் மில்லர், கனடாவின் 'சர்வதேச மாணவர் திட்டத்தை' வலுப்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்தப் போவதாக அறிவித்தார். கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.
கனடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, கனடாவில் முதுகலைக் கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் (DLIகள்) ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் ஐஆர்சிசியுடன்(Immigration refugees and citizenship canada -IRCC)சரிபார்க்க வேண்டும்.
இந்த விதியின் கீழ், ஒவ்வொரு டி.எல்.ஐ.யும் ஐஆர்சிசியிலிருந்து சரிபார்க்கப்பட்ட 'ஏற்றுக்கொள்ளும் கடிதத்தை' பெற வேண்டும்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதோடு உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்று கனடா அரசு கூறுகிறது. இந்த புதிய கொள்கை டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.
செப்டம்பர் 2024 இல் மாணவர் சேர்க்கை தொடங்கும் நேரத்தில், கல்வி நிறுவனங்களுக்கு செயல்முறையைச் செயல்படுத்த நெகிழ்வுத் தன்மையைக் கொடுக்கும் வகையில் ஐஆர்சிசி ஒரு செயல்முறையை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி நிறுவனங்கள் மிகக் குறுகிய காலத்தில் படிப்பு விசா வழங்குவது போன்ற பல நன்மைகளையும் பெறக்கூடும்.
எதிர்காலத்தில் IRCC முதுகலைப் பட்டப்படிப்பு பணி அனுமதித் திட்டத்தை மறுமதிப்பீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள வேலை வாய்ப்புகள், அதன் சந்தை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு பிராந்தியத்தின் தேவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், குறிப்பாக பிரெஞ்சு மக்கள் பெரும்பான்மையான பகுதிகளின் தேவைகள் என்றும் கனடா அரசு இணையத் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா?
கனடாவின் இந்த புதிய நடமுறை குறித்து 'ட்ரூமேட்டிக்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி'யின் இயக்குநர் சுரேஷிடம் பிபிசி சார்பில் பேசினோம்.
“இந்தியாவைச் சேர்ந்த சில மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கல்வி நிலையங்களில் சேர்ந்ததாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இனி ஒரு கல்லூரி அட்மிஷன் லெட்டர் கொடுக்கிறது என்றால் அதனை அவர்களே சரி பார்க்க வேண்டும். ஒரு மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது நாங்கள் அட்மிஷன் கொடுத்திருக்கிறோம் என்று கல்லூரியோ பல்கலைக்கழகமோ உறுதி செய்ய வேண்டும்."
"இதற்கு முன்பு மாணவர்கள் விசாவுக்காக விண்ணப்பிக்கும்போது கல்வி நிலையங்களுக்கு அதில் பங்கு இருக்காது. தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம், மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது ஐஆர்சிசி குறிப்பிட்ட கல்வி நிலையத்தைத் தொடர்புகொள்ளும். அப்போது, அந்த கல்வி நிலையம் குறிப்பிட்ட மாணவருக்கு அட்மிஷன் கொடுத்திருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது கனடாவும் இதனை கொண்டுவந்திருக்கிறது என்றும் சுரேஷ் குமார் கூறினார்.
இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாதகமா, சாதகமா என்று கேட்டபோது, “இரண்டுமே கிடையாது. தமிழ்நாடு மாணவர்கள் எவ்வித மோசடியிலும் ஈடுபட்டதில்லை. அவர்கள் முறையாக விசாவுக்கு விண்ணப்பிப்பதால் அவர்களுக்கு இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை” என்றார்.
மேலும், நிஜ்ஜார் மரணம் தொடர்பாக கனடா - இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் சமீப நாட்களாக கனடாவில் கல்வி கற்பது தொடர்பாக விசாரிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பேர் வரை கல்வி கற்பதற்காக கனடாவுக்கு செல்கின்றனர். சமீபத்திய சூழல்கள் காரணமாக கனடாவுக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். வேறு நாடுகளில் கல்வி கற்க முடியுமா என்று கேட்கிறார்கள். பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பது குறித்து அதிகம் விசாரிக்கின்றனர்” என்றார்.
சர்வதேச மாணவர்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு எந்தளவு பங்காற்றுகின்றனர்?
சர்வதேச மாணவர்கள் கனடா பொருளாதாரத்திற்கு சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்களிக்கின்றனர். கனடாவின் வாகன உதிரிபாகங்கள், மரப்பொருட்கள், விமான ஏற்றுமதி ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றாக இணைத்தால், சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு அதைவிட அதிகமாக இருக்கும்.
கனடாவில் சுமார் 2 லட்சம் வேலைகள் இவர்களை நம்பியே உள்ளன.
சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் சரிவு காரணமாக கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 இல் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது.
கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் மார்க் மில்லர் பேசும்போது, “வெளிநாட்டு மாணவர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன, அவர்கள் கனடாவுக்கு வருவதன் மூலம் நிறைய கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் படிப்பின் போது கிடைக்கும் பல அனுபவங்களால் மேம்படுத்தப்படுகின்றன. அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை. அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடையும், ஏமாற்றும் நபர்களை இந்த செயல்பாடுகளில் இருந்து அகற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.
“அவர்கள் இங்கு படித்து இங்கு வேலை செய்தாலும் சரி அல்லது அவர்களின் சொந்த நாட்டிற்கு படிக்கச் சென்றாலும் சரி கனடாவில் அவர்கள் செலவிடும் நேரத்தை அவர்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக மாற்றுவதே எங்களின் நோக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கனடா இந்திய மாணவர்கள்
பட மூலாதாரம், Getty Images
மேலும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சர்வதேச மாணவர்கள் கனடாவிற்கு பங்களிக்கும் விதம் விலைமதிப்பற்றது என்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மார்க் மில்லர் தெரிவித்தார்.
கனடா அரசு இணையத்தளத்தின்படி, போலி ஆவண சம்பவம் தொடர்பாக ஐஆர்சிசியால் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மாணவர்களிடம் கனடா எல்லை சேவை முகமையுடன் இணைந்து அவர்கள் விசாரணை நடத்தினர். தவறு செய்யாத மாணவர்கள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அக்டோபர் 12ம் தேதி வரையில் மொத்தம் 103 மாணவர்களை சரிபார்த்தத்தில் அவர்களில் 40 மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ள பிரஜேஷ் மிஸ்ரா என்ற முகவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற நபர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனடா அரசு கூறியுள்ளது.
கனடாவில் குறியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனடாவில் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, சர்வதேச மாணவர்கள் உட்பட 12 லட்சம் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தனர்.
கனடாவின் மக்கள் தொகை இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி 4 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 11.58 லட்சம் அதிகம். அங்கு குடியுரிமை பெறாத சுமார் 21.98 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கனடாவில் 4.69 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமையும், 7 லட்சம் பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களும் அடங்குவர்.
பொருளாதார வளர்ச்சிக்கு குடியேற்றம் முக்கிய காரணமாக கருதப்பட்டாலும், கனடாவிலும் சில பிரச்னைகளையும் இது உருவாக்கியுள்ளது.
அங்கு வீடுகளுக்கான தேவை பெருமளவு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு நாட்டின் குடியேற்ற உத்தியே காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நிலைமை சமாளிக்க முடியாததாகிவிட்டது என்றும் பலர் கருதுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக