Kalaignar Seithigal - Praveen : அதிகபட்சம் தனது கட்சியை படுதோல்வி அடையாமல் காப்பதுதான் ரிஷி சுனக் செய்யும் மிகப்பெறும் பணியாக இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.
இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பதவியேற்ற சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாக அமைந்துள்ள நிலையில், நெருக்கடியை சமாளிக்க பல அதிரடி நடவடிக்கைகளை ரிஷி சுனக் எடுத்து வருகிறார். எனினும் தொடர்ந்து பிரதமர்கள் அங்கு மாறிவரும் நிலையில் மக்களிடையே ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நம்பிக்கை இழந்து வருவதாக தொடர்ந்து அங்கு கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் 61% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சி வேட்பாளர் வெறும் 22 % வாக்குகளையே பெற்றுள்ளார். இந்த நிலைதான் இன்னும் 2 ஆண்டுகளில் அங்கு நடக்கும் பொதுதேர்தலில் நடக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் சார்லஸ் வாக்கரே கூறுகையில், ”பிரதமர் ரிஷி சுனக் நிலைமையைச் சமாளிக்க நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், அவரால் 2024இல் நடைபெறும் பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையவதை தவிர்க்க முடியாது. அதிகபட்சம் படுதோல்வி அடையாமல் காப்பதுதான் அவர் செய்யும் மிகப்பெறும் பணியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக