ஞாயிறு, 27 நவம்பர், 2022

உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்

உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்

zeenews.india.com     - S.Karthikeyan  : திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக கருதப்படும் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தாலும், அதனை உடனே கொடுத்தால் அரசியல் வட்டாரத்தில் திமுக மீதான விமர்சனங்கள் அதிகரிக்க வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் கட்சி தலைமை பொறுமை காத்துவருகிறது.


இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏவாகவே அமைச்சருக்கு நிகரான முக்கியத்துவம் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் மூத்த அமைச்சர்களின் துறைகளில் புதிதாக தொடங்கப்படும் திட்டங்களைக் கூட உதயநிதி ஸ்டாலின் தான் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இன்றும், பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை மக்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் அரசு பேருந்துகளில்,  புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் சேவையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. 
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 150 பேருந்துகளில், முதற்கட்டமாக ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பொதுமக்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  பேருந்து நிறுத்ததின் பெயர் முன்கூட்டியே அறிவிக்கப்படும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர், பல்லவன் இல்லத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை பேருந்தில் பயணித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "வெளியூரிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு பேருந்து பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தானியங்கி அறிவிப்பான் சேவை அனைத்து அரசு பேருந்துகளிலும் கொண்டுவர போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்கும்" என கூறினார்.

கருத்துகள் இல்லை: