BBC Tamil : தமிழ்நாட்டின் விழுப்புரம் கண்டமங்கலம் அருகேயுள்ள கோண்டூரில் புதியதாக கட்டபட்ட செப்டிங்டேங்கில் பூச்சு வேலைக்காக உள்ளே இறங்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சு வேலை பணி செய்வதற்காக இன்று பாக்கம் கிராமத்தை சார்ந்த மேஸ்திரி மணிகண்டன், அவரது உதவியாளர்கள் அய்யப்பன், அறிவழகன் ஆகியோருடன் உள்ளே இறங்கி உள்ளனர்.
அப்போது மணிகண்டன், அய்யப்பன் ஆகிய இருவரும் செப்டிக்டேங்கின் உள்ளே இறங்கிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மேலே இருந்த அறிவழகன் உள்ளே இறங்கியுள்ளார்.
அவரும் மயங்கி விழவே அருகில் இருந்த கடையின் உரிமையாளர் சேகர் என்பவர் உள்ளே விழுந்த மூவரின் மீதும் தண்ணீரை ஊற்றி எழுப்ப முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், மூவரும் எழுந்திருக்காமல் இருந்ததை அடுத்து அருகிலுள்ள கண்டமங்கலம் காவல் நிலையத்துக்கும் அரசு மருத்துவமனைக்கும் சேகர் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், மருத்துவர்கள் உதவியுடன் மூவரையும் மேலே எடுத்துள்ளனர்
ஆனால், சம்பவ இடத்திலேயே மணிகண்டன், அய்யப்பன் ஆகிய இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மூன்றாவது நபரான அறிவழகன், மயக்கத்தில் இருந்ததை அடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கழிநீர் தொட்டியில் இறந்த இருவரது சடலத்தையும் கண்டமங்கலம் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காவல் துறை தரப்பில் நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது, "புதிதாக கட்டப்பட்ட வீட்டில் பயன்பாட்டில் இல்லாத கழிவுநீர் தொட்டியில் உள்ளே சில பூச்சு மற்றும் குழாய்கள் இணைப்பு வேலை நிலுவையில் இருந்துள்ளன. அதை நிறைவு செய்ய ஏற்கெனவே இந்த செப்டிக் தொட்டியை அமைத்த மேஸ்திரி மற்றும் அவரது உதவியாளர்கள் பணியை தொடங்கியபோது இறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டது.
பயன்பாட்டில் இல்லாத தொட்டிகளை பாதுக்காப்பாக கையாள்வது எப்படி?
கழிவுநீர் தொட்டி அல்லது பயன்பாட்டில் இல்லாத தொட்டியில் இறங்கும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க முறையாகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விழுப்புரம் தீயணைப்புத் துறை காவலர் வேல்முருகனிடம் பிபிசி பேசியது.
"இதுபோன்ற இடங்களில் வேலைக்குச் செல்லும் போது அதனைக் கையாளுவதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை கையாள வேண்டும்.
நீர் தேங்கும் ஆழமான பகுதிகளான சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்திருந்தால், அதில் ஆளை மயக்கி மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அளவிற்கு விஷ வாயு உருவாகிவிடும்.
அந்த இடத்தில் வேலை செய்யும் போது, உள்ளே இறக்குவதற்கு முன்பு கையாள வேண்டி வேலைகள் மிகவும் எளிதானது," என்கிறார் வேல்முருகன்.
"முதலில் நீர் குழாய் மூலமாகத் தண்ணீர் முழுவதுமாக படரும் வகையில் பீச்சி அடிக்க வேண்டும். அப்போது தண்ணீரை உள்ளே சுற்றி அடிக்கும் போது தொட்டியின் அடியில் காற்று கொஞ்சம் கொஞ்சமாக அடியிலிருந்து நிரம்ப ஆரம்பிக்கிறது. இதன் மூலமாகத் தொட்டியில் விஷவாயு இல்லாமல் செய்துவிடுகிறது. அதன் பின்னர் நாம் உள்ளே இறங்கும்போது அந்த பாதிப்பும் ஏற்படாது. இதை நம் வீட்டில் பயன்படுத்தும் சிறிய நீர் தெளிப்பு குழாய் மூலமாகக் கூடச் செய்யலாம்.
அடுத்ததாக ஈரம் நனைத்த துணியை மூக்கு மற்றும் வாயை மறைக்கும் படி மூடி உள்ளே இறங்கலாம். அவ்வாறு இறங்கும் போது, நமக்குத் துணியில் உள்ள ஈரம் மூலமாக போதுமான காற்று கிடைக்கும். குறிப்பாக விஷ வாயு நுரையீரலை நேரடியாகத் தாக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து விடுவோம். ஆனால் ஈரத்துணி கட்டியிருக்கும் போது விஷ வாயு நுரையீரலை நேரடியாகப் பாதிக்காது. தீயணைப்புத் துறையினர் இதுபோன்ற இடங்களைக் கையாளும் போது சுவாச உபகரணம்(breathing apparatus) கொண்டு செல்வோம். அதில் சுவாச உபகரணம் மாட்டிக்கொண்டு இறங்கும் போது தேவையான ஆக்சிசன் கிடைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது," எனத் தெரிவித்தார் தீயணைப்புத் துறை காவலர். பொது மக்கள் இதுபோன்ற இடங்களைக் கையாளும் போது அனுபவம் வாய்ந்த நபர்களும் மூலமாக இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறிய வேல்முருகன், மேற்கூறிய முறைகளை முறையாகக் கையாண்டால் மூச்சுத் திணறல் ஏற்படாது, எந்த பாதிப்பும் நேராது என்று கூறினார் அவர்.
"பயன்படுத்தாத நிலப்பகுதியில் உள்ள பள்ளம் அல்லது நான்கு அடிக்கு மேல் ஆழம் உள்ள தொட்டி நீண்ட காலங்களாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்திருந்தால் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்ட பிறகே உள்ளே இறங்க வேண்டும்.
அந்த காலகட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத பள்ளம் அல்லது கிணற்றில் இறங்குவதற்கு முன்பு, கோழியைக் கட்டி உயிருடன் இறக்குவார்கள். விஷ வாயு இருந்தால், கோழி இறந்துவிடும். அல்லது இராந்தல் விளக்கை கயிறு மூலமாக உள்ளே இறக்கும் போது காற்று இல்லாத பகுதியைச் சென்றடையும் போது அந்த விளக்கு அணைந்துவிடும். அப்போது கிணற்றின் உள்ளே சுற்றி நீரைப் பீச்சி அடித்து பின்னர் உள்ளே இறங்குவார்கள்.
கழிவுநீர் தொட்டி, பயன்பாட்டில் இல்லாத இல்லாத தொட்டியைக் கையாளும் போது முறையாகப் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே உள்ளே இறங்க வேண்டும். தண்ணீர் அடிக்காமல் உள்ளே இறங்கவே கூடாது. அல்லது இதில் இறங்குவதில் மேலும் சந்தேகம் இருந்தால் தொட்டியைத் திறந்துவிட வேண்டும். பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு போகும் போது உள்ளே இருக்கும் விஷ வாயு முழுவதுமாக வெளியேறி உள்ளே காற்று சென்றுவிடும். அதன்பிறகு உள்ளே இறங்கலாம்," என தீயணைப்புத் துறை காவலர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக