இரா.மன்னர் மன்னன். - ஆவணம் :க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.
இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.
ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.
ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது.
அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.
தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள்.
எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது.
மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.
கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.
தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.
அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.
தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான்,
‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.
தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக