tamil.oneindia.com - Nantha Kumar R : சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட எம்எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என ஏராளமான பாஜகவினர் மேடைகளில் அழுது புலம்பி வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச சட்டசபையின் காலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மும்முனை போட்டி
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டுகிறது. அதேவேளையில் பாஜகவை தோற்கடித்து அரசை கைப்பற்ற காங்கிரஸ் முடிவு செய்து வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. இதனால் இமாச்சல பிரதேச அரசியல் களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லை
மேலும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்துள்னர். பாஜகவை பொறுத்தமட்டில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 11 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சில இடங்களில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்ளடி வேலை பார்க்க துவங்கி உள்ளனர். இன்னும் சிலர் என்ன செய்வது அறியாமல் மனதுக்குள் அழுதபடி உள்ளனர். அதாவது பல பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த நிலையில் அது நடக்காததால் புலம்பி வருகின்றன. அதேநேரத்தில் கட்சி தலைமைக்கு எதிராகவும் செயல்பட மனம் வராமல் கவலையில் உள்ளனர்.
ஜேபி நட்டா- அனுராக் தாகூர்
இமாச்சல பிரதேசம் என்பது பாஜக மாநில தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமாகும். இதேபோல் மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாகூரின் சொந்த மாநிலமும் இமாச்சல பிரதேசம் தான். இதனால் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டிய பொறுப்பு இவர்கள் 2 பேருக்கும் அதிகமாக உள்ளது. எனவே அவர்கள் சார்பில் அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலரும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டுள்ளனர். இருப்பினும் பலருக்கும் தங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லையே என்ற வருத்தம் உள்ளதாக கூறப்படுகிறது.
கண்ணீர் சிந்தும் பாஜகவினர்
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேசத்தில் பாஜக தலைவர்கள் பொதுமேடைகளில் கண்ணீர் சிந்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் முதல் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் தங்களின் வேதனைகளை பொது மேடைகளில் கூறி கண்கலங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மேடையில் பேசினார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
அப்போது, அனுராக் தாகூர் ‛‛2017சட்டசபை தேர்தலுக்கு பிறகு எனது தந்தை பிரேம் குமார் தூமல் வீட்டில் அமர்ந்து இருந்தாரா?. மாநிலத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்ற ஒரு தலைவர் என்றால் அது எனது தந்தை தான். அவரது உடல்நலம் பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இயங்கினார். தன்னை அர்ப்பணித்து கொண்ட ஒரு அமைப்புக்கு அவர் துரோகம் செய்வாரா? '' எனக்கூறி கண்ணீர் வடித்தார். அதாவது 2017 சட்டசபை தேர்தலின்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய மத்திய அமைச்சரான அனுராக் தாகூரின் தந்தை பிரேம் குமார் தூமல் அறிவிக்கப்பட்டார். பாஜக தேர்தலில் வென்றது. இருப்பினும் பிரேம் குமார் தூமல் தோல்வியடைந்தார். இதனால் தான் முதலமைச்சர் பதவி ஜெய்ராம் தாகூருக்கு சென்றது. இருப்பினும் 78 வயது நிரம்பிய நிலையில் பிரேம் குமார் துமல் தோல்வியடைந்தாலும் கட்சி பணியை தொடர்ந்தார். இந்த வலியை தான் தற்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறி கண்கலங்கினார்.
மகேஷ்வர் சிங்
இதேபோல் எம்பி, எம்எல்ஏ என பல்வேறு பொறுப்புகளில் வகித்து மூத்த தலைவராக உள்ள மகேஷ்வர் சிங்கும் கண்ணீர் வடித்துள்ளார். தற்பாது இமாச்சல பிரதேச மாநிலம் குலு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவருக்கம் பாஜக மேலிடம் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் ஜேபி நட்டா பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்டு, ‛‛பாஜகவில் நான் அழகான அரசியல் பயணம் மேற்கொண்டேன்'' என கூறி கண்கலங்கினார்.
வீட்டில் அழுத பாஜகவினர்
அதேபோல் அனி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக கிஷோரி லால் உள்ளார். இவர் பஹாரி பாடலுக்கு ஆதரவாளர்களுடன் நடனாமாடி பிரசாரம் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வீட்டில் இரந்தேன். ஆனால் எனது ஆதரவாளர்கள் என் வீட்டில் வந்து அழுதனர். தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. இருப்பினும் நான் மறுத்துவிட்டேன். ஆனாலும் ஜேபி நட்டா, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோரிடம் .இருந்து போன் வந்தது. இதனால் தான் பிரசாரத்தில் பங்கேற்றேன்'' எனக்கூறி கண்கலங்கினார்.
மாறி மாறி ஆட்சி
தற்போதைய சூழலில் பாஜகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என மொத்தம் 30 பேர் வரை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து ஆட்சி அமைத்தது இல்லை. ஒருமுறை காங்கிரஸ், மற்றொரு முறை பாஜக என மாற்றி மாற்றியே வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்துள்ளனர். இது கடந்த . 1985ல் இருந்து நடந்து வருகிறது. இது வரலாறு இந்த தேர்தலிலும் தொடருமா? அல்லது மாறுமா? என்பதை நாம் பொறுத்திருந்து டிசம்பர் 8 ரிசல்ட் அன்று தான்பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக