தினமணி : சென்னை: தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 446 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 3 கல்லூரிகளில் மட்டும் 100% இடங்கள் நிரப்பியுள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பி.இ., பி.டெக். என பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடந்தது.
இரண்டு சுற்றுகள் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 323 கல்லூரிகளில் இதுவரை 10% இடங்கள் கூட நிரப்படப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில் 12 கல்லூரிகளில் மட்டுமே 90% இடங்கள் நிரம்பின. 50% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 48 மட்டுமே. 80 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை.
இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளிலும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி, கிண்டி பொறியியல் கல்லூரி, எஸ்எஸ்என் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
இரண்டு கட்ட கலந்தாய்வுகளிலும் சேர்த்து தற்போது வரை 27,740 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு தெரிவித்திருந்தது.
மேலும், மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில் 49,043 மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு சுற்றுகளில் காலியாக உள்ள 1,11,511 இடங்களுக்கு 1,10,701 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தமுள்ள 446 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகள் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பின. கடந்த ஆண்டு, மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, ஒன்பது கல்லூரிகள் அனைத்து இடங்களும் நிரப்பின.
90 சதவீத இடங்களுக்கு மேல் நிரம்பிய 33 கல்லூரிகளில் 17 தனியார் கல்லூரிகள். 173 கல்லூரிகளில் 10% க்கும் குறைவான இடங்களே நிரப்பியுள்ள நிலையில், சனிக்கிழமை முடிவடைந்த மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு 25 கல்லூரிகளில் ஒரு இடங்கள் கூட நிரப்ப முடியவில்லை.
100% சேர்க்கை பெற்ற மூன்று கல்லூரிகள் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி, பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி.
இந்த ஆண்டு மூன்று சுற்றுகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகள் அதிகமானோர் சேர்க்கை பெற்றுள்ளதால், பிற துறையைச் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை இல்லாதது தமிழக கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
இதையும் படிக்க | கூகுள் நிறுவனத்துக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம்
இதுகுறித்து தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:
அரசு பொறியியல் கல்லூரிகளில் நிலைமை மோசமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மையான வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஐடி போன்றவற்றில் எஸ்டி பிரிவின் கீழ் இன்னும் சில இடங்கள் காலியாக உள்ளன. தரவுகளின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படும் 6 கல்லூரிகளிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், மூன்றாம் சுற்று கலாந்தாய்வுக்குப் பிறகும் 50% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை.
“அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளில் உள்கட்டமைப்பு பிரச்னைகள் இருப்பதால் மாணவர்களை கவர முடியவில்லை. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியின் சேர்க்கை நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்லூரி என்றாலும், மூன்றாம் சுற்று கலந்தாய்வுகளுக்குப் பிறகு 50% இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை, ”என்று கூறினார்.
"அரசும், பல்கலைக் கழகமும் இந்த பிரச்னையை ஆய்வு செய்து, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பத்தாண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை ஆய்வு செய்து வரும் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.
கல்வியாளரும், தொழில் ஆலோசகருமான டி.நெடுஞ்செழியன், இதனால் அரசு கல்லூரிகள் நஷ்டமடைந்து வருகின்றன. சேர்க்கை செயல்பாடுகளில் சிக்கல்கள் உள்ளன.
“தனியார் கல்லூரிகள் மாணவர்களை தங்கள் கல்லூரிகளுக்கு இழுக்க ஆன்லைன் சேர்க்கை செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. 7.5% ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் சேர்க்கைக்கு தகுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்த பல நிகழ்வுகள் இந்த ஆண்டு காண முடிந்தது” என்றார். மேலும், 7.5% ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதால் மாநில அரசும் நஷ்டம் அடைந்து வருகிறது என்று நெடுஞ்செழியன் கூறினார்.
மூன்றாம் சுற்று கலந்தாய்வில், பொதுப் பிரிவில் தகுதி பெற்ற 49,043 மாணவர்களில், 24,727 அல்லது 50.42% மாணவர்கள் மட்டுமே ஒதுக்கீடு பெற்றுள்ளனர். நான்காவது மற்றும் இறுதி கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. 61,771 மாணவர்கள் இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் மற்றும் அவர்கள் தங்கள் விருப்பங்களை நிரப்ப வேண்டும்.
அரசு கல்லூரிகளில் ஆன்லைன் முறை தோல்வியா?
பொறியியல் படிப்பு சேர்க்கை செயல்பாட்டில் உள்ள சிக்கல்களால் அரசு கல்லூரிகள் நஷ்டமடைந்து வருகின்றன. "தனியார் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஈர்ப்பதற்காக ஆன்லைன் சேர்க்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றன" என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
சமீப காலமாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருவது கல்வி வளர்ச்சியில் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக