திங்கள், 31 அக்டோபர், 2022

முந்தைய தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் பலமான கூட்டணியை அமைப்பார் -உதயநிதி ஸ்டாலின் ! ( பாமக உள்ளே வரும்?)

முந்தைய தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் பலமான கூட்டணியை அமைப்பார் -உதயநிதி ஸ்டாலின் !

Kalaignar Seithigal -  KL Reshma  : முதல்வர் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் கொண்டு செல்ல வேண்டும் என திமுக எம்.எல்.ஏ-வும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு - வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு - கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் - அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், தி.மு.க மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் இதில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழக முதல்வர் தினமும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதோடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தற்போது வரையில் 50% வரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோர்.

தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். சொன்னது போல் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றார். அதையும் செய்து காண்பித்து உள்ளார். இது பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தல்களிலும் திமுக கட்சிக்கு தொடர் வெற்றி கிடைத்து வருகிறது. 4 தேர்தல்களிலும் திமுக தலைவர் மற்றும் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். 10 ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தியவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

திமுக ஆட்சியில் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் தான், நான் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். முதல்வரின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேர உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் வெற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கையில் தான் உள்ளது.

முதல்வர் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். இதை வைத்து தான் மக்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 2019 மற்றும் 2021 தேர்தலில் எப்படி வெற்றி கூட்டணியை முதல்வர் அமைத்தரோ அதைவிட பலமான வெற்றி கூட்டணியை அமைப்பார்.

கடந்த 10 வருடமாக அதிமுக தமிழகத்தை ஆண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்தார். அதன் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

இதற்கு நடுவில் இருந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் 6 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டு சென்று விட்டார். இவ்வளவு கடன் சுமையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து வருகிறார்" என்றார்.

கருத்துகள் இல்லை: