ஞாயிறு, 20 நவம்பர், 2022

மலேசியா தேர்தல்: தொங்கு நாடாளுமன்றம்- முதல் முறையாக கூட்டணி அரசு! மாஜி பிரதமர் மகாதீர் ஷாக் தோல்வி!

tamil.oneindia.com  -  Mathivanan Maran  : கோலாலம்பூர்: மலேசியா பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக மகாதீர் தேர்தல் தோல்வியை எதிர்கொண்டுள்ளார்.
மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மொத்தம் 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
மலேசியா தேர்தல் முடிவுகள்


மலேசியா அரசியல் கட்சிகளில் பக்கத்தான் ஹரப்பான் 80 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை அந்த கூட்டணி பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய தேசிய முன்னணி கூட்டணி வெறும் 35 இடங்களில்தான் வென்றது. மலேசியாவின் முக்கியமான அம்னோ கட்சியும் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. ஆனால் பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் தங்கள் வசம் இருக்கிறது என்கிறார்.

50 ஆண்டுகளில் மகாதீரின் முதல் தோல்வி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர், கெடா மாநிலத்தின் லங்காவி தொகுதியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். 1969-ம் ஆண்டு முதல் மகாதீர் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தற்போது வெறும் 4,566 வாக்குகள்தான் பெற்றார். 50 ஆண்டுகளில் மகாதீர் சந்திக்கும் முதல் தேர்தல் தோல்வி இது.

தோற்ற தலைகள்
மகாதீரைப் போல பல பெருந்தலைகள் இத்தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டிருக்கின்றன. பக்கத்தான் ஹராப்பான் தலைவரின் மகள் நூருல் இஸ்ஸா, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கவிழ்த்த அஸ்மின் அலி, முன்னாள் அமைச்சர் கைரி ஜமலூதீன், முன்னாள் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல், மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் தோல்வி அடைந்த முக்கியமானவர்கள். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன், சுங்கை சிப்புட் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கேசவன் சுப்ரமணியத்திடம் தோல்வியை தழுவினார்.

இளம் வாக்காளர்கள்
மலேசியா தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகையில், இளம் வாக்காளர்கள் சுனாமிப் பேரலை போல வாக்களித்திருக்கின்றனர். அவர்களது வாக்குகள் மலேசியா அரசியலை திணறடித்துள்ளது. புதியதாக ஒரு அரசியல் அணியையே இளம் மலேசியா வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது என்கின்றனர்.

வரலாற்றில் முதல் கூட்டணி அரசு
மலேசியாவில் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது; கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது திட்டவட்டமாகி உள்ளது. மலேசியாவின் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிக்கத்தான் நேசனல், தேசிய முன்னணி, சபா மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என்று சரவாக் கட்சிகள் கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டணியானது பிரதமர் பதவிக்காக முஹிதின் யாசின் பெயரை பரிந்துரைத்துள்ளது.
 

கருத்துகள் இல்லை: