சனி, 26 நவம்பர், 2022

பாஜக அமைச்சர்களின் கோரிக்கை : ஆச்சரியப்பட்ட பி.டி.ஆர்

minnambalam.com - christopher :  ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டெல்லியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு இடையே இந்தியாவின் அடுத்தாண்டுக்கான பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் 2023 – 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
அவர்களுடன் நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் கூட்டமைப்பினரும் இதில் பங்கேற்று வருகின்றனர்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபின் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

குறைந்து வரும் மாநில நிதி உரிமை!

அவர் பேசுகையில், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த கூட்டத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தன. இதை சீர்த்திருத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்த திட்டம், மத்திய-மாநில அரசின் நிதி பங்கீட்டு புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
minister ptr surprised by bjp ministers in Delhi budget meet

இது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனெனில் இதனை மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் கூறினார்கள்.

மேலும், உலகளவில் பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடிய வாய்ப்பு உள்ள நிலையில் மாநிலத்தின் கடன் எல்லைகளையும், ஜிஎஸ்டி நிவாரணம் வழங்கும் காலத்தையும் 2 ஆண்டு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

15வது நிதிக்குழுவின்படி பற்றாக்குறையை அடுத்த ஆண்டுக்குள் 3 சதவீதத்துக்குள் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது” என்று தெரிவித்தார்.

ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகை

மேலும் தமிழ்நாட்டின் கோரிக்கையாக, “ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பங்களிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய ரயில்வே திட்டங்களை வழங்க வேண்டும் என்றார்.

மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளி களைய வேண்டும். இரு அரசுகளும் தலா 49% பங்களிப்பை அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: