திங்கள், 22 ஆகஸ்ட், 2022

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் தமிழக அரசின் விதிகள் செல்லும்.. சிவாச்சாரிகளின் வழக்கு தள்ளுபடி .. சென்னை உயர்நீதிமன்றம்

tamil.oneindia.com  - Vigneshkumar  :  சென்னை: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
அனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகலாம்: கலைஞரின் கனவை நிறைவேற்றி..வரலாறு படைத்த ஸ்டாலின் அரசு!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.
அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

 இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர்கள் நியமனம், இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என 2021 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

வாதம்
பின்னர், இந்த வழக்கைத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

ஆகம விதிகள்
குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

விளக்கம்
அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தீர்ப்பு
சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகளை படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பான்டாரி நீதிபதி மாலா, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அமர்வு தமிழக அரசு கொண்டுவந்த விதிகள் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர்.

எந்த கோயில்கள்
மேலும், இந்து சமய அறநிலையத்துறை பணியாளர் விதிகள் என்பது அர்ச்சகர் நியமனத்திற்கானது மட்டும் இல்லை என்றும், அனைத்து ஊழியர்கள் நியமனங்கள் தொடர்புடையது என்பதால் அந்த விதிகளை ரத்து செய்தால் நிர்வாக சீர்குலைவு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு அர்ச்சகர் நியமன விதிகள் என்பது ஆகம விதிகளின்படி கட்டப்படாத கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

ஆய்வுக் குழு
ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில் வழிபாட்டு முறை, கோவில் நிர்வாகம், அர்ச்சகர் நியமனம் ஆகிய அனைத்தும் அந்தந்த கோவில்களுக்கான ஆகம விதிகளின்படியே பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு ஆகம விதிமுறைப்படி உள்ள கோவில்களைக் கண்டறிவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த குழுவில் சென்னை சமஸ்கிருத கல்லூரி தலைவரான என்.கோபால்சாமி, அலுவல் சாரா உறுப்பினராக அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றும், மேலும் இரண்டு உறுப்பினர்களைக் குழுவின் தலைவரின் ஆலோசனையுடன் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

அரசியலமைப்பு வழங்கிய உரிமை
அரசியலமைப்பு சட்டம் 25 மற்றும் 26ல் ஒவ்வொரு குடிமகனும் நம்புகிற மதத்தின் அடிப்படையில் வழிபாடு நடத்த உரிமையுண்டு என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஒருவேளை அரசின் விதிகள் அவர்களுக்கும் பொருந்தும் என்றால் உத்தரவிட்டால், அவர்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமைக்கு எதிரானதாகிவிடும் என்று குறிப்பிட்டு, அரசின் விதிகள் செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டுள்ளனர். அர்ச்சகர் பணியிட மாறுதல் செய்யும்போது ஒரே ஆகம விதிகளைப் பின்பற்றக் கூடிய பிற கோவில்களுக்குள் பணியிடமாற்றம் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தனர்.

கருத்துகள் இல்லை: