ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தூத்துக்குடி கொலைகள் .. அதிர்ச்சி கொடுத்த அருணா ஜெகதிசன் அறிக்கை! சட்டபேரவையில் அறிக்கை வைக்கப்படும் - அமைச்சர் ரகுபதி உறுதி

tamil.oneindia.com  -  Rajkumar R   :  அருணா ஜெகதிசன் அறிக்கை! சட்டபேரவையில் அறிக்கை வைக்கப்படும் - அமைச்சர் ரகுபதி உறுதி
சென்னை : ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்" என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
போராட்டங்கள் நூறாவது நாளை எட்டியதையொட்டி, தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர். பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. . இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த அறிக்கையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல் என்று கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அமைச்சர் ரகுபதி
இந்நிலையில் நடவடிக்கைக்குப் பிறகு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக விசாரணை ஆணையச் சட்டம், 1952 (மத்திய சட்டம் எண்.60/1952) பிரிவு-3, உட்பிரிவு (1)-ன் கீழ், மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், அரசாணை (பல்வகை) எண்.368, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு-எப்) துறை, நாள் 23.05.2018 மூலம் அரசால் அமைக்கப்பட்டது.

ஆணை வெளியிடப்பட்டது
​விசாரணை ஆணையம் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 14.05.2021 அன்று இந்த அரசுக்கு அளித்தது. அவ்வறிக்கையின் பரிந்துரையின்படி பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கவும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 30.5.2018 அன்று இறந்த, பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜ் என்பவரது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையும், திரும்பப் பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர் கல்வியும் வேலை வாய்ப்பும் தொடரத் தடையில்லா சான்று வழங்கவும், அரசாணை (பல்வகை) எண்.289, பொது (சட்டம் மற்றம் ஒழுங்கு-எப்) துறை, நாள் 26.05.2021 மூலம் ஆணை வெளியிடப்பட்டது.

நடவடிக்கை
விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ​மேற்படி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 18.05.2022 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

சட்டப்பேரவையில் அறிக்கை
​இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்" என கூறியுள்ளார்.

Tamil Nadu Law Minister S. Raghupathi has said that the final report of the Sterlite firing inquiry commission will be placed in the Tamil Nadu Legislative Assembly ; ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: