வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

மீண்டும் தமிழ்நாட்டில் 28 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு! ஒன்றிய அரசின் தமிழகம் மீதான பொருளாதார வன்முறை

 tamil.oneindia.com  : சென்னை  தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்க சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் கார், வேன்களுக்கு ரூ.5 டிரக், பஸ், போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ஏற்கெனவே 22 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது.
Are you a traveler at the following customs booths? Toll hike at 28 toll booths in Tamil Nadu


தமிழ்நாட்டில் மொத்தமாக 50 சுங்க சாவடிகள் நெடுஞ்சாலைகளில் உள்ளன. இதில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். ஏப்பல் 1ம் தேதியும் செப்டம்பர் 1ம் தேதியும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரலில் ஏற்கெனவே 22 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 28 சுங்க சாவடிகளுக்கு செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி சுங்க சாவடிகளிலும் வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்கிறது. இந்த சுங்க சாவடி வழியாக பயணிக்கும் கார், வேன்களுக்கு ரூ.5 டிரக், பஸ், போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக லாபம் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது என சுங்க சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்டண உயர்வினால் உரிமையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தாங்கள் பராமரிக்கும் நெடுஞ்சாலைகளை ஆண்டுக்கு ஒருமுறை சீரமைப்பு செய்தல், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என பல செலவினங்களை தாங்கள் செய்வதால் இந்த கட்டண உயர்வு தவிர்க்க இயலாததாக இருக்கிறது என சுங்க சாவடிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சுங்க சாவடிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு நாடு முழுவதும் 60 கிமீக்குள் ஒரு சுங்க சாவடி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மீதமுள்ளவை விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது வரை இப்படியான சுங்க சாவடிகள் மூடப்படாததுடன் கட்டண உயர்வும் அமல்படுத்தப்படுவது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: