மின்னம்பலம் : உலகிலேயே முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றாலும், காலம் செல்ல செல்ல தடுப்பூசியின் வீரியம் குறைய வாய்ப்பு இருப்பதால்தான், தற்போது பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி குறித்து இன்னும் மக்களிடையே அச்சமும் தயக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இருப்பினும், தற்போதுவரை தடுப்பூசியும், பவுடர் வடிவிலான 2டிஜி என்ற மருந்து மட்டுமே கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மால்னுபிரவிர் என்னும் பெயர்கொண்ட இந்த மாத்திரையை கொரோனா தொற்று ஏற்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம். கொரோனாவுக்கு வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுபவர்கள், இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்ற முறையில் ஐந்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மால்னுபிரவிர் மாத்திரை கொரோனா அறிகுறியைக் குறைத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுத்து, விரைவில் குணமடைய உதவி செய்யும். தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாதவர்களுக்கு இந்த மாத்திரை மருந்து கொடுக்கப்பட்டு பல்வேறுகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவசரகாலப் பயன்பாட்டுக்கு இந்த மாத்திரையைப் பயன்படுத்த பிரிட்டனின் மருந்து, சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. முதலில் 4,80,000 மாத்திரைகளை வாங்க பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது. இது நவம்பரில் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் சஜித் ஜாவித், “இன்று நம்நாட்டுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். ஏனெனில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாத்திரையை அங்கீகரித்துள்ள முதல் நாடாக இங்கிலாந்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் வியாழக்கிழமை அன்று 41,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 28 நாட்களுக்குள் 214 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக