தினத்தந்தி : மேற்கு-வங்காள மாநிலத்தில் தின்ஹடா, கர்தஹா, கொசபா, சாந்திபூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றுள், கர்தஹா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோவண்டேப் சட்டோபத்யாய் 93 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாபநிப்பூர் சட்டசபை தொகுதியில் அவர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நிலையில், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், அவருக்கு பதிலாக மம்தா அந்த தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். எனவே, அவருக்கு கர்தஹா தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
தின்ஹடா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயன் குஹா 1 லட்சத்து 64 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கண்ட நான்கு தொகுதிகளிலும் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில், “வெற்றி பெற்ற நால்வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இது மக்களின் வெற்றி. வங்காள மக்கள் ஒற்றுமையையும் மேம்பாட்டையுமே தேர்வு செய்வார்கள், வெறுப்பு அரசியலை அல்ல என்பது இந்த வெற்றியின் மூலம் தெரிகிறது. மக்களின் ஆசிர்வாதத்துடன் மேற்கு-வங்காளத்தை தொடர்ந்து உயரத்துக்கு கொண்டு செல்வோம் என நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு-வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அங்கு எதிர்கட்சியாக பாஜக இருந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக