சனி, 6 நவம்பர், 2021

சென்னையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

 மாலைமலர்  : தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:   தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சென்னை நொச்சிக்குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தடுப்பூசி போடும் பணிகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமார் 2,800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்பிறகு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை தொடங்கி இதுவரை 7 தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு அது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.



கடந்த 2-ந் தேதி மதுராந்தகம் அருகே சித்தாமூர் பக்கத்தில் உள்ள நல்லம்பாளையம் கிராமத்தில் வீடு தேடி நடமாடும் வாகனங்களின் மூலம் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

தடுப்பூசி முகாம் (கோப்புப்படம்)

மேலும் விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கிராமங்கள் தோறும் வாகனங்களில் சென்று தடுப்பூசி போடும் பணியினை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கினார்கள்.

தடுப்பூசி போடும் பணியில் ஒருவரைகூட தவற விட்டுவிடக்கூடாது என்ற வகையில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதற்கு ஏற்ப கடந்த 2-ந்தேதி நல்லாம்பாளையம் கிராமத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு காணொலி கூட்டத்தில் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை அவரும் வலியுறுத்தினார்.

அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். ஓரிரு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 70 ஆயிரத்து395 பேர். கோவேக்சின் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 903 பேரும், கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 பேரும் ஆவர்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி கமி‌ஷனர் இன்று சென்னை பல்வேறு பகுதிகளில் யாருக்கெல்லாம் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும், யாருக்கெல்லாம் முதல் தடுப்பூசி போட வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து இருக்கிறார்.

அந்த வகையில் இன்று நொச்சிக்குப்பம் பகுதியில் 536 வீடுகள் இருக்கிறது. இதில் 24 வீடுகள் கதவு அடைக்கப்பட்டு இருக்கிறது. 2956 பேர் இருக்கிறார்கள்.

771 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 557 பேருக்கு 2-வது தவணை போடப்பட்டு இருக்கிறது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 998. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியினை நாங்கள் நொச்சிக்குப்பத்தில் தொடங்கி வைத்து இருக்கிறோம். அலுவலர்கள் வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணியினை நிறைவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பொறுமையாக எடுத்து பேசி தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அலுவலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் தினமும் 30 ஆயிரத்தை கடந்த அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நேற்று 75 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ரஷ்யாவில் 40 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இங்கிலாந்தில் 36 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. சிங்கப்பூரில் 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. பிரான்சில் 9 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஜெர்மனியில் 30 ஆயிரம், துருக்கியில் 26 ஆயிரம் என உலக அளவில் பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்று. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியை தொடர்ந்து பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்.

தினந்தோறும் வார நாட்களில் இந்த பணி நடைபெறும். வருகிற 14-ந்தேதி 8-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தாராளமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதனால்தான் வாரங்கள் தோறும் வீடுகளில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

ஆகஸ்டு 5-ந்தேதி தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் “மக்களை தேடி மருத்துவம்” என்று ஒரு திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் இதுவரை 32 லட்சத்து 36 ஆயிரத்து 622 பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த திட்டத்தின்படி பயனாளிகளை கண்டறிவதற்கு வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணி ஒரு பயன் உள்ள திட்டமாக அமையும்.

பல்வேறு வீடுகளில் கேட்டு வருகிற போது ஒரு பெண் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது என்று கூறினார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து அளிக்க தயாராக உள்ளார்.

வீடு தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளோம். தவறு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்பதையும் கண்டறிய சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துகள் இல்லை: