விருது பெற்ற மகிழ்ச்சியை குடும்பத்தினரோடு அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே 28 ஆம் தேதி இரவு திடீரென ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
ரஜினியின் மனைவி லதா ரஜினி, ‘அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகத்தான் சென்றிருக்கிறார்” என்று அன்று இரவு கூறினார். ரெகுலர் செக்கப் என்றால் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஏதும் சாப்பிடாமல் செல்வார்கள். ஆனால் ரஜினி இரவு திடீரென மருத்துவமனைக்கு சென்றதால் அவருக்கு வேறு ஏதோ பிரச்சினை என்று முதலில் செய்திகள் கசிந்தன, பிறகு 29 ஆம் தேதி காவேரி மருத்துவமனை ரஜினியின் உடல் நிலை பற்றி மருத்துவ செய்திக் குறிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
அதில், “மயக்கம்,சோர்வு காரணமாக மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்தநாளம் தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் வீடு திரும்ப சில நாட்கள் ஆகும்”என்று தெரிவித்தது காவேரி மருத்துவமனை.
இதற்கிடையே , ‘ ரஜினிக்கு ரத்த நாளங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது”என்ற தகவல்கள் கசிந்தன.
ரஜினிக்கு என்னதான் ஆயிற்று? மருத்துவ வட்டாரங்களில் தீவிர விசாரணை நடத்தினோம்.
விருது பெற்ற உற்சாகம், பிரதமரை சந்தித்த மகிழ்ச்சி ஆகியவற்றோடு சென்னை திரும்பிய ரஜினி 28 ஆம் தேதி இரவு தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென கழுத்தின் வலது பக்கத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. மயக்கமும் ஏற்பட, ரஜினிக்கு வார்த்தைகள் குழறியிருக்கின்றன. இதற்கு முன் ரஜினிக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத நிலையில் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள், அதன் பிறகு மருத்துவர்கள் உடனடியாக சென்று ரஜினியை பரிசோதித்து ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.
ரஜினி ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பவர். தொடர்ந்து மருந்துகள் எடுத்து வருபவர். சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருபவர். இத்தனையையும் தாண்டி ரஜினிக்கு 28 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிகழ்வு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்த போதுதான், ஹார்ட் அட்டாக் போல ரஜினிக்கு ப்ரெய்ன் அட்டாக் என்ற அபாயம் ஏற்பட இருந்ததை அறிந்து டாக்டர்களும் அதிர்ச்சியாகியிருக்கிறார்கள்.
இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதை மாரடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக் என்கிறோம். அதுபோல மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை மருத்துவ ரீதியாக ப்ரெய்ன் அட்டாக் என்று சொல்கிறார்கள். ரஜினி கிட்டத்தட்ட ப்ரெய்ன் அட்டாக் அபாயத்தில் இருந்து தற்போதைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
மூளை மற்றும் தலைக்கு கரோடிட் தமனிகள் எனப்படும் ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த ரத்த ஓட்டம் மூலம்தான் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதால்தான் தொடும் உணர்வு, பேச்சு, சிந்தனை உள்ளிட்ட செயல்பாடுகள் நடக்கின்றன.
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ப்ளேக்ஸ் எனப்படும் கொழுப்புப் படிவுகள், கால்சிய படிவுகள், நார்ச்சத்துப் படிவுகள், மற்றும் செல் குப்பைகள் போன்றவை மெல்ல மெல்ல படியும். கரோடிட் தமனியில் காயங்கள் ஏதும் ஏற்பட்டால் அந்த இடத்தில் இந்த படிவுகள் ஒட்டிக் கொள்ளும். மெல்ல மெல்ல இந்த படிவுகள் சேர்ந்து மூளைக்கு செல்லும் கரோடிட் தமனியில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அடைப்பால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது அல்லது மூளைக்கு ரத்த ஓட்டமே தடைபடுகிறது. இதனால் மூளை தனது வழக்கமான பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதுவே உணர்வறிய முடியாமை, வாய் பேச முடியாமல் குழறுதல் போன்ற முதல் கட்ட வெளிப்பாடாகத் தெரிகிறது. ரஜினிக்கு இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக இந்த அடைப்புகளை சரி செய்து ரஜினியின் மூளைக்கு செல்லும் கரோடிட் தமனி ரத்த ஓட்டத்தை சீர்படுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள். எனினும், கரோடிட் தமனியில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்த கொழுப்புப் படிவுகளோ கால்சியம் படிவுகளோ மூளைக்குள் சென்று விட்டிருந்தால் இன்னும் சிக்கலாகிவிடும் என்பதால்தான் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
ரஜினிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு தற்காலிக இஸ்கிமிக் தாக்குதல் அதாவது transient ischemic attack (TIA). என்பது மருத்துவ ரீதியான பெயர். அதாவது மூளைக்கு ஏற்படும் ரத்தப் பற்றாக்குறை. இந்த நிலை நீடித்தால் அது பக்கவாதம் என்னும் அபாயத்தில் கொண்டு போய் விடும். அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காகத்தான் ரஜினிக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்” என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில். இவ்வளவு தீவிரமான பாதிப்புக்கு அறிகுறிகள் ஏதும் இருக்காதா என்ற சந்தேகத்தை இந்த துறை ரீதியான மருத்துவர்களிடம் முன்வைத்தோம்.
"ஆரம்ப கட்டங்களில், கரோடிட் தமனி நோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. மூளைக்கு செல்லும் ரத்த அளவில் இழப்பு ஏற்படுவது தீவிரமடையும் வரை அறிகுறிகள் ஏதும் தோன்றாது. அதனால் தான் இந்த பிரச்சனையை கவனிக்க முடியாமல் போகிறது.
அதேநேரம் மூளைக்குச் செல்லும் ரத்தம் வெகுவாக குறையும் போது முகம் அல்லது கைகால்களில் திடீரென உணர்வின்மை அல்லது பலவீனம், வாய்ப் பேச்சில் குழறல்,
திடீர் மயக்கம் அல்லது சமநிலை இழப்பு போன்ற திடீர் அறிகுறிகளைக் காட்டும். ரஜினிக்கு இதுதான் நடந்திருக்கிறது" என்கிறார்கள்.
எனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவப் போராட்டம் நடத்தி வரும் ரஜினிகாந்துக்கு தற்போது மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு இன்னொரு மருத்துவ போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதிலிருந்து அவர் விரைவில் வெற்றி பெற்று மீண்டு வர வாழ்த்துவோம்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக