பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம்சாட்டுகிறார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் ஒரு காவல் துறை கண்காணிப்பாளர்.
இந்த நடவடிக்கையில் திமுக நிர்வாகி ஒருவரே கூட கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.என்ன நடக்கிறது?
டி.ஜி.பியின் 5 உத்தரவுகள்...தமிழ்நாடு முழுவதும் ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ என்ற பெயரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொடூர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது வரையில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பயங்கர ஆயுதங்களும் கள்ளத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ஆயுத தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பற்றிய கணக்கெடுப்பும் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக, 2,548 பேரிடம் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையாளர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கடந்த 30 ஆம் தேதி ஐந்து உத்தரவுகளை டி.ஜி.பி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அதன்படி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்கள் விவரம், இடங்களை கண்டறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை வாங்க வருவோரின் விவரம், எதற்காக இந்த ஆயுதங்கள் என்பது குறித்த பதிவேட்டு விவரம், விவசாயம், வீட்டு உபயோகம் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் விற்பனை செய்யாமல் இருத்தல், பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதார் இல்லாமல் அரிவாளா?
இதனால், அரிவாள் தயாரிப்பதில் புகழ்பெற்ற திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலும் ‘ஆதார் இல்லாமல் அரிவாள் கொடுக்கக் கூடாது’ என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
அதேநேரம், குற்றச் செயலில் ஈடுபட்டு வருகிறவர்கள், பிணையில் வந்த பிறகு தப்பித்துச் சென்றவர்கள், சந்தேக வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனப்படுவோர் மீது தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் இந்த ஆபரேஷன், இதுவரையில் நடக்காத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
“இந்த ஆபரேஷனுக்கு `டிஸ்ஆர்ம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். முதலமைச்சரிடம் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதற்காகத்தான் காவல்துறை தலைமை இயக்குநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உண்மையில் இவர்கள் பெயர் சொல்லும் அளவில் செயல்படும் ரவுடிகளை கைது செய்யவில்லை. என்னிடம் அப்படிப்பட்ட ரடிவுகளின் பெயர்ப் பட்டியல் உள்ளது. அவர்களில் ஒருவரைக்கூட இவர்கள் கைது செய்யவில்லை” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.
“2 கேஸ் இருந்தாலே ரவுடி லிஸ்ட்“
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், “தமிழ்நாட்டில் கூலிப்படை கலாசாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பது போலீசுக்கு தெரியும். ரவுடிகளை உருவாக்குவதே போலீஸ்தான். இவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக வி.சி.க மீது அ.தி.மு.க அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது 2 வழக்குகள் இருந்தாலே சரித்திர குற்றப் பதிவேட்டை உருவாக்கி, தினமும் காவல்நிலையத்துக்கு வந்து கையொப்பமிட வைப்பது, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்துவது எனச் செயல்பட்டனர்.
அந்தப் பட்டியலையே வைத்துக் கொண்டு இந்த ஆட்சியிலும் அதேபோல் செயல்படுகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகிய பதவிகளில் உள்ள பலரும் அந்தந்த பகுதிகளில் சாதி வன்மத்தோடு செயல்பட்டனர். எஸ்.பி பதவியில் உள்ள சிலரும் அதேபோன்று செயல்பட்டனர். நாங்கள் அனைவர் மீதும் குற்றம் சுமத்தவில்லை. சேலம் மாவட்டம் ஓமலூரில் எங்கள் கட்சியின் மீது மிகுந்த பாகுபாட்டுடன் அம்மாவட்ட எஸ்.பி நடந்து கொண்டார். இதே எஸ்.பி கடலூரில் இருந்தபோது பல இடங்களில் எங்கள் கட்சியின் கொடியினை ஏற்றவிடாமல் தடுத்துள்ளார்” என்கிறார்.
மேலும், “ பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்களை இதே அதிகாரி கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்தார். காவல்துறை காவிமயமாக மாறி வருவதையே இது காட்டுகிறது. நாங்கள் போராட்டக்களத்தில் இருப்பதால் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்வது என்பது இயற்கையானது. அதனை நாங்கள் குறை சொல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் ரவுடிகள் பட்டியலில் வைப்பது என்பது எப்படி சரியானது?” என்கிறார்.
காஞ்சி, நாகை எடுத்துக்காட்டுகள்
“எடுத்துக்காட்டு கூற முடியுமா?” என்றோம். “நிச்சயமாக. கடந்த ஆட்சியில் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை பட்டப்பகலில் தகர்த்தனர். அதைக் கண்டித்து சாலை மறியல் நடத்தினோம். நாங்கள் சென்னையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தோம். இதுதொடர்பாக, வேதாரண்யத்தில் எங்கள் கட்சியின் பொறுப்பாளரான வேங்கைத் தமிழ் என்பவரை அன்றைய அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. அவரை தற்போது ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு, எருமையூர் பகுதியில் 2 ரவுடிகள் உள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்யட்டும். அதனை நாங்கள் தவறு எனக் கூறவில்லை. ஆனால், அதே ஊரில் உள்ள வி.சி.க நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர். பழநியிலும் இதேபோல் கைது செய்துள்ளனர். இதனை குறிப்பிடக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறை கட்டமைத்த அதே பதிவேட்டை, தற்போதைய அரசின் காவல்துறையும் கையாள்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்? டி.ஜி.பிக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான், `ரவுடிகள் பட்டியலில் உள்ள 3,000 பேரை கைது செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதில் பெயர் சொல்லும் அளவில் உள்ள ரவுடிகளைச் சொல்ல முடியுமா?’ எனக் கேட்கிறோம். அவர்கள் இன்னமும் வெளியில் சுற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
தவிர, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கோவையை சேர்ந்த இந்துத்துவ இயக்க பிரமுகர் ஒருவர் சந்தையில் இருந்து வரும் மாடுகளை எல்லாம் பசுவதை செய்வதாகக் கூறி கன்மேன் எனப்படும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்று வண்டிகளை மறித்து வசூல் செய்கிறார். அந்தவகையில், பொய் சொல்லி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற்றவர்களை எல்லாம் காவல்துறை சரிபார்க்கட்டும்” என்கிறார்.
கொங்கு மண்டலத்தில் என்ன சிக்கல்?
“முதலமைச்சர் கைகளில்தானே காவல்துறை உள்ளது. அவருக்குத் தெரிந்துதானே கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன?” என்றோம். “காவல்துறையின் சாதிரீதியான அணுகுமுறையைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதனை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் உளவுத்துறை அதிகாரிகள் மறைக்கின்றனர். திருக்குறளில் `ஒற்றாடல்’ பகுதியில் வள்ளுவர் சொல்வது போல, `நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நல்ல ஒற்றர்களை வைத்து கண்டறியவில்லை என்றால் ஆட்சிக்கு எதிராகப் போய்விடும்’ என்கிறார். எனவே, என்ன நடக்கிறது என்பதை ஒற்றர்களை வைத்துப் பார்த்தால், அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பது தெரியவரும்.
குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்களை மாற்ற வேண்டும். அந்த மாவட்டங்களில் எல்லாம் இதுவரையில் அம்பேத்கர் சிலைகளை வைப்பதற்கு அனுமதியில்லை. அந்தப் பகுதிகளில் தி.மு.க வெற்றி பெற முடியாமல் போவதற்கு சாதிரீதியாக செயல்படும் இதுபோன்ற அதிகாரிகள்தான் காரணம். கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் வி.சி.க நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர்” என்கிறார்.
“முதலமைச்சரை வி.சி.க தலைவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது என்ன பேசப்பட்டது?” என்றோம். “ முதல்வர் உடனான சந்திப்பில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 5 முதல் 10 வி.சி.க நிர்வாகிகள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்தும் சந்திப்பின்போது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்கிறார்.
“அரசியல் காரணங்களுக்காக கைதானவர்களை எல்லாம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் வைப்பதாக வி.சி.க குற்றம் சுமத்துகிறதே?” என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ அப்படியெல்லாம் எதுவும் இல்லை. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது, குற்ற வழக்குகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு குற்றத்துக்கும் எந்த அடிப்படையில் தொடர்பு என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்கிறார்.
மேலும், “ பழைய வழக்குகள், குற்றச் சம்பவங்கள், அவற்றில் சம்பந்தப்பட்ட நபரின் பங்கு ஆகியவற்றை டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் முழுமையாக ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் வேறு எந்தக் காரணங்களும் இல்லை” என்கிறார்.
தவறான முன்னுதாரணம்
காவல்துறை மீது வி.சி.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ குற்றவாளிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் சொல்வதுபோல பொய்யாக ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளாமல் அரசியல்ரீதியாக அணுகுவது என்பது சரியான ஒன்றல்ல” என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், “ அனைத்துக் கட்சிகளிலும் குற்றச் செயலில் ஈடுபடும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ரவுடிகள் ஒழிப்பு விவகாரத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி என்றால் ரவுடிதான். இதில் கட்சி எங்கிருந்து வருகிறது? மணப்பாறையில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மீது புகார் எழுந்தது. அவர் உடனே கைது செய்யப்பட்டார். சரித்திர பதிவேட்டில் உள்ளவர்களைத்தான் போலீஸார் கைது செய்கின்றனர். இவர் எந்தக் கட்சிக்காரர் என்றெல்லாம் பார்த்து கைது செய்வதில்லை.
எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடாத ஒருவரை போலீஸ் துன்புறுத்துகிறது என்றால், அதற்கான பட்டியலை இவர்கள் டி.ஜி.பியிடமோ, எஸ்.பியிடமோ புகார் மனு அளித்திருக்கலாம். அவ்வாறு இவர்கள் செய்யாமல் வெறுமனே பேசுவது என்பது சரியானதல்ல. சட்டத்தை மீறி நடவடிக்கை எடுத்தால் சட்டப்படியே முறையிடலாம். இதனை அரசியலாக்குவது என்பது தவறான முன்னுதாரணம்” என்கிறார்.
ஆதாரத்தைக் கொடுக்கட்டும்
காவல்துறையின் நடவடிக்கை குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ இதை ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கிறோம். கொலை செய்வது என்பது நாளுக்கு நாள் இயல்பான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. கூலிப்படையின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சிறிய விஷயங்களைக்கூட பேசித் தீர்க்காமல், `சிவில் விவகாரங்களில் காவல்துறை தலையிடக் கூடாது’ என சிலர் மிரட்டுகின்றனர். சிவில் விவகாரம் என்பதையே தங்களுக்கான கேடயமாக சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்கிறார்.
மேலும், “சில கட்சிகளில் தவறு செய்கிறவர்கள் இருப்பார்கள். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் காவல்துறை செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ரவுடிகளை போலீஸார் கைது செய்ய வரும்போது, அவர்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக ஆதரவு கொடுப்பது தவறு. போலீசார் தவறாகச் செயல்பட்டால், அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கலாம். அதனை விசாரணை அதிகாரி சரிபார்த்து நிவர்த்தி செய்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருப்பவர்கள் என்பதற்காக எல்லாம் நடவடிக்கை எடுத்துவிட முடியாது” என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக