கலைஞர் செய்திகள் : கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் 17 வருடங்களாக காட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் மெக்ராஜே லோ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். இதன் பிறகு இந்தக் கடனை அவரால் அடைக்க முடியவில்லை.
இதனால் அவருக்குச் சொந்தமாக இருந்து 1.5 ஏக்கர் நிலத்தை வங்கி ஏலத்தில் எடுத்துக் கொண்டது. இதனால் மிகவும் மனமுடைந்த இவர் ஆடலேயில் உள்ள சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு சில நாட்களே அவரால் தங்கியிருந்த முடிந்தது.
பின்னர் ஆடலே மற்றும் நெக்கரே ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள அடர்ந்த காட்டில் தனக்குச் சொந்தமான அம்பாசிடர் காரோடு குடிபெயர்ந்தார். பிறகு அங்கேயே தனது வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துவிட்டார்.
பல ஆண்டுகளாகக் காட்டிலேயே வசித்து வரும் இவரிடம் இரண்டு ஜோடி ஆடைகள், ஒரு ஜோடி செருப்பு, ஒரு சைக்கிள் ஆகியவையே உள்ளன. மேலும் மிகவும் பழமையான வானொலிப் பெட்டி ஒன்றையும் வைத்துள்ளார். காட்டில் கிடைக்கும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளைச் செய்து அவற்றை அருகே இருக்கும் கிராமத்தில் விற்பனை செய்து வருகிறார்.
அம்பாசிடர் காரே வீடு... 17 வருடங்களாக காட்டில் வசித்து வரும் தனி ஒருவன் : நடந்தது என்ன?
இதற்கு பணம் எதுவும் வாங்காமல், அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை போன்ற மளிகைப் பொருட்களைப் பண்டமாற்று முறையில் வாங்கி தன்னுடைய தினசரி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
காட்டில் தனியாக வாழ்ந்து வந்தாலும் இவரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா ஊரடங்கால் இவருக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் காட்டில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்துள்ளார். தற்போது கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளார்.
காட்டில் தனியாக வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு ஆசை உண்டு. அது என்னவென்றால் எப்படியாவது தனது நிலத்தை மீட்கவேண்டும். மீண்டும் தனது அம்பாசிடர் காரிலேயே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதுதான். மேலும் வங்கியில் வாங்கிய கடன், நிலம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்துள்ளார்.
மேலும் இவர் காட்டில் அமைதியாக வாழ்ந்து வருவதால் வனத்துறையும் இவரை எந்த தொந்தரவும் செய்யாமல் அவர் போக்கிலேயே விட்டுவிட்டனர். இதுகுறித்து சந்திரசேகர் கூறுகையில், "17 வருடங்களாக நான் காட்டில் இருந்தாலும் ஒரு மூங்கிலை கூட வெட்டியது இல்லை; உடைத்ததும் இல்லை. சிறிய செடியை வெட்டினாலும் என் மீது வனத்துறை வைத்திருக்கும் நம்பிக்கையை நான் இழந்துவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நடுக்காட்டில், அம்பாசிடர் காரை வீடாக பயன்படுத்திக் கொண்டு 17 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சந்திரசேகரின் வாழ்க்கை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக