சனி, 9 அக்டோபர், 2021

கொலை வழக்கு: அதிகாலையில் ஐவர் கைது- திமுக எம்பி தலைமறைவு!

கொலை வழக்கு: அதிகாலையில் ஐவர் கைது- திமுக எம்பி தலைமறைவு!

  மின்னம்பலம் : கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில் வேலை செய்த தொழிலாளி கோவிந்தராஜ் இறந்துபோன வழக்கைத் தீவிரமாக விசாரித்து வரும் சிபிசிஐடி இன்று (அக்டோபர் 9) அதிகாலை முக்கியமான கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சந்தேக மரணம் என்று வழக்குப் பதியப்பட்டிருந்ததை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி ஐந்து பேரை கைது செய்துள்ளது;
இந்த விவகாரம் தொடர்பாக மின்னம்பலத்தில் தொடர் புலனாய்வு செய்திகளை நாம் வெளியிட்டு வரும் நிலையில், நம் செய்தியில் குறிப்பிட்டவர்களையே கைது செய்துள்ளது சிபிசிஐடி.  அந்த செய்தியில், “செப்டம்பர் 20 ஆம் தேதி, காடாம்புலியூர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் தன் தந்தையை எம்பி ரமேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கிய கொலை செய்துவிட்டார்கள் என்று புகார் கொடுத்தார். ஆளுங்கட்சி எம்பி மீதான புகார். அதுவும் கொலைப் புகார் என்பதால் காடாம்புலியூர் காவல்நிலைய போலீஸார் உடனடியாக கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனுக்குத் தகவல் அனுப்பினார்கள். 

இதையறிந்த எஸ்.பி. சக்தி கணேசன் தனது அடுத்த நிலை அதிகாரிகளை அழைத்து, ‘அது கொலைதான். கொலை வழக்கு பதிவுசெய்து எம்.பி.யைக் கைது செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார். உடனடியாக அது சாத்தியம் இல்லை என்பதால், எம்பி ரமேஷ் தவிர அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புள்ள பேர்பெரியாங்குப்பம் சண்முகம், பண்ருட்டியை சேர்ந்த சுந்தராஜன் ஆகிய ஆறுபேரையும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டுவாருங்கள் என்று உத்தரவிட்டார் எஸ்பி.

அதன்படி செப்டம்பர் 20 ஆம் தேதி அந்த ஆறுபேரையும் நெய்வேலி பகுதியில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் அன் அஃபிசியலாக போலீஸ் கஸ்டடியில் வைத்திருந்தார்கள். இந்தப் பணிக்காக 20 போலீஸாரை நியமித்திருந்தார் எஸ்.பி.

இதற்கிடையே போலீஸ் கஸ்டடியிலிருந்த சண்முகம் மற்றும் சுந்தரராஜனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதும் பயந்துபோன போலீஸார் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்களை இரண்டு பேரை மட்டும் அனுப்பி வைக்கச் சொன்னவர் மற்ற நான்கு பேரையும் போலீஸ் கஸ்டடியில் பத்திரமாக வைத்திருக்க உத்தரவிட்டார்.

இந்தத் தகவல்களை எல்லாம் போலீஸுக்குள் இருக்கும் தனது நண்பர்கள் மூலமாகவே அறிந்துகொண்ட எம்.பி. போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசினார். இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், சென்னையில் இருக்கும் மேல் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். உடனே டிஜிபி அலுவலகத்திலிருந்து கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு சென்ற தகவலில், ’தேவையில்லாமல் இத்தனை நாள் ஏன் கஸ்டடியில் வைத்திருக்கீங்க? யாராவது போட்டோ எடுத்து பிரச்சனை செய்தால் காவல்துறையின் இமேஜ்தான் பாதிக்கும். அதனால அவங்களை விடுங்க’ என்று உத்தரவு தொனித்தது. அதனால் செப்டம்பர் 25ஆம் தேதி, இரவு கீழ்மட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்ட எஸ்.பி, ‘அந்த நான்கு பேர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுங்க. அவங்க வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிச்சுக்கிட்டே இருங்க’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் மறுநாள் செப்டம்பர் 26 ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது” என்று எழுதியிருந்தோம்.

அதே நபர்கள்தான் இன்று (அக்டோபர் 9) அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நேற்று பகலில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா, விழுப்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சுந்த்ராஜன் ஆகியோரின் ஆய்வுக்குப் பின், கோவிந்தராஜ் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்கிற சுந்தர் ராஜன் ஆகிய ஐந்து பேரை கடலூர் புதுநகரில் இருக்கும் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நேற்று பகல் முதல் இரவு வரை விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றனர் வாக்குமூலங்களை பெற்றபோது பலமுறை நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விசாரணை செய்யப்பட்டவர்களில் ஒருவரான நடராஜன் நேற்று இரவே திடீரென மயங்கி விழ அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதையும் தாண்டி வாக்குமூலங்களைப் பெற்ற பின் இன்று (அக்டோபர் 9) அதிகாலை 5.30க்கு சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து கடலூர் ஜி.ஹெச்சுக்கு அழைத்துச் சென்றனர். நடராஜன் மருத்துவமனையில் இருப்பதால் மற்ற நான்கு பேரை இன்று காலை ஜி.ஹெச். அழைத்துச் சென்று அவர்களின் உடல் நல பரிசோதனை செய்து சர்டிபிகேட் பெற்றனர்.

இதையடுத்து இன்று (அக்டோபர் 9) காலை 610க்கு கடலூர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு நீதிபதிகள் குடியிருப்பில் இருக்கும் சிஜேஎம் நீதிபதி பிரபாகரனின் வீட்டில் நால்வரையும் காலை 7 மணிக்கு ஆஜர்படுத்தினார்கள் சிபிசிஐடி போலீஸார். கொலை, கொலையின் தடயத்தை மறைத்தல், சதித்திட்டம், கூட்டுச் சதி, 5 பேருக்கு மேல் கூட்டாக சேர்ந்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மருத்துவமனையில் இருக்கும் நடராஜனும் கைது செய்யப்பட்டவர் ஆகிறார்.

இவர்களின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் ஏ1 ஆக இடம்பெற்றிருக்கும் எம்பி. ரமேஷ் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து சிபிசிஐடி வட்டாரத்தில் பேசினோம்.

“கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா செப்டம்பர் 27ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தார் க்ரைம் நெம்பர் 2/2021, அன்றே காடம்புலியூர் காவல் நிலையம் சென்று பாராவிலிருந்த பாஸ்கரன், நிலைய அதிகாரியான தலைமைக் காவலர் ஜெயக்குமாரிடம் விசாரித்துவிட்டு, காவல் நிலையத்தில் பதிவாகியிருந்த சிசி கேமரா புட்டேஜ்களையும் எடுத்துவந்தார், 28ஆம் தேதி சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி, விழுப்புரம் இன்ஸ்பெக்டர் சுந்தராஜன் இருவரும் பண்ருட்டி அரசு விருந்தினர் மாளிகையில், புகார்தாரரும் இறந்துபோன கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலிடமும், காடம்புலியூர் பொறுப்பு புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தக்குமாரிடமும் மணிக் கணக்கில் விசாரணை செய்தனர், அதைத் தொடர்ந்து சிலரிடம் விசாரித்துவிட்டு பிளான் ஆஃப் இன்வஸ்ட்கேஷன் (வழக்கு சம்பந்தமாக சுருக்கமாக) உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்க அனுப்பினார்கள்.

மேலும் விசாரணை குழுவினர் எம்பி ரமேஷ் உட்படச் சிலரின் செல்போன் அழைப்பு விவரங்களையும் எடுத்துள்ளார்கள், செல்போன் டவர் தம் கால் மற்றும் லொக்கேஷன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

காடம்புலியூர் காவல் நிலையத்தில் 19ஆம் தேதி பதிவாகிய வீடியோவில் இரவு சுமார் 9.50 முதல் 10.30 வரையில் முந்திரி கம்பெனியில் வேலைசெய்த தொழிலாளி கோவிந்தராஜை அடித்து ரத்தக்காயத்துடன் இழுத்துப்போய் திருட்டு கேசு போடச்சொல்கிறார்கள், அந்த நேரத்தில் கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை எஸ்கார்ட் போட்டு ரிமாண்ட்க்கு அழைத்துப் போவதில் பரபரப்பாக இருந்தது காடம்புலியூர் காவல் நிலையம், அதன் பிறகு பாரா போலீஸ் பாஸ்கர், அடித்து இழுத்துவரபட்ட கோவிந்தராஜை அழைத்துப்போய் சிகிச்சை கொடுத்து காலையில் அழைத்து வாங்க, இப்போது போலீஸ் யாரும் இல்லை என்று அனுப்பிவிடுகிறார்.

இதுவரையில் சுமார் 35 நபர்களிடம் விசாரணை செய்துள்ளனர், அதில் அன்று இரவு பண்ருட்டி நகரப்பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்புகொண்ட எம்பி, கம்பெனியில் ஒரு பிரச்சினை உடனே கம்பெனிக்கு வாங்க என்று அழைத்துள்ளார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.

கம்பெனியில் வேலை செய்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ’எம்பி குடிபோதையில் அடிக்கும்போது கோவிந்தராஜும் எதிர்த்துப் பேசினார், சிலரை மிரட்டுவதுபோலும் பேசியுள்ளார் அப்போதுதான் கம்பெனி மேனேஜர் மற்றும் ரமேஷ் ஆதரவாளர்கள் கடுமையாக அடித்துள்ளார்கள். சுமார் 8.30 மணியளவில் கோவிந்தராஜை வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்துச் சென்றார்கள், மீண்டும் இரவு அழைத்து வந்து, இருவர் கோவிந்தராஜ் கைகளைப் பிடித்துக்கொள்ள ஒருவர், வாயில் விஷத்தை ஊற்றினார்’’ என்று கூறியுள்ளார்கள். சம்பவம் நடந்த முந்திரி கம்பெனியின் வெளிப் புறத்திலும் உட்புறத்திலும் சுமார் 25க்கும் மேற்பட்ட சிசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அந்த ஹார்ட் டிஸ்க்கை தேடி வருகிறார்கள் போலீஸார்.

இவ்வளவு ஆதாரங்களையும் பலரின் வாக்குமூலங்களையும் வைத்து திமுக எம்பி ரமேஷ் கொலைக் குற்றவாளி என்று முடிவுசெய்துள்ள சிபிசிஐடி முதல்கட்டமாக இந்த ஐவரை கைது செய்துள்ளது. இப்போதைய நிலவரப்படி கடலூர் திமுக எம்பி. ரமேஷ் தொடர்பு எல்லைக்கு அப்பால் தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஐவர் கைதுக்கு அடுத்து எம்பியும் கைது வளையத்துக்குள் கொண்டுவரப்படுவது நிச்சயம்” என்கிறார்கள் உறுதியான குரலில்.

-வணங்காமுடி


கருத்துகள் இல்லை: