தினமலர் : ஜெய்பூர்: கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், 'டி 20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தன் முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் நபீசா அட்டாரி. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், 'வாட்ஸ் ஆப்'பில், 'நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என பதிவு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்தார்.
மேலும், வாட்ஸ் ஆப்பில் தன் 'ஸ்டேடஸ்' ஆக, பாக்., வீரர்களின் வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தையும் வைத்திருந்தார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நபீசா அட்டாரியை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நபீசா கூறியுள்ளதாவது: நான் இந்தியர்; இந்தியா மீது பெரும் பற்று வைத்து உள்ளேன். ஜாலிக்காக பதிவிட்ட விஷயம், விவகாரமாகி விட்டது, யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவ - மாணவியர் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக