வெள்ளி, 29 அக்டோபர், 2021

உணவு மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணோடு உணவருந்திய அமைச்சர் சேகர் பாபு

மின்னம்பலம் : நரிக்குறவர் என்பதற்காக கோயில் அன்னதானத்தில் உணவு தர மறுப்பதாக அண்மையில் புகார் தெரிவித்த அதே பெண்ணுடன் இன்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் அன்னதான உணவை சாப்பிட்டார்.


சமீபத்தில் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளானது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வீடியோவில்,”ஒரு மாசத்து முன்ன, நான் என் தங்கச்சி, அத்தை எல்லாரும் கரெக்ட் டைத்துக்கு வந்து நின்னோம்..
அதான் கவர்மெண்ட் லேடிஸ் பஸ்ஸூன்னு சொல்றாங்களே…அது வந்தது..கையை காட்டி நிப்பாட்டினோம். ஆனால் வண்டி நிக்காம வேகமாக போயிருச்சு…..
சரி அது போகட்டும்…இப்பக் கூட பெருமாள் கோயில் பக்கம் நின்னுட்டு இருந்தோம்…சரி மணி 12 ஆச்சு…கோயில அன்னதானம் போடுவாங்க சாப்பிட்டு போகலாம்னு நினைச்சு வெயிட் பண்ணோம்…
முதல் பந்தியில் இடம் கிடைக்கல…இரண்டாவது பந்தியில் உட்காந்துட்டேன்…இலை எல்லாம் போட்டாங்க சார்…சாப்பாடு போடுற நேரத்துல ஒருவர் வந்து, இலையெல்லாம் எடுத்து போட்டுட்டு, நீங்க எல்லாம் இங்க உட்கார்ந்து சாப்பிடக் கூடாது…அங்க போய் நில்லுங்க….
மிச்சம் மீதி சாப்பாடு இருந்த கொடுப்போம்னு சொன்னாரு…..நான் சொன்னேன்….மிச்சம் மீதி கொடுக்குறதுக்கு இது என்ன உங்க கல்யாண வீடா..லேட் ஆச்சுன்னா…..மாப்பிள்ளை வீட்டுக்காரர், பொண்ணு வீட்டுக்காரர் கோவிச்சுக்கிட்டு போயிடுவாங்கனு சொல்றதுக்கு… இது கவர்மெண்ட் ஏழை,எளிய மக்களுக்கு கொடுக்கிற அன்னதானம்… இதை சாப்பிட விடாம எங்களை அடிச்சு விரட்டுனாங்க….இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..

நாங்களும் பிசினஸ்தானா பண்றோம்…இந்த பாசி,மணி வித்துச்சுனா…ஹோட்டலில் சாப்பிடுவோம்…இல்லன்னா, இந்த மாதிரி கோயிலில் அன்னதானம் சாப்பிடுவோம்.

குறிக்காரச்சினா ஏன் அவ்வளவு கேவலமா போச்சு உங்களுக்கு…அன்னைக்கு மட்டும் என்கிட்ட போன் இருந்தா…அதை போட்டோ எடுத்து…இண்டர்நெட்..யூடியூப், ஃபேஸ்புக்கில(மெட்டா) அனுப்பி இருப்பேன். அந்த நேரம் பார்த்து என் செல்போன் சார்ச் ஏறிகிட்டு இருந்தது….

நாங்க ஓட்டு போடுறதனாலதான் அவங்க ஜெயிக்கிறாங்க…ஜெயிச்சு இந்த மாதிரி கவர்மெண்ட் திட்டம் கொண்டுவருது….அதை செய்யுறதுக்கு இவங்களுக்கு என்ன கஷ்டம்….

இந்த காலம் போகட்டும்…எங்க பசங்க எல்லாம் வளரட்டும்..அவங்கல படிக்க வைக்கிறோம்…அப்போ யார் மாடு மேய்க்கிறாங்கனு பார்ப்போம்…எதுக்கு எங்களை தூரமா ஒதுக்கி வைக்கிறாங்க….நாங்களும் நல்லதானா ட்ரஸ் பண்ணுறோம்…குளிக்கிறோம்…பல் விலக்குறோம்…சுத்தமாகதானா இருக்குறோம்…எங்க பாட்டன், முப்பட்டான் காலம்தான் சுத்தம் இல்லை…காலம் மாறிக்கிட்டே இருக்குது.

வேற என்ன சார் வேணும் உங்களுக்கு…இந்த மாதிரி உள்ளவங்க எல்லாத்தையும், மாத்தணும்…ஒரு சட்டம் கொண்டுவரணும்… நீ சாகும்போது உன் அதிகாரம்…ஜாதி வந்தா உன்னை சுடுகாட்டுக்கு தூக்கிக் கொண்டு போகும்….செத்தனா…அவ்வளவுதான் ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லை.

குறிக்காரச்சினா அவ்வளவு கேவலமா…நாங்க ஒத்துமையா இல்லை…இருந்து இருந்தா இந்நேரம் நீங்க எல்லாம் ஒரு ஓரமா இருந்திருப்பீங்க….சண்டை போடாம….அடிதடி பண்ணமா விட்டு விடுகிறோம்….எங்களுக்கு நல்ல மனசு இருக்கு….அந்த மாதிரி ஆளுங்களுக்குதான் நல்ல மனசு இல்லை….இவங்க இப்படி பன்றது மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குது…

எங்க ஜாதிலேயும் படிச்சவங்க இருக்காங்க….கலெக்டர்..போலீஸ்…டாக்டர்…படிச்சவங்க இருக்காங்க…எங்க டீச்சர் எங்களுக்கு ஒழுங்க சொல்லி கொடுக்கலா..அதனால் மணி வித்துக்கிட்டு இருக்கோம்……வியாபாரம் செய்வதற்காக இந்தி,தெலுங்கு,தமிழ்,இங்கிலிஷ், இத்தாலி,ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன்..” என்று பேசியிருந்தார்..

தனக்கு ஏற்பட்ட அவமானத்தை, அவருக்கே உரிய பாஷையில் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 29) இந்து அறநிலைய அமைச்சர் சேகர்பாபு, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும், கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. திருக்கோயில் அன்னதானம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது என்று கூறிய அமைச்சர், அன்றைக்கு கோயிலில் சாப்பிட மறுப்பு தெரிவிக்கப்பட்ட நரிக்குறவ பெண்ணின் அருகில் உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார். தற்போது, இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-வினிதா

கருத்துகள் இல்லை: