விகடன் : வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுவின் தலைவராக, தி.மு.க-வைச் சேர்ந்த வள்ளிமலை வேல்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இல்லாத வேல்முருகன் தலைவராகியிருப்பதுதான் ஆச்சர்யமே. (எம்பி கதிர் ஆனந்திற்கு கார்வாங்கி கொடுத்தாரோ?)
கழுத்தில் கொத்துக் கொத்தாக கிலோக் கணக்கில் தங்க செயின்களையும், உருளை போனற் பிரேஸ்லெட்களையும் அணிந்துகொள்வதில் வேல்முருகனுக்கு அலாதிப் பிரியமாம்.
ஒன்றியத் தலைவராவதற்கு முன்பு வரை நடமாடும் நகைக்கடையாகவே இருந்தார் வேல்முருகன்.
நம்மிடம் பேசிய காட்பாடியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘``வள்ளிமலை வேல்முருகன் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. இப்படியொருவர் இருக்கிறார் என்று உள்ளாட்சித் தேர்தலில்தான் தெரியும். 5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சீட் கிடைத்ததிலும் பெரிய புள்ளியின் ஆதரவு இருக்கிறது
அவர் பெங்களூருவில் தங்கி தொழில் செய்துவந்ததாகச் சொல்கிறார்கள். திடீரென்று லக்ஸரி காரில் வந்து இறங்கியவரை கவுன்சிலராக்கி, பின்னர் ஒன்றியத் தலைவராகவும் ஆக்கிவிட்டார்கள். வேல்முருகனைப் பற்றிய முழு விவரங்கள் எங்களுக்கே தெரியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்காக வேலை செய்தாராம். பின்னர், சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகனுக்காக வேலை செய்தாராம். இதுதான் அவரின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். போகப் போக செயல்பாடுகளை வைத்துதான் வேல்முருகனை மதிப்பிட முடியும்’’ என்றனர்.
ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளிமலை வேல்முருகனிடமே பேசினோம். ‘``சின்ன வள்ளிமலை கிளைக் கழகச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறேன். 1990-களிலிருந்து தி.மு.க-வில் பயணிக்கிறேன்’’ என்றவர், கிலோக் கணக்கில் தங்க நகைகளை அணிந்துகொள்வது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். வேல்முருகன் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தை அலசினோம். தந்தை பெயர் வேணுகோபால், தன் மனைவி பெயர் மலர்க்கொடி, தனது கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்று குறிப்பிட்டிருக்கிறார் வேல்முருகன். கடைசியாக வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்யவில்லை என்ற விவரத்தையும் தெரியப்படுத்தியிருக்கிறார்.
வேல்முருகனின் சொத்து விவரங்கள்தான் மலைக்கவைக்கின்றன. அவர் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் மொத்தமாக ரூ.22 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. `பரம்பரைச் சொத்துகள் எதுவுமில்லை’ என்று குறிப்பிட்டிருக்கும் வேல்முருகன் பெயரில் மட்டும் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக உறுதிமொழி ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றில், அசையும் சொத்துகள் 10,79,66,676 ரூபாய் இருக்கின்றனவாம். அசையா சொத்துகள் 3,27,27,090 ரூபாய் இருக்கின்றனவாம். இவை சுயமாகச் சம்பாதித்தவை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மனைவி மலர்க்கொடி பெயரில் மட்டும் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக உறுதிமொழி ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வேல்முருகன். மலர்க்கொடி பெயரில் அசையும் சொத்துகள் 7,14,92,392 ரூபாய் இருக்கின்றனவாம். அசையா சொத்துகள் 94,65,350 ரூபாய் இருக்கின்றனவாம். பிரமாணப் பத்திரத்தில் தீபிகா, தீபக் என்று இருவரின் பெயரை உறவுமுறையினர் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறார். இருவரும் அவரின் பிள்ளைகள் எனத் தெரிகிறது. இதில், தீபிகாவின் பெயரில் மட்டுமே 11 லட்சம் ரூபாய் அசையா சொத்துகள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதேபோல், தன்மீது தண்டனைக்குரிய குற்ற வழக்குகள் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக