மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
"மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களே!மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களே! தலைமைச் செயலாளர் அவர்களே!நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களே!இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் அவர்களே! அரசு அதிகாரிகளே!வங்கி அதிகாரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து - ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக கொரோனாவில் இருந்து வென்று வரும் இக்காலக்கட்டத்தில் உங்களது பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும்.
இப்போது மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும்; பொருளாதாரம் புத்துயிர் பெறவும்; தொற்றுநோய்களின்போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை மாற்றவும் வேண்டிய ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டிபியுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. மக்களும் வளர வேண்டும் - தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும் - அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.
* கொரோனா காலத்துப் பின்னடைவுகள் என்று பட்டியலிட்டால் அது மிக மிக நீளமானது. ஆனால் அதே நேரத்தில் அது பல நன்மைகளை மறைமுகமாகச் செய்துள்ளது. நம்மை யார் என்று நமக்கே காட்டி இருக்கிறது. கொரோனா என்ற உலகளாவிய பெருந்தீமையை வெல்லும் ஆற்றல் உள்ளவர்கள் நாம் என்பதை நமக்கே காட்டி உள்ளது. ஒரு சில மாதங்களில் நமது மாநிலத்தின் மருத்துவ உள்கட்டமைப்பை நாம் சீர் செய்தோம். இதுபோன்ற பேரிடர் காலத்தில் மருத்துவத் துறை மட்டுமல்லாது, அனைத்துத் துறைகளும் மருத்துவத் துறையாக உருமாற்றம் அடைந்து மாநிலத்தையும் மாநில மக்களையும் நாம் காப்பாற்றினோம்.
ஊரடங்கு காலம் என்பது தவிர்க்க முடியாதது. ஊரடங்கு அறிவித்தால் மட்டுமே கொரோனா பரவும் சங்கிலியை உடைக்க முடியும். அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு 4000 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். 14 வகையான மளிகைப் பொருள்களை வழங்கினோம். மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பல்வேறு நிதிச் சுமைக்கு இடையில்தான் இதனை வழங்கினோம். இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்கவேண்டும் என்ற அரசின் நோக்கம்தான். நேற்றும், இன்றும், நாளையும் தி.மு.க அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்!
* ஏழை எளிய மக்கள், விளிம்புநிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும். வங்கிச் சேவைகள் அவர்களுக்குப் பயன்பட வேண்டும். தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் திட்டமிடுகிறது. மக்களுக்கு ஓரளவு நிதி உதவி செய்கிறது. கூடுதல் நிதியை அந்த மக்கள் வங்கிகள் மூலமாகப் பெறுகிறார்கள். அந்தத் தேவையை வங்கிகள் பூர்த்தி செய்தாக வேண்டும்.
கடன்களை சும்மா தருவது இல்லை. சும்மாவும் தர முடியாது. தகுதியானவர்களுக்கு கடன்களைக் கொடுப்பதன் மூலமாக வங்கியும் வளரும், மக்களும் வளர்வார்கள். இந்தப் பரஸ்பர நிதி நட்பானது நிலைத்து நீடிப்பது என்பது மாநிலத்தின் நிதி வளர்ச்சிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.
* தி.மு.க ஆட்சி என்பது சுயநிதிக் குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும். சுய உதவிக்குழு இயக்கம் தமிழ்நாட்டில் 1989-90 ஆம் ஆண்டில் பிறந்தது. அதனை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனிக்கவனம் செலுத்தி நடத்தினேன். அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அது திறம்பட நடத்தப்படவில்லை.
சமூக மறுமலர்ச்சிக்கு குறிப்பாக பெண்களின் உயர்வுக்கு இது மிக மிக முக்கியமான திட்டமாகும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20,000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது. செப்டம்பர் 2021 வரை, 4,951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள் கடன்பெறுவதற்குத் தங்களின் கள அளவிலான செயல்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வங்கிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
* பி.எம் ஸ்வாநிதி என்பது கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தெருப்புற சின்னஞ்சிறு விற்பனையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க மலிவு கடன்களை வழங்குவதற்கான சிறப்பு மைக்ரோ கிரெடிட் வசதித் திட்டமாகும். இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்கள் கோரிக்கையையும் கனிவுடன் கவனிக்க வேண்டுகிறேன்.
* தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பல ஆண்டுகளாக சீரான அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வங்கிகள் இந்த செயல்திறனைத் தொடரவும், தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
* தமிழ்நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையானவை ஆகும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். 49.48 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
* தமிழ்நாடு அரசு வங்கிக் கடன் அடிப்படையில் மூன்று சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில், இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
* இந்த ஆண்டில் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல முக்கியமான முடிவுகளை அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க அரசு மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அமைக்கும். இது சிறு நிறுவனங்களைக் காப்பாற்றுவதாக அமையும். அதனை வளர்த்தெடுப்பதாக அமையும். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த நிறுவனங்கள் ஆகும். எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது. எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
* அதேபோல் மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது. எனவே கல்விக் கடன்களை வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
* விவசாயிகள் மாநிலத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது, ஏன் உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
* கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், இதுவரை 31.09 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7.16 லட்சம் பயனாளிகளுக்கு விரைவாக கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.
* உணவு பதப்படுத்தும் தொழில்களின் கீழ் 104 விண்ணப்பங்கள் வங்கிகளில் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குமாறு வங்கியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற முடியும்.
* மீன்பிடித் தொழில் என்பது நம்முடைய பாரம்பரியத் தொழில்களில் ஒன்றாகும். இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் முடிந்த அளவிற்கு உதவிகளைச் செய்திட வேண்டும்!
* 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அவர்கள் 13.8.2021 அன்று தாக்கல் செய்தார். அப்போது நிதித்துறையில் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தார்கள். அரசின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து வங்கிகளும் தங்களது கணக்கு விபரங்களை எங்களுக்கு அளித்துள்ளன. எதிர்காலத்தில் இந்தக் கவனத்தை இன்னும் நாங்கள் கூர்மைப்படுத்துவோம். அதற்கு அனைத்து வங்கிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
* கோவிட் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!" என்றார்.
கூட்டத்தின் நிறைவில், பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், “வங்கியைச் சார்ந்திருக்கக்கூடிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, சுயஉதவிக் குழுவினருக்கான கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நீங்கள் முடிந்த அளவிற்கு கடன் அளிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இதற்கான ஆக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கல்விக்காக, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்காக நீங்கள் வழங்கக்கூடிய கடனை ஒவ்வொரு மாவட்டமாக நீங்கள் வழங்குகின்றபோது, அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரடியாக வருகிறேன் என்ற அந்த செய்தியையும் உங்களுக்கு தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்." எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
கே.என்.நேரு,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல்
தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை
கூடுதல் தலைமைச் செயலாளர்
எஸ்.கிருஷ்ணன், இ.ஆ.ப., மாநில அளவிலான
வங்கியாளர் குழு தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை
இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான பி.பி.சென்குப்தா, இந்திய ரிசர்வ்
வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி, நபார்டு முதன்மை பொது
மேலாளர்
வெங்கடகிருஷ்ணா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, பாங்க் ஆப்
பரோடா, TNUHDB ஆகிய வங்கிகளின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக