வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

தமிழ் பௌத்தத்தை சிங்கள சமூகத்திடம் கொண்டு சேர்த்த தருமரதன தேரோ - மயிலை சீனி வேங்கடசாமி

.namathumalayagam.com "மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களின் 4ஆம் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டது இந்தக் கட்டுரை. அவர் எழுதிய பௌத்த ஆய்வுகளுக்கு சிங்கள பௌத்த பிக்குமார் அதிகம் ஒத்துழைத்திருந்தார்கள். அவர் எழுதிய “பௌத்தமும் தமிழும்” நூலுக்கும் இலங்கைச் சேர்ந்த சிங்களப் பண்டிதர் முதலியார் ஏ.டி.எஸ்..ஜி.புஞ்சிஹேவா நிறைய ஒத்துழைத்திருந்தார். அந்த நூலின் அணிந்துரையைக் கூட அவர் தான் எழுதியிருந்தார். அது போல அவரின் தமிழ் பௌத்தம் பற்றிய ஆய்வுகளை சிங்கள ஆய்வாளர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இக்கட்டுரையை அவர் தமிழ் நாட்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரருக்கு (Pandit Hisselle Dhammaratana Mahāthera) வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்திய போது எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் உயிருடன் இருந்த போது எழுதப்பட்ட கட்டுரை இது. 04.06.1972 அன்று அவர் காலமானார். இக்கட்டுரையை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தனது 80 வது வயதில் 08.07,1980 அன்று காலமானார்.

ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர் சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவற்றை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வெளியிட்டு இன்னும் பல தமிழ்  இலக்கியங்களை சிங்களச் சமூகத்துக்கு கொண்டு போய் சேர்த்தவர்களில் முதன்மையானவர் என்று கூறலாம்.

இன்றும் அவரின் ஆய்வுகளின்றி சிங்களத்தில் புராதன தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேச முடிவதில்லை. தென்னிந்தியாவில் பௌத்தம் எந்தளவு செழித்திருந்தது என்பது பற்றி தீபவம்சமும், மகாவம்சமும் எதுவும் கூறாது கடந்து போயுள்ளது என அவர் தனது  “Buddhism in South India” என்கிற நூலின் நூலின் அறிமுகத்தின் முதலாவது வரியிலேயே தொடங்குகிறார்.

இலங்கையிலே கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்ஸெல்லெ என்னும் ஊரில் கருணாநாயக பதிரன்ன ஹெலாகே என்று பெயர் பெற்ற உயர்தரக் குடும்பத்தில் அருள்திரு. தருமரதன தேரோ பிறந்தார். இவருடைய தந்தையாரின் பெயர் ஹெர்மானிஸ் அப்புஹாமி என்பது; தாயார் திருமதி புஞ்சினேனா குமாரசிங்க ஹாமினே என்பவர். இவர்களுக்கு மூன்றாவது குமாரனாகப் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் தர்மபாலர் என்பது. தர்மபாலர் 1914ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே இவர் கல்வி பயில்வதில் ஆர்வமுடைய வராய்ப் பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றார். 

இளைஞரான தர்மபாலர் தம்முடைய பதினாறாவது வயதில் பிக்ஷ்வாக எண்ணங் கொண்டு, தம்முடைய உறவினரான திரு. ஞானோதய தேரரிடஞ் சென்று அவருக்குச் சீடரானார். 1930ஆம் ஆண்டில் புத்த சங்கத்தைச் சேர்ந்து துறவியானார். பிவானவுடன் தருமரதன தேரோ என்று பெயர் பெற்றார். 

பிrவான தருமரதன தேரோ, ஞானோதய மகாதேரரால் நிறுவப்பட்ட சரஸ்வதி பிரிவேணா என்னும் கலாசாலையில் சேர்ந்து பாலி, சமஸ்கிருதம், சிங்களம் என்னும் மொழிகளையும், மற்றும் சில சாத்திரங்களையும் கற்றார். 1936ஆம் ஆண்டில் முதல் பரீட்சையிலும், 1939 ஆம் ஆண்டில் மத்திய பரீட்சையிலும் தேறிப் பின்னர் 1945ஆம் ஆண்டில் பண்டிதர் பட்டம் பெற்றார். சரஸ்வதி பிரிவேணையில் கல்வி பயின்று கொண்டிருந்தபோதே இவர், அப்பிரிவேணையின் ஆசிரியராகவும் இருந்து பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்து வந்தார். தருமரதன தேரோ அவர்கள் தமிழ் கற்ற வரலாறு குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரத்தில் ஆங்கிலம் பயில்வதற் காகத் தேரோ அவர்கள் சென்றபோது தமது சொந்த ஊராகிய ஹிஸ்ஸெல்லெ நகரத்தில் தங்கினார். அவ்வூரில் அப்போது (1945) ஆஸ்பத்திரியின் தலைவராக இருந்தவர் யாழ்ப்பாணத்துத் தமிழரான டாக்டர் ஏ. சின்னதம்பி என்பவர். சிறிதளவு சிங்களம் கற்ற டாக்டர் சின்னதம்பி சிங்கள மொழியை நன்றாகக் கற்க விரும்பி, அங்கு வந்திருந்த தருமரதன தேரோவைக் கண்டு தமக்குச் சிங்கள பாஷையைப் படிப்பிக்கும்படி கேட்டார். தேரோ அவர்கள் இந்த வாய்ப்பைத் தமக்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணி, ஒரு நிபந்தனையின்மேல் அவருக்குச் சிங்களம் கற்பிப்பதாக உடன்பட்டார். அந்த நிபந்தனை என்னவென்றால், தேரோ அவர்கள் டாக்டருக்குச் சிங்களம் கற்பிப்பதென்பதும், டாக்டர் அவர்கள் தேரோவுக்குத் தமிழ் கற்பிக்கவேண்டும் என்பது மாகும். 


தேரோ அவர்கள் விரைவில் தமிழைக் கற்றுக்கொண்ட படியால், டாக்டர் சின்னதம்பி அவர்கள் தேரோவை யாழ்ப் பாணத்துக்குப் போய் அங்கே இந்துக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிக்குமாறு கூறினார். தேரோ அவர்கள் யாழ்ப்பாணம் சென்று, இந்துக் கல்லூரியில் தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு பயின்றார். 1946ஆம் ஆண்டு தமிழில் பண்டித பரீட்சையில் தேறியதோடு, கொழும்பு நகரில் நடைபெற்ற 

O.S.S. தமிழ்ப் பண்டித பரீட்சையிலும் வெற்றி பெற்றார். இவ்வாறு தமிழ் கற்றுத் தேர்ந்த தேரோ அவர்கள், யாழ்ப் பாணத்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்து மாணவர்களுக்குச் சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்பித்துவந்தார். அதே சமயத்தில், இலங்கைச் சர்வகலாசாலைப் பிரவேச பரீட்சைக்கும் படித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில்தான் இவர், தமிழ்-சிங்கள மா அகராதியின் முதல் பாகத்தை எழுதி அச்சிட்டார். 

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைச் சர்வ கலாசாலைப் பிரவேச பரீட்சையில் தேறியவுடன், இலங்கைச் சர்வகலாசாலையில் சேர்ந்து ஏனைய பாடங்களுடன் சிங்களத்தை முதல் மொழியாகவும் தமிழை இரண்டாவது மொழியாகவும் பயின்று, 1953ஆம் ஆண்டு பி.ஏ. பரீட்சையில் கௌரவப் பட்டம் பெற்றார். 

பின்னர், இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டியில் உள்ள கதிரேசன் கல்லூரியின் ஆசிரியராக 

அமர்ந்து, ஏறத்தாழ ஐந்து ஆண்டு கல்வி கற்பித்துவந்தார். 1957ஆம் ஆண்டு கதிரேசன் கல்லூரியைவிட்டு சஹிரா கல்லூரியில் சில காலம் ஆசிரியராகக் கல்வித் தொண்டு செய்தார். அவ்வாண்டு இறுதியில், தம்முடைய குருவாகிய மகாதேரோவின் விருப்பப்படி அக்கல்லூரியைவிட்டு சரஸ்வதி பிரிவேணைக்கு வந்து, அதன் துணை முதல்வராகக் கடமை ஏற்றுக்கொண்டு கல்வித் தொண்டினைச் சிறப்பாகச் செய்து கொண்டு வருகிறார். 

சரஸ்வதி பிரிவேணையில் தருமரதன தேரோ அவர்கள் ஆசிரியராக வந்தபிறகு அக்கல்வி நிலையத்தைப் பெரிதும் வளர்ச்சிபெறச் செய்தார். முன்பு கற்பிக்கப்பட்டுவந்த சிங்களம், சமஸ்கிருதம், பாலி, பௌத்த தருமம், சரித்திரம் முதலிய பாடங்களுடன் புதியதாக ஆங்கிலம், தமிழ், சரித்திரம், கணிதம் 

முதலிய பாடங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். S.S.C., H.S.C., U.E. (University Entrance) முதலிய வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. கல்வி பயிலும் மாணாக்கர்களின் தொகை அதிகரித்துக்கொண்டு வந்தது. ஏறத்தாழ 650 மாணாக்கர்கள் கல்வி கற்று வருகின்றனர். பல பௌத்த பிக்குகளும் இலவசக் கல்வி பயின்றுவருகிறார்கள். 1963ஆம் ஆண்டு இந்த சரஸ்வதி பிரிவேணை, வித்தியோதயப் பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப்பட்டு, சரஸ்வதி வித்யோதயப் பிரிவேணை என்று பெயர் பெற்றது. 

1958ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.ஏ. பரீட்சையில் தேறினார். 

இவ்வாறு பல மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராக விளங்கும் தருமரதன தேரோ அவர்கள், பேர்பெற்ற எழுத்தாளராகவும் விளங்குகிறார். இளமையிலேயே இவர் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். இப்போது இலங்கையில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். பல எழுத்தாளர் சங்கங்களிலும் இலக்கியச் சங்கங்களிலும் தலைவராகவும், துணைத் தலைவராகவும், அங்கத்தினராகவும் இருக்கிறார். 

சென்ற ஆண்டு மலாயா நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்று அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

1962ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கொழும்பு சஹிரா கல்லூரியில் கூட்டிய கூட்டத்தில் தரும ரதன தேரோவுக்கு வெள்ளி விளக்கை வழங்கிக் கௌரவப் படுத்தியது. 

1960ஆம் ஆண்டு, இலங்கையிலுள்ள பதுளை நகரத்தில் உள்ள மலையக் கலை இலக்கிய மன்றம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் அளித்துப் பாராட்டியது. 

இவர் எழுதியுள்ள பத்தினி தெய்யோ, தென் இந்திய பௌத்த வரலாறு முதலிய நூல்களுக்கு இலங்கை அரசாங்கமும், இலங்கை சாகித்திய மண்டலமும், யூனெஸ்கோ (Unesco) தாபனமும் பரிசுகள் வழங்கியுள்ளன. 

இப்போது சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தாராகிய நாம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்தி மகிழ்கிறோம். 

பேராசிரியர் தருமரதன தேரோ அவர்கள் எழுதியுள்ள நூல்களாவன:

  • தமிழ் - சிங்கள அகராதி (முதல் பாகம்), 1948.
  • இரகுவமிசகதாமிருத அரும்பதவுரை, 1949.
  • மணிமேகலைச் சம்பு (மணிமேகலை என்னும் தமிழ்க் காவியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு), 1950.
  • பத்தினி தெய்யோ (சிலப்பதிகாரக் காவியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு), 1958. (இலங்கை அரசாங்கத்தின் ரூபாய் 1500 பரிசு பெற்றது )
  • சிங்கள மொழியில் தமிழ் மொழி செலுத்திய ஆதிக்கம் (Tamil Influence on Sinhalese Language - சிங்கள பாஷையில் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்), 1961.
  • தென் இந்தியாவில் பெளத்தமத வரலாறு (சிங்களத்தில் எழுதப்பட்ட நூல், 1964இல் இந்நூலுக்கு ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டலம் ஒரு பரிசையும், யூனெஸ்கோ நிலையம் ஒரு பரிசையும் வழங்கியுள்ளன)
  • தமிழ் இலக்கணம் (சிங்கள மொழியில் எழுதப்பட்டது), 1965.
  • மகாவமிசம் (தமிழ் மொழிபெயர்ப்பு. இலங்கை அரசாங் கத்தின் வேண்டுகோளின்படி பாலி பாஷையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது), 1960 (அச்சில்).
  • ஆர்திக வித்யா பிரவேசம் (சிங்களப் பொருளியல் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு; இலங்கை அரசாங்க மொழிப் பகுதியின் வேண்டுகோளின்படி எழுதப்பட்டது). 
  • சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு (அச்சில்).

பாரதி, பதினான்காவது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ், 

தமிழ் எழுத்தாளர் சங்க மாத வெளியீடு, 1966

கருத்துகள் இல்லை: