புதன், 4 ஆகஸ்ட், 2021

தமிழில் அர்ச்சனை: அறிவிப்புப் பலகையை வெளியிட்ட முதல்வர்!

தமிழில் அர்ச்சனை: அறிவிப்புப் பலகையை வெளியிட்ட முதல்வர்!

மின்னம்பலம் :கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சேகர்பாபு கோயில் நிலங்களை மீட்பது, கோயில்களில் ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 47 திருக்கோயில்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகையை முதல்வர் நேற்று வெளியிட்டார்.

திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அதில் அர்ச்சகர்களின் பெயர், செல்பேசி எண் ஆகியவை பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும் வகையில் குறிப்பிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும் என்று அறிவிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: