வியாழன், 5 ஆகஸ்ட், 2021

தயாரிப்பாளர் சங்கங்களை இணைக்கும் திமுக: மீண்டும் சினிமா அரசியல்!

தயாரிப்பாளர் சங்கங்களை இணைக்கும் திமுக: மீண்டும் சினிமா அரசியல்!
minnambalam.com : அரசியலுக்கும் சினிமாவுக்கும் தமிழ்நாட்டில் பொருத்தம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் தேர்தல் வெற்றிக்கு பின் சினிமாவையும், அத்தொழில்சார்ந்த சங்கங்களையும் தூரத்தில் வைத்தனர். அவற்றில் தலையிடுவதால் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இருவருக்கும் வாரிசு, குடும்ப ரத்த உறவுகள் இல்லாததால் எளிதில் இது சாத்தியமானது.

ஆனால் கலைஞர் கருணாநிதியின் குடும்பமும் திரையுலகில் கோலோச்சியதால், எந்த சினிமா துறை அவரது அரசியல் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததோ, அதுவே பல சர்ச்சைகளிலும் அவரை சிக்க வைத்தது. 2011ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவரது தலைமையிலான திமுக கூட்டணி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவ காரணங்களில் ஒன்றாக சினிமா துறையும் அமைந்துவிட்டது.

இதற்கு காரணகர்த்தாக்களாக சன் பிக்சர்ஸ் மாறன், உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி ஆகியோரின் சினிமா பிரவேசம் அமைந்தது.

இவர்கள் நலம் காக்க களம் இறங்கியது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த மறைந்த ராமநாராயணன், அவரது அடிப்பொடிகள் என்றால் மிகையாகாது. அதில், ஏற்பட்ட அத்துமீறல்கள், அதனை சரி செய்ய அரசு அதிகாரத்தை கலைஞர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியது பொதுவெளியில் விவாதமானது. இதனை தனது அரசியல் பிரச்சாரத்திற்கு சாதுர்யமாக பயன்படுத்தினார் அதிமுக பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா.

கலைஞர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் திரைப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை வாங்குவது ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல், அத்துமீறல்களை சமாளிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பயன்படுத்தப்பட்டது.

சாதாரண உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு செல்லமுடியாத நிலை உருவானது. சங்க நிர்வாகிகளை காட்டிலும் சன் குழுமத்தின் நிர்வாகி சாக்ஸ், பைனான்சியர் அய்யப்பன் ஆகியோர் கண் அசைவுக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப சங்கம் இயங்கியது. இந்த சூழ்நிலையை தங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், பிரச்சினைகளை தீர்க்கவும் நிர்வாகிகள் பயன்படுத்திக்கொண்டனர். அதே போன்ற சூழ்நிலை, திரைப்பட துறைசார்ந்தவர்களால் தற்போது ஏற்பட தொடங்கியுள்ளது என்கின்றனர் திரைப்பட தயாரிப்பாளர்களும், பைனான்சியர்களும்.

தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று புதிதாக இரண்டு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் கடந்த வருடம் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற முரளி என்கிற ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்ட விழாவில் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்ட பாரதிராஜா தலைமையிலான நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் திரைத்துறை சார்ந்த சங்கங்கள் அனைத்தும் தங்கள் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், அரசாங்கத்தின் ஆதரவு தங்கள் சங்கத்திற்கு உள்ளது என பிரகடனப்படுத்தவே 20 லட்ச ரூபாய் செலவு செய்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்தினர் முரளி என்கிற ராமசாமி தலைமையிலான அணியினர் என்கிற குற்றசாட்டு அப்போது எழுந்தது.

ஆனால் அதிமுக அரசு, தேர்தல் நெருங்கிவரும் காலம் என்பதால் தாமரை இலை தண்ணீராக தனது அணுகுமுறையை திரைத்துறை மீது கையாண்டது. இதன் காரணமாக உண்மையில் படம் தயாரிக்கும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளே திரைத்துறையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முரளி என்கிற ராமசாமி தலைமையிலான சங்கம் எடுக்கும் எந்த முடிவுகளும் திரைத்துறை சார்ந்த சங்கங்களில் செல்லுபடி ஆகவில்லை.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் 2006ல் ராமநாராயணன் தலைமையில் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கம் போன்று ஆளும்கட்சியின் ஆதரவு பெற்ற அதிகாரம் மிக்க சங்கமாக, அமைதிப்படை அமாவாசை போன்று ஒரே நாளில் முகம் மாறிபோனது.

இனிமேல் நாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும், அமுல்படுத்த வேண்டும் என திரைத்துறை சங்கங்கள், பைனான்சியர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டன.

மறுத்த சங்கங்களின் நிர்வாகிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது.

அப்படி மிரட்டப்பட்டவர்களில் திரைப்பட துறைசார்ந்த அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைக்கும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி குறிப்பிடத்தக்கவர் என்கின்றனர். ஒரு படத்தின் படப்பிடிப்பை அல்லது அதற்கு பிந்தைய பணிகளை, பட வெளியீட்டை தடுக்கவோ, நிறுத்திவைக்ககூடிய அதிகாரம் மிக்க அமைப்பு இது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி என்கிற ராமசாமி படத்தயாரிப்புகள் மூலம் ஏற்பட்ட கடன்களை திருப்பிக்கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அதனால் பைனான்சியர்கள் கடனை திருப்பிக்கொடுக்குமாறு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், ’முதல்வரை சந்திக்க புறப்பட்டு கொண்டிருக்கிறேன். சந்தித்துவிட்டு வந்தபின் பேசுகிறேன் ’என்கிற பதிலை கூறி பயமுறுத்துவதாக கூறப்படுகிறது.மேலும்

“முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்தினருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இன்றைக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆர்கே.சுரேஷ், சந்திரபிரகாஷ் ஜெயின் இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள். மன்னன், கதிரேசன் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். ராதாகிருஷ்ணன் மட்டுமே திமுக கட்சி உறுப்பினர்,

இப்படிப்பட்ட நிர்வாக குழு திமுக தலைமையிலான அரசுக்கு நற்பெயரை எந்த சூழ்நிலையிலும் உருவாக்க முயற்சிக்காது. சூழ்நிலை கைதியாக ராதாகிருஷ்ணன் சிக்கியுள்ளார். இவரால் தனித்து செயல்பட முடியாது. முரளி என்கிற ராமசாமி தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியை மட்டுமே செய்து வருகின்றார்” என்கிற குற்றச்சாட்டு கோடம்பாக்க சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்தசூழ்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவராக இருக்கும் சிங்காரவேலன் திரைத்துறை பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடு பற்றி ஒரு ஆடியோ பதிவை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளார்.

முரளி என்கிற ராமசாமி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு திரையுலகத்தில் பலரையும் மிரட்டி வருவதாகப் புகார் கூறியுள்ளார் சிங்காரவேலன்.

அவர் மேலும் கூறும்போது, “என்னைத் தவிர வேறு யாரும் முதல்வருடன் நேரடியாக பேச முடியாது. நான் மட்டுமே பேசி வருகிறேன். எனவே இந்தத் திரையுலகத்துக்கே நான்தான் அத்தாரிட்டி என்பதைபோல முரளியின் செயல்பாடுகள் உள்ளன.பெப்சி’யின் தலைவர் செல்வமணியைக்கூட முரளி மிரட்டி வைத்திருக்கிறார். உங்களைப் பதவியைவிட்டுத் தூக்க அரசு தயாராக இருந்தது. ஆனால் நான்தான் உங்களுக்கு ஆதரவாகப் பேசி உங்களை இருக்க வைத்துள்ளேன். அதனால் நீங்கள் என் பேச்சைத்தான் கேட்க வேண்டும். மற்ற சங்கங்களின் பேச்சைக் கேட்கக் கூடாது என்று செல்வமணியை முரளி மிரட்டி வைத்திருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

இப்படி பெப்சி அமைப்பை மிரட்டித்தான் நடிகர் சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்க வைத்துள்ளார் முரளி. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சிம்பு நிச்சயமாக கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது எதற்காக அவர் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டும்..? இது அராஜகமானது.முரளியின் அத்துமீறல்களைப் பற்றி மிக விரைவில் அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி முதல்வரிடம் நேரில் சென்று புகார் கூறவுள்ளோம்..” என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.

இந்த ஆடியோ பதிவுக்கு உடனடியாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “அப்படி யாரும் என்னை மிரட்டவில்லை, இது தவறான தகவல். கொரோனா தொற்று பிரச்சினை முடிவுக்கு வந்தபின் சினிமா துறை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தபோது எங்களுக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்” என்று பதில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

சிங்காரவேலன், ஆர்.கே.செல்வமணி இருவருடைய ஆடியோ பதிவும் திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அடிப்படையில் தீவிரமான திமுக உறுப்பினரான சிங்காரவேலன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதும் பட்டுக்கோட்டை தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவர். இந்த தகவல்களை வைத்துக்கொண்டு சிங்காரவேலனை அழைத்து விபரம் கேட்கப்பட்டுள்ளது திமுக தரப்பில், அதேபோன்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி என்கிற ராமசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருவரையும் சமாதானமாக போகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2011ல் ஆட்சி பறிபோன பின்பு திரைத்துறையில் அதுவரை திமுக அனுதாபிகளாக தங்களை அடையாளப்படுத்தி கொண்டவர்கள் திமுகவுக்கு எதிராக செயல்பட்டனர் உறுதியாக இருந்தவர் ராமநாராயணன் மட்டுமே. தனது தலைவர் பதவியையும் உடனடியாக ராஜினாமா செய்தவர், அவரின் அன்றைய செயலுக்குமரியாதை செலுத்தும் வகையிலும், பாரம்பர்யமான சங்கம் என்கிற முறையில் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தை மட்டுமே திமுக ஆதரிக்கும் என்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் மட்டுமே வழங்கப்படுமென்றும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஆடி கொடை திருவிழாவிற்கு சென்றுள்ள முரளியுடன் சிங்காரவேலன் தொலைபேசியில் நடத்திய நீண்ட உரையாடல் இருவருக்கும் இடையே புரிதலையும், நட்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக டி.ராஜேந்தர் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைக்கும் முயற்சியை அந்த சங்கத்தின் துணை தலைவராக இருக்கும் சிங்காரவேலன் மேற்கொண்டுள்ளார். இம்முயற்சி ஏன் எதற்காக என்பதை பற்றி வழக்கம் போன்று சிங்காரவேலன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “சிலம்பரசன் மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். இதனால் பாதிப்பதும் தயாரிப்பாளர்களே. முந்தைய நிர்வாகம் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பார்கள் ஆனால் இவர்கள் படப்பிடிப்பை பெப்சி மூலம் நிறுத்தியுள்ளனர். பெப்சி ஏற்றுக்கொள்ளும் சங்கமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே உள்ளது. இதனால் மற்ற இரண்டு சங்கமும் பெப்சியுடன் பேசக்கூட முடியவில்லை. இதனால் சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் நலன்கருதி சங்கத்தை இணைத்து தயாரிப்பாளர்களின் ஒற்றுமையை பலப்படுத்த எண்ணினோம். சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் உள்ளனர்.

இன்றைய சூழலில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனித்து செயல்படுவது சவாலான விஷயம் தயாரிப்பாளர் நலன்கருதி அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும்” என்று சிங்காரவேலன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “தற்போது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தச் சங்கத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அதேபோல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. நாங்கள் தனித்தே செயல்படுவோம்..” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த சிங்காரவேலன் “இது நான் மட்டுமே எடுத்த முடியவல்ல. என்னுடன் சேர்த்து சங்கத்தின் பொருளாளரான கே.ராஜன், செயலாளர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ், துணைத் தலைவர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார், இணைச் செயலாளர்களான பாண்டியன், அசோக் சாம்ராஜ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு.சங்கத்தில் தற்போதைக்கு நாங்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவை ஏற்றுக் கொள்வதுதான் சங்கத்திற்கு சிறப்பு.

தற்போது சென்சாருக்கு விண்ணப்பிக்கும் தகுதி நமது சங்கத்திற்குக் கிடைத்துள்ளது என்றாலும், பெப்சியுடன் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தகுதியெல்லாம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. அவர்கள்தான் அதை பேசி முடித்துத் தீர்க்கப் போகிறார்கள்.. அதனால் நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய ஆடியோ செய்திக்கு மீண்டும் பதிலளித்த ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், தங்கள் சங்கம் தனித்து இயங்குவதை மீண்டும் உறுதிபடச் சொல்லியுள்ளார்.

இந்தத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது தலைவராக உஷா ராஜேந்தரும், ஆலோசகராக டி.ராஜேந்தரும் இருக்கிறார்கள். சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த கே.ராஜன், பி.டி.செல்வகுமார், சுபாஷ் சந்திர போஸ், அசோக் சாம்ராட் போன்றவர்கள் பல மாதங்களுக்கு முன்பாகவே முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு சங்கத்தில் இருந்து விலகிவிட்டனர். அந்த பொறுப்புகளுக்கு புதிதாக நியமிக்கவே அந்த சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் சங்கத்தில் நுழைந்திருக்கும் இந்த ஆட்சி மாற்ற அரசியல் அடுத்தடுத்து திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும்!

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை: