ஞாயிறு, 1 டிசம்பர், 2019

ராஜு சுந்தரம் .. மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு நிச்சயம் ராஜு சுந்தரம் தான். ...


சுமதி விஜயகுமார் : 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் வரும் 'விசுவநாதன் வேலை வேண்டும்' பாடல் அந்த காலத்தில் பட்டையை கிளப்பி இருக்கும். பாடலுடன் அந்த நடனம் தமிழ் திரையில் புதிய மாற்றத்தை
கொண்டு வந்தது. அதன் பிறகு தமிழ் திரையில் மாஸ்டர் முகுர் சுந்தர் கோலோச்சினார். தென்னிந்திய படங்களில் பல பாடல்களுக்கும் அவர் தான் நடன ஆசிரியர். பிரபுதேவா , ராஜு சுந்தரம் , நாகேந்திர பிரசாதின் தந்தை. ஒரு முறை மேடையில் அவரின் மூன்று மகன்களும் அருகில் இருக்க ' உங்கள் மூன்று மகன்களில் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் ' என்று கேட்ட பொழுது இருவரை விட்டுட்டு ஒருவரை மட்டும் சொல்ல கொஞ்சம் சங்கடப்பட்டாலும் ' ராஜு சுந்தரம்' என்று சொன்னார். மற்ற இருவரை விடவும் பிரபு தேவா புகழின் உச்சியில் இருந்த போதும் அவர் ராஜு சுந்தரத்தை சொன்னதில் எனக்கு சிறிதும் ஆச்சர்யம் இல்லை.
'இதயம்' திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அதிலும் 'ஏப்ரல் மேயிலே ' பாடலில் யார் இவர் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபுதேவா. அவரின் உடல் வளையும் அளவிற்கு வேறு யாருக்கும் தமிழ்திரையில் வளைந்ததில்லை. அதன் பிறகு சில பாடல்களில் நடனம் ஆடியவர் 'காதலன்' படம் மூலம் கதாநாயகன் ஆனார். பல சூப்பர் ஹிட் படங்கள், புகழ், சர்ச்சை என்று பயணித்தவர் ஒரு கட்டத்தில் படங்கள் இல்லாமல் இருந்தார். ஆனால் ஹிந்தி திரைப்படங்களுக்கு நடன ஆசிரியரானார். மின்சார கனவு. lakshya படங்களில் வரும் இரண்டு பாடலுக்கு சிறந்த Choreographer award வாங்கினார்.

அதே இதயம் திரைப்படத்தில் இன்னொரு பாடல் 'ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்' . பிரபுதேவாவின் பாடலை போல் இந்த பாடல் பிரபலம் இல்லை. அதில் ராஜு சுந்தரம் நடனம் ஆடி இருப்பார். அதன் பிறகு எந்தெந்த பாடல்களில் வந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் 98 -99 களில் ராஜு சுந்தரத்தை மட்டுமில்லை அவரின் குழுவில் இருப்பவர்களை கூட கண்டுபிடிக்க முடிந்தது.
பிரபுதேவாவிற்கு மைகேல் ஜாக்சன் இன்ஸ்பிரஷன் என்பதால் அவர் ஆடைகளும் மைகேல் ஜாக்சனை போல் உடுத்தி இருப்பார். Baggie pant என்ற மிக தொளதொள பேண்டும் பொருத்தமே இல்லாத நிறங்களில் சட்டையும் அணிவார். சற்றே எரிச்சலை உண்டாக்கும். ஒரு காலகட்டத்தில் அவரின் படங்களை அவரின் ஆடைகளுக்காகவே தவிர்த்ததுண்டு.
ராஜு சுந்தரத்தின் அசிஸ்டன்ட் ஜானி, ஒரு பேட்டியில் குறிப்பிடுவார் 'பிரபு தேவா ஆடுவது மிக கடினம் போல் இருக்கும். ஆனால் உடலை வளைபவர்கள் யாரும் அவரின் நடனத்தை எளிதாக ஆடிவிட முடியும். ராஜு சுந்தரத்தின் நடனம் பார்க்க எளிதாக இருக்கும் , பல முறை ஆடிப்பார்த்தால் தான் தவிர்க்காமல் ஆட முடியும்.' அதன் பிறகு அவரின் பாடல்களில் வரும் stepsஐ உன்னிப்பாக கவனிக்கும் போது தான் எளிதாக ஆட முடியாது என்பது புரிந்தது. பல பாடல்களை இசை, வரிகளை தாண்டி ராஜு சுந்தரத்தின் நடனத்திற்காகவே பார்த்ததுண்டு.
அவரின் பாடல்களில் கதாநாயகனுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அவருடன் ஆடும் அவரின் assistantகளுக்கும் கொடுத்திருப்பார். அழகிய தீயே , ஈஸ்வரா, கொஞ்ச நாள் பொறு தலைவா, அவள் வருவாளா போன்ற பாடல்கள் சிறு சான்றுகள். மனம் விரும்புதே பாடலில் இரண்டாம் பல்லவியில் சிம்ரனின் முக்கியத்துவத்திற்கு ஈடாக அவருடன் ஆடும் மற்ற பெண்களுக்கும் இருக்கும். பின்னால் நிற்க வைக்காமல் கதாநாயகன்/கதாநாயகியின் அருகிலேயே நிறுத்திவைப்பார். நடனமே ஆட தெரியாத அரவிந்த் சாமியை குச்சி குச்சி ராக்கம்மா மற்றும் தத்தி ஆடுதே தாவி ஆடுதே பாடல்களில் அரவிந்த் சாமிக்கு ஏற்ற வகையில் நடனம் அமைத்திருப்பார் .
ஏனோ பிரபுதேவாவின் அளவிற்கு புகழ் அடையமுடியவில்லை என்றாலும் , மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு நிச்சயம் ராஜு சுந்தரம் தான்.

கருத்துகள் இல்லை: