சனி, 7 டிசம்பர், 2019

உள்ளாட்சி தேர்தல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - மு.க.ஸ்டாலின் பேட்டி  தினத்தந்தி :  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உள்ளாட்சி தேர்தலையொட்டி வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. தி.மு.க. சார்பில் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று சொன்னால், தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது என்று திட்டமிட்டு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அரசியல்வாதிகள் இந்த செயலைச் செய்தால்கூட, அரசியலுக்காக செய்கிறார்கள் என்று கருதலாம். ஊடகத்துறையில் உள்ள சிலரும் தி.மு.க. தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்திற்கு செல்கிறது என தவறான பிரசாரம் செய்கின்றனர்.


இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மிகத் தெளிவாக வந்திருப்பது தி.மு.க.வின் கோரிக்கைக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும். இன்றைய தீர்ப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுடைய தொகுதி மறுவரையறையை முறையாக கடைப்பிடித்த பின்பே தேர்தலை நடத்த வேண்டும்.

இது தி.மு.க. வைத்த கோரிக்கை; அதைத்தான் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை. மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் தமிழ்நாடு உள்ளாட்சி பதவி இடங்களுக்கு இடஒதுக்கீடு விதி ஆறினை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும். அங்கேயே இடஒதுக்கீடு கொண்டுவந்து, முறையாக நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இப்போதாவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை இந்த அரசும், அரசுடன் கூட்டணி வைத்துள்ள தேர்தல் ஆணையமும் கடைப்பிடித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற உண்மையான உள்ளாட்சி அமைப்புகள் அமைய, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் சக்தியை சந்திக்க தெம்பிருந்தால், திராணி இருந்தால் முறையாக அ.தி.மு.க. அரசு தேர்தலைச் சந்திக்க வேண்டும். தி.மு.க.வை பொறுத்தவரையில் துணிச்சலாக, தெளிவாக இந்த தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும் என சேலத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளாரே?

பதில்:- நடத்தித்தானே ஆகவேண்டும். நடத்தமாட்டேன் என்று சொல்கிறாரா? தேர்தலை மட்டுமே தேர்தல் ஆணையம் நடத்தும். இடஒதுக்கீடு என்பது அரசு செய்ய வேண்டிய வேலை. அதை முறையாக செய்ய வேண்டும். அதை இந்த அரசு செய்யாததால்தான் இவ்வளவு குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:- 9 மாவட்டங்களை விடுத்து தேர்தல் நடத்துவதால் ஏதேனும் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளதா?.

பதில்:- நிச்சயம் குழப்பம் ஏற்படும். தேர்தலை நிறுத்த தி.மு.க. தான் முயற்சி செய்கிறது என அவர்கள் தவறான பிரசாரம் செய்கிறார்கள். அதை நிறுத்துவதற்கான எல்லா அடிப்படை பிரச்சினைகளையும் அவர்கள் செய்துகொண்டு யாராவது நீதிமன்றத்துக்கு செல்வார்களா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. காரணம் தோல்வி பயம். தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: