செவ்வாய், 3 டிசம்பர், 2019

22 அடி உயர அருந்ததிய தீண்டாமை தடுப்பு ( கருங்கல்) சுவர் இடிந்து 17 பேர் இறப்பு .. போலீஸ் தடியடி வீடியோ


தினகரன் :  2 குடும்பம் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த பரிதாபம்
  மறியல் செய்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக தடியடி
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே, கனமழை காரணமாக துணிக்கடை உரிமையாளர் வீட்டின் 22 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த 5 வீடுகள் மீது விழுந்து, இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக மறியல் செய்த மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில்  துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவரின் வீடு மற்றும் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தை சுற்றி 80 அடி நீளம், 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இருந்தது. இந்த சுவர் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த காம்பவுண்ட் சுவருக்கு அருகே ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் இருந்தன. அந்த வீடுகளில் 4 ஓட்டு வீடுகள், ஒரு வீடு சிமென்ட் ஷீட் கூரையுடன் கட்டப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகளின் மீது விழுந்தது.


தகவலறிந்ததும் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக போராடி, வீடுகளுக்குள் தூங்கிய நிலையில் பலியான 17 பேர் உடல்களையும் மீட்டனர். பலியானவர்கள் விவரம் வருமாறு:- ஆனந்தன் (38), அவரது மனைவி நதியா (35), மகன் லோகராம் (10), மகள் அட்சயா (6), பக்கத்து வீட்டை சேர்ந்த  அருக்காணி (40), அவரது மகள்கள் ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), அருக்காணியின் தாய் சின்னம்மாள் (60), அக்காள் ருக்மணி (43), தங்கை மகள் நிவேதா (20),  ஈஸ்வரன் என்பவரின் மனைவி திலகவதி (38), சிவகாமி (40), இவரது மகள் வைதேகி (22), மகன் ராமநாதன் (17), பக்கத்து வீட்டை சேர்ந்த குருசாமி (35), ராமசாமி என்பவர் மனைவி ஏபியம்மாள் (70), அடுத்த வீட்டை சேர்ந்த மங்கம்மாள் (70). விபத்தில் ஆனந்தன், அருக்காணி ஆகிய 2 பேரின் குடும்பத்தினர் அனைவரும் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர். போலீஸ் தடியடி: இறந்தவர்களின் சடலங்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இடமில்லாத நிலையில் 5 பேரின் சடலங்கள் கொட்டும் மழையில் பிரேத பரிேசாதனை கூடம் முன்பு வைக்கப்பட்டிருந்தன. சடலத்தை அறையில் வைக்ககூட நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் இறந்தவர்களின் உறவினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள்  மருத்துவமனை வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்ததால் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கடுமையாக தாக்கி பூட்ஸ் காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

காலி செய்யப்பட்ட 8 வீடுகள்: இடிந்து விழுந்த சுவர் போக சிறிது தூர காம்பவுண்ட் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்தால், அதுவும் சரிந்து விழும் என அஞ்சப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், அந்த மீதமுள்ள காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ள உத்தரவிட்டுள்ளது. வீடுகள் இடிந்த  இடத்திற்கு அருகே ரங்கத்தாள். வேலுச்சாமி, வீரம்மாள் வீடு உட்பட 8 பேரின் வீடுகள்  உள்ளன. இந்த வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

பலியான மாணவ, மாணவிகள்: விபத்தில் பலியான 17 பேரில் 3 பேர் மாணவ, மாணவிகள். பலியான நிவேதா என்பவர் கல்லூரி மாணவி ஆவார். அவர் பலியான அருக்காணியின் தங்கை மகள் ஆவார். அருக்காணி வீட்டில் இருந்த மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். பலியான ஆனந்தனின் மகன் லோகராம் 5ம் வகுப்பும், மகள் அட்சயா 1ம் வகுப்பும் படித்து வந்தனர். ஹரிசுதா பிளஸ் 2 மாணவி ஆவார். பேச சென்று உயிர் விட்ட பெண்: விபத்தில் இறந்த அருக்காணியும், திலகவதியும் உறவினர்கள். திலகவதியின் வீடு அருக்காணி வீட்டின் அருகில் உள்ளது. இந்த சம்பவத்தில் திலகவதியின் வீடு இடியவிலலை. ஆனால் அவர் நேற்று முன்தினம் இரவு அருக்காணியின் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருந்தார். அப்படியே அங்கு தூங்கி விட்டார். இதனால் அவர் உயிரிழக்க நேரிட்டது. அவர் இரவு தனது வீட்டிற்கு சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார்.

16 பேர் உடல் தகனம்: மேட்டுப்பாளையம் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து முடிந்ததும் 16 பேரின் சடலங்கள் மார்ச்சுவரி வேனில் ஏற்றப்பட்டு பத்ரகாளியம்மன் ரோட்டில் உள்ள கோவிந்தபிள்ளை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கே 16 பேரின் சடலம் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் சடலங்களை எடுத்து சென்ற உறவினர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்தனர்.

ஆளுநர் இரங்கல்:  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மழையால் மூன்று வீடுகளின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

தலா 4 லட்சம் நிவாரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 17 பேரின்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த  குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும், அந்த பகுதியை ஆய்வு செய்யவும் முதல்வர் எடப்பாடி இன்று கோவை செல்கிறார்.

உறவினர் வீட்டுக்கு சென்றதால் உயிர்தப்பிய தாய், மகன், மகள்


17 பேர் பலியான விபத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பலியாகிவிட்டனர. பலியான குருசாமியின் மனைவி சுதா, மகள் வைஷ்ணவி, மகன் மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். குருசாமியும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காலையில் கூலி வேலைக்கு செல்லவேண்டும் எனக்கூறி இரவிலேயே வந்துவிட்டார்.  குருசாமியின் மனைவி சுதா கூறுகையில், ‘‘சொந்தக்காரரின் வீட்டிற்கு சீர் நடத்த சென்றிருந்தோம். வேலைக்கு கட்டாயம் போக வேண்டும் என்று சொல்லி என் கணவர் ராத்திரி கிளம்பினார். இருந்துவிட்டு காலையில் போகும்படி சொன்னோம். ஆனால் அவர் கேட்கவில்லை. கனமழை பெய்கிறது. பார்த்து போங்கள் என்று சொல்லி அனுப்பினேன். ஆனால் வீட்டிற்கு வந்து இப்படி ஆகும் என்று நான் நினைத்து பார்க்கவில்லையே. என் குழந்தைகளை இனி யார் கவனிப்பார்கள்?’’ என கூறி கதறி அழுதார்.

‘தீண்டாமை சுவரால்’ விபரீதம்..?

நடூர் குடியிருப்பை சுற்றி 22 அடி உயரத்திற்கு கட்டியது தீண்டாமை சுவர். தாழ்த்தப்பட்ட மக்கள், உயர் வகுப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல விடாமல் தடுக்க இந்த சுவர் கட்டப்பட்டதாக, தலித் அமைப்பினர் நேற்று புகார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இந்த தீண்டாமை சுவரை இடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்திருந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தலித் அமைப்பினர் தீண்டாமை சுவரை உயிர் பலி வாங்கும் நோக்கத்தில் கட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

தோண்ட தோண்ட சடலங்கள்

5 வீடுகள் இடிந்த சம்பவம் உள்ளூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் முதலில் தெரிவிக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி.யை வரவழைத்து இடிபாடுகளை காலை 6 மணிக்கு தோண்ட துவங்கினர்.  2 மணி நேரம் இடிபாடுகளை அகற்றிய பின்னர் சடலங்களின் எண்ணிக்கை 17 என்பது தெரியவந்தது.5 வீடுகளுக்குள்ளும் பலியானவர்களின் உடல்கள் அண்டா, பக்கெட், கட்டில்களுக்கு இடையே நசுங்கிய நிலையில் கிடந்தன

கருத்துகள் இல்லை: