வெள்ளி, 6 டிசம்பர், 2019

இளையராஜாவின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவை.. .இளையராஜாவோடு நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள ..

மின்னம்பலம் : - இராமானுஜம்
இளையராஜா Vs பிரசாத் ஸ்டூடியோ: யார் பக்கம் நியாயம்?இந்திய சினிமாவில் 63 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட பிரசாத் ஸ்டூடியோ வணிக ரீதியாகத் தயாரிப்பாளருடன் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இளையராஜா மூலம் இப்படி ஒரு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்காது. இளையராஜாவும் தான் வசித்த, வாசித்த, சுவாசித்த இடத்தில் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இதைப்பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்கின்றனர். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்ன தொடர்பு... இந்தச் சர்ச்சையில் சொல்லப்படும் தகவல்களின் தெளிவான பிம்பம் என்ன என்பது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இளையராஜா இசைப்பணி மேற்கொண்டு வந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில், அவருக்கு முன்பாக இசையமைப்பாளர் தேவா பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார். அவருக்குப் புதிய படங்கள் போதுமான அளவு இல்லை என்ற நிலைமை ஏற்பட்டபோது இங்கே இருப்பது தனக்குப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படியாகாது என்று நிர்வாகத்திடம் கூறி இன்முகத்தோடு காலி செய்துவிட்டு சென்றார். அவர் பயன்படுத்தி வந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவை சில மாற்றங்கள் செய்து இளையராஜாவுக்குக் கொடுத்திருக்கிறது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது இருக்கும் இடத்தில் இளையராஜா தனது இசைப் பணிகளைச் செய்து வந்ததாகவும், திடீரென்று ஸ்டூடியோ நிர்வாகம் அவரை காலி செய்ய சொன்னதாகவும் கூறுவதில் உண்மை இல்லையா?

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ கிடைத்தது எப்படி?

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானது 1976ஆம் வருடம். அந்தப் படத்துக்கான இசைப் பணிகளை அவர் மேற்கொண்டது ஏவி.எம் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்தான். சில வருடங்கள் அந்த வளாகத்திற்குள் தனது இசைப் பணிகளை இளையராஜா மேற்கொண்டு வந்தார். அன்னக்கிளி படத்தைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த படங்கள், அதன் இசைக்காகவும் பாடல்களுக்காகவும் ரசிகர்களால் கவரப்பட்டு வெற்றிப் படங்களாகின. அதன் பின்னர் சினிமா விளம்பரங்களில் இசை - இளையராஜா என்று இடம் பெற்றாலே அந்தப் படம் வியாபாரமாகிவிடும் எனும் சூழல் ஏற்பட்டது. இளையராஜாவால் ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் வருமானமும் அதிகரித்தது. ஏவி.எம் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற வேண்டும் என்று இளையராஜா எண்ணிய நேரத்தில், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தங்களது வளாகத்துக்குள் அவர் குடிபுகுந்தால் வருமானம் அதிகரிக்கும் என்று வணிகரீதியாகக் கணக்குப் போட்டு அழைத்து வந்தது. ஆனால், அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்டது இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் இடம் இல்லை. இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இசைக்கூடத்துக்கு எதிரில் உள்ள கட்டடத்தில் இளையராஜா குடி புகுந்தார். ஸ்டூடியோவால் இளையராஜாவும் அவரால் நிர்வாகத்தினரும் தங்களை வணிகரீதியாக வளர்த்துக் கொண்டனர்.
அன்றைய காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோவை கட்டத் தொடங்கவில்லை. இளையராஜா அந்த முயற்சியை மேற்கொண்டபோது பிரசாத் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை விட்டு அவர் வெளியேறினார். ஆனால், அவர் ஆசையாகக் கட்டிய ரெக்கார்டிங் ஸ்டூடியோ பிரச்சனைக்குரிய இடமாக இருந்ததால் அது கை நழுவிப்போனது. பின்னர், அவர் தனது இசை பணிகளைச் செய்வதற்கு யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தி வந்த சாலிக்கிராமத்தில் உள்ள கலசா ஒலிப்பதிவு கூடத்தைச் சில காலம் பயன்படுத்தினார். பின்னர் போக்குவரத்து இட நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து மீடியா ஆர்டிஸ்ட் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு இடம்பெயர்ந்தார்.

‘இளையராஜா என்னும் இசைக்கலைஞன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இசைக் கோயிலாகப் பயன்படுத்தி வந்த இடத்தை எப்படி காலி செய்யச் சொல்லலாம்?’ என்கிற இளையராஜா ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு தவறானது என மேற்கண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்குகின்றனர் திரையுலகின் ஒரு பகுதியினர்.
இளையராஜா தனது இசைப் பணியை சுமார் பத்து வருட காலம் பல்வேறு ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் செய்தாலும் அவருக்கு நிறைவைத் தந்த இடம் பிரசாத் ரெக்கார்டிங் ஸ்டூடியோ தான். இதை அறிந்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீண்டும் தனது வளாகத்திற்குள், அவரது இசைப்பணியை மனநிறைவோடு தடையின்றி செய்துகொள்வதற்காக தற்போது அவர் பயன்படுத்தி வரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை பல லட்ச ரூபாய் செலவு செய்து நவீனமாகப் புனரமைத்துக் கொடுத்திருக்கிறது.
“இத்தனை தாராள மனப்பான்மையோடு நடந்து கொண்ட ஸ்டூடியோ நிர்வாகம் வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்ற முயற்சி செய்வது ஏன்?” என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு இளையராஜா இன்றுவரை பொதுவெளியில் தனது தரப்பு நியாயத்தைக் கூறவில்லை.
பிரசாத் ஸ்டூடியோ ஏன் இளையராஜாவை வெளியேற்றுகிறது?

ஸ்டூடியோ நிர்வாக வட்டாரத்திலும், தமிழ்சினிமாவில் இளையராஜாவோடு நெருங்கிய வட்டத்தில் பயணித்த பலரிடமும் உண்மையான காரணங்கள் என்ன என்ற கேள்வியை முன்வைத்தபோது, ‘இளையராஜாவின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவை. அவர் பக்கம் நியாயம் இருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டு பாரதிராஜா, பாக்யராஜ், சீமான் போன்றவர்கள் கூட்டம் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்த முயன்றது எதிர்கால சந்ததியினருக்குத் தவறான முன்னுதாரணம்’ என்கின்றனர். விளக்கமாகக் கூறுமாறு கேட்டபோது மேற்கொண்டு பேசினார்கள்.
“பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தற்போது மூன்றாவது தலைமுறை நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. சினிமா டிஜிட்டல்மயமாகி பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசாத் ஸ்டூடியோ, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் எந்த ஒரு திரைப்படமும் பிரசாத் ஸ்டூடியோவைப் பயன்படுத்தாமல் முழுமையடைவதில்லை. அந்த அளவுக்கு பிரசாத் ஸ்டூடியோ தமிழக சினிமாவில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறது. பட வெளியீட்டின்போது வியாபாரப் பற்றாக்குறை ஏற்பட்டு தயாரிப்பாளர்கள் பிரச்சினையைச் சந்திக்கின்ற போது இரவு பகல் பாராது, தங்களது பணிக்கான பணத்தைக் காலம் கடந்தும் பெற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாக விட்டுக்கொடுத்து முன்னுதாரணமாகச் செயல்பட்டு வருகிறது பிரசாத் நிர்வாகம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பிலிம் ரோலில் படம் தயாரான கால கட்டத்தில் அந்த படங்களின் ஒரிஜினல் படப் பிரதியைக் குளிரூட்டும் அறைக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும். இதை எந்த தயாரிப்பாளரும் படம் வெளியானதற்குப் பின்னால் கடைப்பிடிப்பதில்லை. பிரசாத் நிர்வாகம் தனது சொந்த பொறுப்பில் பாதுகாத்து வந்திருக்கிறது. அதனால்தான் காலம் கடந்தும் வரலாறு படைத்த நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இன்றைய தலைமுறையினருக்கு டிஜிட்டல் வடிவத்தில் கிடைத்திருக்கிறது. இத்தனை பெருமை மிக்க நிர்வாகம் சிறுபிள்ளைத்தனமாக இளையராஜா விஷயத்தில் நடந்து கொள்ளுமா” என்கின்றனர்.
தமிழகத்தில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருக்கும் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மணியான அமைச்சர் உறவினர்கள், பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியை விலை பேசி முடித்திருப்பதாகவும் அதற்கான நுழைவாயிலாக இளையராஜா தற்போது இருக்கும் இடம் இருப்பதால் காலி செய்யச் சொல்வதாகக் கூறப்படுகிற தகவலை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், இந்த வளாகத்திற்குள் வர விரும்புவதாகவும் அதனால் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும் என்பதால் காலி செய்யச் சொல்கிறார்கள். அதனால்தான் இளையராஜா இடம்பெயர மறுத்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்கிற தகவலும் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை என்று ஸ்டூடியோ நிர்வாக தரப்பில் மறுப்பதோடு, ‘திடீரென்று இளையராஜாவை காலி செய்யுமாறு நிர்வாகம் கூறவில்லை’ என்கிற உண்மை தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது என்கின்றனர். அப்படியென்றால் இந்தப் பிரச்சினை எத்தனை காலமாக இருக்கிறது என்று விசாரித்தோம்.
இடப் பிரச்சினை புதுப் பிரச்சினை இல்லையா?

இளையராஜா உச்சத்திலிருந்தபோது அங்கு நடைபெறும் இசைப் பணிகளால் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கு வருமானம் கூடியது. பட வாய்ப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் அவருக்கு மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் நிர்வாகத்துக்கு வருமானம் மிகக் குறைவாக கிடைத்ததோடு ஒரு கட்டத்தில் அதுவும் இல்லை என்று ஆகிப்போனது. இளையராஜா பயன்படுத்தி வருகிற இசைக் கூடத்துக்குச் செலவாகும் மின்சாரக் கட்டணம் மற்றும் அந்த இடத்துக்கான சொத்து வரி அளவுக்குக்கூட அந்த இடத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை. பட வாய்ப்பு குறைந்தாலும் உலகம் முழுமையும் இளையராஜா வணிக ரீதியாக நடத்துகின்ற இசைக் கச்சேரிக்கான முன்னோட்ட பணிகள் நடைபெறுவது ஸ்டூடியோவில்தான். ‘ரெக்கார்டிங் ஸ்டூடியோவை காலி செய்து கொடுங்கள் என்று இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டபோது சரி என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதற்கு கால அவகாசம் தேவை என்று அவரது தரப்பில் கேட்டுக்கொண்டபோது ஸ்டூடியோ நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், இளையராஜா காலி செய்து கொடுப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக 11 முறை கால நீட்டிப்பு கேட்டு காலம் கடத்தினார்’ என்று ஸ்டூடியோவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ‘பிரசாத் ஸ்டூடியோ மேலாளராக KRS இருந்தபோதும், அவரது ஓய்வுக்குப் பின் பொறுப்புக்கு வந்த பாஸ்கர் இருவரும் இளையராஜாவுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறார்கள். ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்திய இளையராஜா மறுபக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சரியா?’ என்பதே இளையராஜாவுக்காகப் பேசச் செல்லும் அவரது ஆதரவாளர்களிடம் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது.
இளையராஜாவுக்குத் தமிழ் சினிமா ஆதரவாக இல்லையா?

ஒரு திரைப்படம் உருவாகிறபோது அதில் இடம்பெறுகின்ற பாடல்கள் உருவாக்கம் செய்யப்படுவதற்கான அனைத்து செலவுகளும் தயாரிப்பாளரால் செய்யப்படுகிறது. இசையமைப்பாளருக்கான சம்பளமும் கொடுக்கப்பட்டு விடும். ஆனால், தன் இசை மூலம் உருவாக்கப்பட்ட திரைப்பாடல்களை வணிக ரீதியாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு அந்தப் படத்தின் இசையமைப்பாளருக்கு ராயல்டி வழங்க வேண்டுமென்று இளையராஜா சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தொடங்கியதன் விளைவாக, இவரது பாடல்களைத் தனது குரலால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாதிப்புக்குள்ளானார். ‘ராயல்டி விஷயத்தில் இளையராஜா சட்டத்தின் துணைகொண்டு தயாரிப்பாளர்களுக்கு துரோகம் இழைக்கிறார்’ என்று சிறு படத் தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியபோது அதற்கு எந்தவிதமான பதிலையும், சமரச தீர்வையும் காண்பதற்கு இளையராஜா முயற்சி செய்யவில்லை. இளையராஜா இதுபோன்ற அணுகுமுறைகளைத் தொடர்ந்த காரணத்தால் வானொலிகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்கள் ஒளிபரப்பப்படுவது குறைந்து வருகிறது. பெரும்பான்மையோர் பயன்படுத்துகிற கைபேசிகளில் இளையராஜாவின் பாடல்கள் காலர் டியூனாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதற்காக செலுத்த வேண்டிய ராயல்டி தொகை அதிகம் என்பதால் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாடல்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறது. இப்படி எல்லாத் தரப்பிலும் தனது தனிப்பட்ட குணங்களால் அவர் செய்யும் செயல்கள்தாம் இத்தனை பிரச்சினைகளுக்குக் காரணம். இப்படி இளையராஜாவால் வாழ்ந்ததாக சொன்ன திரையுலகமே, இப்போது அவரால் பாதிக்கப்படுகிறோம் என்று பேசுகின்றனர். தங்களுக்கு இளையராஜா பதில் சொல்லாமல், சட்டத்தின் துணைகொண்டு இழைத்த அநீதியே திரும்ப அவருக்கு நடக்கிறது” என்கிறது அவரிடம் இக்குறைகளை சொல்ல இயலாத அவரது நட்பு வட்டாரம்.
இளையராஜா தரப்பின் வாதம் என்ன?
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக இளையராஜா தரப்பின் கருத்தை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்தபோது ‘எதுவாக இருந்தாலும் இளையராஜா மட்டுமே பதில் கூற முடியும். வேறு யாரும் என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூறுவது இயலாத காரியம்’ என்று கூறிவிட்டனர்.

இருப்பினும் இந்தப் பிரச்சனையில் அவருக்கு உதவியாக இருந்து வருபவர்கள் சிலர் ஆதங்கம் தாங்காமல் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் சிலவற்றைக் கூறினர். “இளையராஜாவால் பிரமாண்டமாக ரிக்கார்டிங் ஸ்டூடியோ கட்ட முடியும். அவருடைய முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்குப்பின் அப்படியொரு முயற்சியை மேற்கொள்ள அவர் விரும்பவில்லை. ‘சொந்தமாக ஸ்டூடியோ கட்டக்கூடிய பிராப்தம், ஆண்டவன் நமக்கு வழங்கவில்லை’ என்கிற மனநிலைக்கு அவர் வந்து விட்டார். இருக்கும் வரை பிரசாத் வளாகத்தில் இருப்போம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார். இளையராஜாவைப் பொறுத்தவரை அவரது திரை இசைப் பயணத்தில் அவருக்கு சர்வதேச புகழும், இந்திய அளவிலான விருதுகள், பட்டங்களும் கிடைத்தன. ஆன்மிகத்தில் அழுத்தமான ஈடுபாடுகொண்ட இளையராஜா, பிரசாத் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை இசைக் கோயிலாகவே தனக்குள் வசீகரித்துக் கொண்டார். அதிலிருந்து அவரால் மீண்டு வர இயலவில்லை. பாரம்பரியமிக்க பிரசாத் நிர்வாகம் காலம் கடந்தாவது இதைப் புரிந்து கொள்வார்கள் என்று பொறுமை காத்தார். ஆனால் அதிரடியாக தனது ஸ்டூடியோ முன்பு தேவையற்ற பொருட்களைக் குவித்து தனக்கு இடையூறு செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தார் என்பதே உண்மை. தன்னுடனும், தன் புகழுடனும் நேருக்கு நேர் மோதுவதாக நினைத்தார். அதன் காரணமாகத்தான் நீதிமன்றத்துக்குச் செல்லும் முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளானார். சட்டப்படி, தார்மிக அடிப்படையில் இடத்துக்கு உரியவர்கள் கேட்கிறபோது காலி செய்து கொடுக்க வேண்டியது இருப்பவர் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கு புகழும் பெருமையும் சேர்த்த இசைக்கலைஞனின் மன உணர்வுக்கும், நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வது, சாதனையாளனை அவன் வாழும் காலத்தில் கௌரவப்படுத்துவதாக இருக்கும் அல்லவா?” என்று இளையராஜா தரப்பினர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: